Monday, June 14, 2021

இயேசுவில் நிலைத்திருத்தல்

வாசிக்க: 2 இராஜாக்கள் 19. 20; நீதிமொழிகள் 14; யோவான் 15: 1-17

வேத வசனம்: யோவான் 15: 4. என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.

கவனித்தல்: சமீப காலங்களில், நன்கு அறியப்பட்ட கிறிஸ்தவ தலைவர்களின் வீழ்ச்சி மற்றும் விசுவாச மறுதலிப்பு பற்றிய அதிர்ச்சியான செய்தியால் உலகமெங்கிலும் உள்ள அனேக கிறிஸ்தவர்கள் குழம்பினர். கிறிஸ்தவர்களிடையே பல கேள்விகளை இது எழுப்பியது: இப்படிப்பட்ட பெரிய தேவ மனிதர்களே கிருபையில் இருந்து விழக் கூடுமானால், வேதாகமத்தைப் பற்றி அதிகம் அறியாத சராசரி கிறிஸ்தவனின் நிலை என்ன?  உலகத்தின் கவர்ந்திழுக்கும் வலை மற்றும் கண்ணிகளில் இருந்து ஒருவர் தன்னை சுத்தமாகக் காத்துக் கொள்வது எப்படி? இங்கே, தன்னில் நிலைத்திருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக இயேசு அர்த்தம் நிறைந்த ஒரு உருவகமான ஒப்பிடுதலைப் பகிருந்து கொள்கிறார். ஒரு செடியில் கொடியானது இணைந்து இருக்கும் வரையிலும், அது கனிகளைக் கொடுக்கும். 

கொடி அல்லது கிளையின் அளவு  எவ்வளவு பெரிது என்பது முக்கியமானது அல்ல, ஆனால் அது ஒரு செடியுடன் அல்லது மரத்துடன் இணைந்திருக்கிறதா அல்லது தனித்திருக்கிறதா என்பது மிகவும் முக்கியமானது ஆகும். அவரில் நிலைத்திருக்கும்படி இயேசு நம்மிடம் கேட்கும்போது, அவ்ர் நம்மில் நிலைத்திருப்பது போல, நாமும் அவரில் நிலைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறார். நாம் இயேசுவைப் பற்றி எதையும் தெரிந்து கொள்வதற்கு முன்பே,  அவர் நம்மை முதலாவது நேசித்தார். யோவான் 15:4-10 வரை உள்ள வசனங்களில், 11 முறை “நிலைத்திருத்தல்” பற்றிய வார்த்தை வருகிறது. இயேசுவில் நிலைத்திருப்பதற்கு அவர் கொடுக்கிற முக்கியத்துவத்தைப் பாருங்கள். ஒரு சாதாரண மனிதரும் புரிந்து கொள்ளும் மொழியில் இயேசு மாபெரும் உண்மைகளை விளக்குகிறார். இயேசு அவரில் நிலைத்திருத்தலால் வரும் நன்மைகளையும், அவரில் நிலைத்திராவிட்டால் வரும் ஆபத்துகளையும் பற்றி சொல்கிறார். அதிக கனி கொடுக்கவும், நம் ஜெபங்களுக்குப் பதில்களைக் காணவும், நாம் இயேசுவில் நிலைத்திருப்பது அவசியம். நாம் இயேசுவில் நிலைத்திரா விட்டால், நாம் கனிகளை எதிர்பார்க்க முடியாது, மற்றும் எதையும் செய்யவும் முடியாது. அவர் இல்லாமல் நாம் எதையும் செய்ய முடியாது.

 இயேசுவில் நிலைத்திருத்தல் என்பது நாம் அவரை அன்பு செய்து அவர் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிவதைக் குறிப்பதாக இருக்கிறது. அவை ஒன்றை விட்டு ஒன்று பிரிக்க முடியாதவை. சுத்தம் செய்யப்படுவதற்கு அனுமதிக்கிற கிளைகள் வளர்ந்து, அதிக கனி கொடுத்து நீண்ட நாள் வாழ்கின்றன. அது போல, நாம் இயேசுவில் நிலைத்திருந்து, அவருக்குப் பிரியமில்லாத காரியங்களை அப்புறப்படுத்தும்படி அவரை அனுமதிப்பது ஆபத்துகளில் இருந்து நம்மைக் காத்து, அழிந்து போகவிடாமல்  நம்மைப் பாதுகாக்கிறது. அவர் நம்மில் நிலைத்திருப்பது போல, நாம் அவரில் நிலைத்திருக்க வேண்டும் என இயேசு நம்மை அழைக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, நம் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் பெறவும், மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கவும் அவரில் நிலைத்திருத்தல் நமக்கு உதவுகிறது.

பயன்பாடு: நான் காட்டுச் செடியின் பயனற்ற கிளைகளில் ஒன்றாக இருந்தேன். மெய்யான திராட்சைச் செடியாகிய இயேசு என்னை எடுத்து, அவருடன் என்னை ஒட்டி வைத்திருக்கிறார். அவருடைய அன்பு மற்றும் இரக்கங்களை நினைத்து நான் அவரில் நிலைத்திருக்கிறேன். அவரிடம் இருந்து, என் வாழ்க்கைக்குத் தேவையான ஊட்டச்சத்துள்ள உணவை நான் தொடர்ந்து பெறுகிறேன். என்னால் ஏதாகிலும் செய்யக் கூடும் எனில், அது நான் அவரில் நிலைத்திருப்பதினால் மாத்திரமே. அவரில்லையேல், நான் இந்த கறைபட்ட உலகில் உயிர்வாழவே முடியாது. அவர் என்னை சுத்தம் செய்து ஒழுங்குபடுத்தி, தேவ மகிமைக்காக அதிக கனிகொடுக்கும்படி வளரச் செய்கிறார். அனைவருக்கும் பயனுள்ள ஒருவராக நான் இருப்பதற்கு உதவும் அவருடைய கிருபையுள்ள அன்பிற்கு நான் பெரும் நன்றி உள்ளவனா(ளா)க இருக்கிறேன். என் அலுவல் நிறைந்த வாழ்க்கை, சபை நடவடிக்கைகள், மற்றும் பல்வேறு ஊழியப் பொறுப்புகள் இயேசுவில் நிலைத்திருப்பதை தடுத்து நிறுத்துவதற்கு நான் இடம் கொடுக்கக் கூடாது. 

ஜெபம்: இயேசுவே, என்னில் நிலைத்து இருக்கும் உம் அன்பிற்காக உமக்கு நன்றி. நான் உம்மில் நிலைத்திருக்கையில், உம்மை நேசிக்கவும், உம் கற்பனைகளுக்கு கீழ்ப்படியவும் எனக்கு உதவும். உம் உதவி இல்லாமல் நான் இதைச் செய்ய முடியாது. நான் எப்பொழுதும் உம்மைச் சார்ந்திருக்கவும், உம்மில் நிலைத்திருக்கவும் உதவியருளும். பிதாவின் மகிமைக்காக வாழ்வதற்கு நான் இதைக் கேட்கிறேன். ஆமென்.

 - அற்புதராஜ் சாமுவேல்

+91 9538328573

Day - 165

No comments: