Saturday, June 26, 2021

தேவ இரகசியங்களைக் கண்டடைதல்

வாசிக்க:  1 நாளாகமம் 17, 18; நீதிமொழிகள் 25; யோவான் 20: 19-31

வேத வசனம்: நீதிமொழிகள் 25: 2. காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை.

கவனித்தல்: தேவன் மனித அறிவிற்கு அப்பாற்பட்டவர், அறியப்பட முடியாதவர் என நினைத்துகொண்டு, அவர் மனிதனுடன் தொடர்புடைய விஷயங்களைக் குறித்து கவலைப்படுவதில்லை என்று அனேகர் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே, அவர்கள் தேவனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். இங்கே, “காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை” என சாலொமோன் எழுதுகிறார். தேவன் மனிதர்களிடம் இருந்து காரியங்களை மறைக்கிறாரா?  “ஆம்” மற்றும் “இல்லை” என்று நாம் சொல்லக் கூடும். தேவனுடைய மகத்துவமும், புத்தியும் எவராலும் “ஆராய்ந்து முடியாதது” என்று வேதம் சொல்கிறது  (சங்.145:3; ஏசாயா.40:28). ஆயினும், மனிதர்களுக்கு அறியப்படாத தெய்வமாக இருப்பதை தேவன் விரும்புவதில்லை. உலக தோற்ற முதல், தேவன் தம்மை பலவிதங்களில் வெளிப்படுத்தி வருகிரார்; நாம் எந்த சாக்குப் போக்கையும் சொல்ல இடமில்லை (சங்.19:1, ரோமார்.1:20). தேவன் சில விசயங்களை நம்மிடம் இருந்து மறைக்கிறார் என்பது உண்மைதான். குறிப்பாக, நம் எதிர்காலத்தைக் குறித்த காரியங்களை அவர் மறைக்கிறார் (உபா.29:29). ஆயினும், நமது நன்மைக்காகவே அக்காரியங்களை நம்மிடம் இருந்து மறைக்கிறார். “வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளிக்குவராத மறைபொருளுமில்லை” என்று இயேசு சொன்னார் (லூக்கா 8:17).  சத்தியத்தின் தன்மை என்னவெனில், அது வெளிச்சத்துக்கு வருகிறதாகவும், தேடுகிற அனைவருக்கும் கிடைக்கக் கூடியதாகவும் இருக்கிறது. 

ஒரு ராஜா உண்மையைத் தேடிக் கண்டுபிடித்து, நீதியை நிலைநிறுத்தும்போது, அது அவனுக்கு மேன்மையாக இருக்கிறது (1 இராஜா. 3:16-28). கிறிஸ்தவர்களாகிய நாம், “ தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும்,” மற்றும் தேவனுக்கு முன்பாக “ராஜாக்களும் ஆசாரியர்களும்” ஆக இருக்கிறோம் என வேதம் சொல்கிறது. (1 பேதுரு 2: 9; வெளி.1:6). எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் தேவனுடைய பிள்ளைகள் ஆக இருக்கிறோம்.“கேளுங்கள்,” “தேடுங்கள்” மற்றும் “தட்டுங்கள்” என இயேசு நமக்குக் கற்பித்திருக்கிறார் (மத்.7:7,8; லூக்கா.11:9,10). நாம் தேவனை முழு இருதயத்தோடும் தேடும்போது, அவரைக் கண்டடைய முடியும்.  (எரேமியா 29:13). நாம் ஒன்றை தேடிக் கண்டடையும்போது, அக்காரியத்தின் மதிப்பை அறிந்து கொள்ளும்படியாகவே தேவன் அதை நம்மிடம் இருந்து மறைக்கிறார். 

பயன்பாடு: என் தேவன் தம் சிருஷ்டி மற்றும் தம் வார்த்தை மூலமாக தன்னை வெளிப்படுத்துகிறார். ஜாக்கிரதையாக இயேசுவைப் பின்பற்றும் நான், தேவன் எனக்கென வைத்திருக்கிறவைகளைக் கண்டு கொள்ள அவரைத் தேட வேண்டும். என் முழு இருதயத்தோடு நான் தேவனைத் தேடும்போது, அவரைக் கண்டடைய எனக்கு உதவுகிறார். தேவனுடைய பிள்ளையாகிய நான், தேவனுடைய மறைவான பொக்கிஷங்களைக் கண்டடையும்போது மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். 

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, உம் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக உம்மை வெளிப்படுத்துகிறதற்காக நன்றி. அன்பின் ஆண்டவரே, என் வாழ்க்கைக்கான உம் சித்தத்தை அறிந்து, அதன் படி வாழ எனக்கு உதவியருளும். ஆமென்.

 - அற்புதராஜ் சாமுவேல்

+91 9538328573

Day - 176

No comments: