Saturday, June 19, 2021

கொடுப்பதில் நாம் தேவனை மிஞ்ச முடியாது

வாசிக்க: 1 நாளாகமம் 5, 6; நீதிமொழிகள் 19; யோவான் 17: 20-26

வேத வசனம்: நீதிமொழிகள் 19: 17. ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.

கவனித்தல்: உலகின் மற்ற மதம் மற்றும் நம்பிக்கையை சார்ந்தவர்களைக் காட்டிலும் அதிகமாக கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் தாராளமாக தானதர்மங்களைச் செய்வதாக அனேக புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது, கிறிஸ்தவர்கள் ஏறக்குறைய இரண்டு மடங்கு அளவு  தான தர்மங்களில் செலவிடுகிறார்கள். கிறிஸ்தவ தான தர்மங்களை பாராட்டுவதற்கு அல்லது குறை கூறி குற்றம் சாட்டுவதற்கு ஜனங்கள் பல்வேறு காரணங்களைக் கூறுகிறார்கள்.  ஆயினும், தேவையுள்ள ஜனங்களுக்கு தேவனுடைய அன்பைக் காண்பிப்பதற்கான ஒரு வழியே தான தர்மங்கள் என்று கிறிஸ்தவர்களாகிய நாம் விசுவாசிக்கிறோம்.  உண்மையில், அந்நியர், விதவை, அனாதை, மற்றும் தரித்திரர் ஆகிய தேவை உள்ள குரலற்றவர்களைக் குறித்த தேவனுடைய தனிப்பட்ட கரிசனை மற்றும் கவனத்தைப் பற்றிச் சொல்கிற வசனங்கள் வேதாகமத்தில் அனேகம் உண்டு (உதாரணமாக, யாத்.22:21-27; சங்.68:5; 82:3,4; கலா.2:10; யாக்கோபு 1:27). நாம் ஏழைகளுக்கும் தேவை உள்ளவர்களுக்கும் உதவி செய்யும்போது, நம் அன்பின் செயலை தேவன் நாம் அவருக்குக் கொடுக்கும் ஒரு பரிசு ஆக கருதுகிறார். “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று இயேசு சொன்னார் (மத்.25:40). நீதிமொழிகள் 14:21, 31ன் படி, ஏழைக்கு இரங்குகிறவன் பாக்கியவானாகவும், தன் செயல்களினால் தேவனைக் கனம் செய்கிறவனாகவும் இருக்கிறான்.  ஏழைகளை இந்த உலக மக்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து, நிராகரித்து, அவர்களுக்கு உதவி செய்ய மறுப்பு தெரிவிக்கலாம். ஆனால், தேவன் அவர்களைக் கைவிடாமல், அவர்கள் மீது தன் சிறப்பான கவனத்தைச் செலுத்துகிறார். ஏழைகளுக்கு இந்த உலகின் ஆடம்பரமான காரியங்களைத் கொடுக்க வேண்டும் என தேவன் நம்மிடம் எதிர்பார்க்கவில்லை. மத்தேயு 25ல் இயேசு சொன்ன உவமையின்படி,  வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகளான உணவு, நீர், உடை, உறைவிடம் மற்றும் கரிசனை ஆகியவற்றில் இருந்து நம் அன்பைக் காண்பிக்க துவங்க வேண்டும் என தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார். 

நாம் ஏழைகளுக்காக ஏதாவது செய்யத் துவங்கும் போது, தேவன் நமக்கு ஈவாக பரிசளிக்கத் தவறுவதில்லை. நாம் ஏழைகளுக்குக் கொடுப்பதைக் காட்டிலும் அதிகமாக அவர் நமக்குக் கொடுக்கிறார். மேலும், நாம் ஏழைகளிடம் நம் அன்பையும் தயவையும் காண்பிக்கும்போது, தேவன் அவருடைய சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் நமக்கு தருகிறார். சிலர் தரித்திரருக்குக் கொடுப்பதை பொருளாதார ஆசீர்வாதத்தின் ஒரு இரகசியமாகக் கருதுகிறார்கள். ஆனால், அது அனேகரை ஆசீர்வதிக்கிறதற்கான ஒரு இரகசியம் ஆகும். நாம் கொடுத்தல் மற்றும் பெறுதல் என்ற சுழற்சியில், நாம் ஆண்டவரிடம் இருந்து ஏராளமான ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம். இப்படியாக, நம் தகுதியைக் காட்டிலும் அதிகமானவர்களுக்கு நாம் ஆசீர்வாதமாக இருக்கும்படி இது நம்மை பலப்படுத்துகிறது. கொடுப்பதில் நாம் தேவனை ஒருபோதும் மிஞ்ச முடியாது. நம் அன்பின் செயலுக்கு கடனாளியாக தேவன் ஒருபோதும் இருப்பதில்லை. நம் ஏழைகளுக்குக் கொடுப்பதைக் காட்டிலும் அதிக ஈவுகளை தேவன் நமக்கு அருளுகிறார். 

பயன்பாடு:  நான் ஏழைகளைக் காணும்போது, நான் அவர்களுடைய தேவைகளுக்குக் குரல் கொடுத்து, அவர்கள் வாழும் உரிமையை பாதுகாக்க வேண்டும்.  “என்னால் இதைச் செய்ய முடியாது” என்று கூறி நான் கஞ்சத்தனமாக இருக்கக் கூடாது. தேவனுடைய பார்வையில் தேவை உள்ளவர்களைக் காண்பதற்கு நான் கற்றுக் கொண்டு, என்னால் இயன்றதை செய்ய நான் ஆயத்தமுள்ளவனாக இருக்க வேண்டும். நான் ஏழைகளுக்கு எவ்வளவு கொடுக்கிறேன் என்பதை அல்ல, கொடுக்கிற என் இருதயத்தை தேவன் காண்கிறார்.  நான் உற்சாகமாக கொடுக்கிறவராக இருக்க வேண்டும் என தேவன் விரும்புகிறார் (2 கொரி.9:6,7). 

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, தேவை உள்ளவர்களின் தேவைகளைப் புரிந்து கொள்ளக் கூடிய ஞானமுள்ள இருதயத்தை எனக்குத் தாரும். ஆண்டவரே, வசதி வாய்ப்பற்ற வறியவர்களுடன் உம் ஆசீர்வாதங்களைப் பகிர்ந்து கொள்ள எனக்கு உதவும். இயேசுவே, என் கண்களை உம் மீது நான் எப்பொழுதும் வைக்க எனக்கு அருளும். நீர் நேசிக்கிறது போலவே ஏழை மக்களை நான் நேசிக்க எனக்கு உதவியருளும். ஆமென்

 - அற்புதராஜ் சாமுவேல்

+91 9538328573

Day - 170

No comments: