Saturday, June 5, 2021

எலியாவின் தேவன் எங்கே?

வாசிக்க:  2 இராஜாக்கள் 1, 2 ; நீதிமொழிகள் 5 ; யோவான் 10: 22-42

வேத வசனம்: 2 இராஜாக்கள் 2: 13. பின்பு அவன் எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையை எடுத்துத் திரும்பிப்போய், யோர்தானின் கரையிலே நின்று,
14. எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்; தண்ணீரை அடித்தவுடனே அது இருபக்கமாகப் பிரிந்ததினால் எலிசா இக்கரைப்பட்டான்.

கவனித்தல்: எலியாவை என்றாவது ஒருநாள் தேவன் தன்னை விட்டு எடுத்துக் கொள்வார் என்பதை எலிசா அறிந்திருந்தார். ஆட்சியாளர்களும் முழு தேசமும் பாகாலை வணங்கிக் கொண்டிருந்த போது, தேவனுக்கு உத்தமமாக ஊழியம் செய்த ஒரு பெரிய தீர்க்கதரிசியாக எலியா இருந்தார். கர்த்தரே தெய்வம் என்று சொல்லி ஜனங்கள் தேவனை ஆராதிக்க அவர் சவாலிட்டார். தேவனுடைய வல்லமையை அவர் நிரூபித்ததின் நிமித்தம், பாகால் தீர்க்கதரிசிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். எலியா ஒரு சாதாரணமான மனிதராக இருந்தாலும், தன் ஊக்கமான ஜெபங்களுக்கு நன்கறியப்பட்ட ஒருவராக இருந்தார். எலியாவின் எளிய வாழ்க்கை, வல்லமையான தீர்க்கதரிசன ஊழியம், அற்புதங்கள் மற்றும் கர்த்தருடனான உத்தம வாழ்க்கை ஆகிய அனைத்தும் எலிசாவை பாதித்திருக்கும். அவர்கள் யோர்தான் ஆற்றை அற்புதமாகக் கடந்த பின்பு, எலியாவை தேவன் திடீரென எடுத்துக் கொண்டார். எலியா எடுத்துக் கொள்ளப்படுவதை எலிசா பார்த்தார். அப்படியானால், அவர் கேட்டபடி எலியாவினுடைய ஆவியின் வரத்தை இரட்டிப்பாய் பெற்றுக் கொள்வார். உலக ஆசீர்வாதங்கள் அல்லது உடைமைகளை அவர் கேட்கவில்லை என்பதைக் கவனியுங்கள். எலியாவின் ஆவியின் வரத்தின் இரட்டிப்பான பங்கை அவர் பெற விரும்பினார். எலியா அவரை விட்டு எடுத்துக் கொள்ளப்பட்ட பின், எலியாவின் சால்வையை எலிசா எடுத்துக் கொண்டான். எலியா செய்த ஊழியத்தை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற அவனுடைய விருப்பத்தை இது காட்டுகிறது. எலியாவின் பிரிவுக்காக அவர் துக்கப்பட்டாலும், அவர் திரும்பவும் யோர்தான் நதிக் கரைக்கு வந்தார். 

“எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே” என்று எலிசா சொன்ன போது, அது அவருடைய இருதயத்தின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளின் வார்த்தைகள் அல்ல. மாறாக, அது அவருடைய விசுவாச அறிக்கை ஆகும்: அவருடைய எஜமானாகிய எலியா அவருடன் இனி இருக்கப் போவதில்லை என்றாலும், எலியாவின் தேவன் அவருடன் இன்னமும் இருக்கிறார். எலியா தன் ஊழியத்தை விட்டுச் சென்ற இடத்தில் இருந்து எலிசா அதைத் தொடர்ந்தார். இப்படியாக, எலியா தன் கடைசி அற்புதம் நிகழ்த்திய இடமானது எலிசாவின் முதல் அற்புதம் நிகழ்ந்த இடமானது. அது எலிசாவின் 60 ஆண்டு கால தீர்க்கதரிசன ஊழியத்தின் ஆரம்பமாக இருந்தது. 

இந்த உலகத்தில், நம் எல்லாருக்குமே ஒரு முடிவு உண்டு. பெரும் தலைவர்கள், தேவ ஊழியர்கள் மற்றும் தேவ மனிதர்களும் ஒரு நாள் தங்கள் ஓட்டத்தை முடித்துக் கொள்வார்கள். நமக்கு நெருக்கமான ஒருவரை தேவன் எடுத்துக் கொள்ளும் போது, நாம் வேதனைப்பட்டு, அந்த துக்கத்தில் இருந்து வெளிவருவது மிகக் கடினமானதாக இருக்கக் காண்கிறோம். இங்கே,கர்த்தருடைய பெரிய ஊழியக்காரர்களுடன் இருந்தது போலவே தேவன் நம்முடனும் இருக்கிறார் என்பதை எலிசாவின் கதை நமக்கு நினைவுபடுத்துகிறது. தேவனுடைய ஊழியத்தை தொடர்ந்து செய்வதற்கு அபிசேக ஆடையை எடுத்துக் கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா? எலியாவிடம் இருந்து அரிதான ஒரு காரியத்தை எலிசா கேட்டார் என்பது உண்மைதான் என்றாலும், தேவன் எலிசாவுக்கு உண்மையாக இருந்து, அவருடைய வாழ்வில் அதை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை நிறைவேற்றினதைப் பற்றி வேதாகமம் சாட்சி கூறுகிறது. “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்று இயேசு சொல்கிறார் (மத்.28:20). நாம் அவரில் நம்பிக்கையுடன் இருக்க முடியும். ஏனெனில், “இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்” (சங்.48:11). 

பயன்பாடு: எலிசாவின் சூழ்நிலைக்கு ஒத்த ஒரு நிலையை,  நான் கடந்து செல்லும்போது அல்லது எதிர்கொள்ள நேரிடும் போது, அதாவது என் இருதயத்திற்கும் வாழ்க்கைக்கும் மிகவும் நெருக்கமான ஒருவரை இழக்கும்போது, நான் தேவன் மீது என் விசுவாசத்தை வைக்க வேண்டும்.  எலியாவின் தேவன் மேல் உள்ள விசுவாசத்தை எலிசா வெளிப்படுத்தியது போல, நான் தேவனையும் அவருடைய வல்லமையையும் நம்ப வேண்டும்.  பெரிய தீர்க்கதரிசிகள் மற்றும் தலைவர்கள் மூலமாக வல்லமையான செயல்களைச் செய்த தேவன், எனக்கு போதுமானவராக இருக்கிறார்.  நான் தேவனை நம்பி, அவருக்கு முதலிடம் கொடுக்கும் போது, அவர் எனக்குள், என் மூலமாக ஆச்சரியமான காரியங்களைச் செய்கிறார். நான் தேவனுடன் இணைந்து முன்செல்ல ஆயத்தமாக இருக்கிறேனா? அல்லது பிரிவு மற்றும் இழப்பு பற்றிய துக்கத்துடன் போராடிக் கொண்டிருக்கிறேனா? நான் எவ்வளவு சீக்கிரமாக தேவனிடம் வருகிறேனோ அவ்வளவு சீக்கிரமாக அவருடைய மகிமைக்காக நான் தொடர்ந்து வாழத் தேவையான அவருடைய ஆறுதல் மற்றும் வல்லமையைக் கண்டு கொள்வேன்.  எலியாவின் தேவன் எங்கேயோ அல்ல, எனக்குள் இருக்கிறார்.  

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, நீர் எப்பொழுதும் என்னுடன் இருக்கிறீர் என்ற நித்திய உண்மையை நினைவு படுத்துவதற்காக உமக்கு நன்றி. நீர் என்னை விட்டு விலகுவதில்லை, என்னைக் கைவிடுவதுமில்லை. ஆண்டவரே,  நான் எப்போதும் உம்முடன் இருக்க எனக்கு உதவும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல் +91 9538328573

Day - 156

No comments: