Sunday, June 13, 2021

இயேசுவின் பிரத்யேகமான கூற்று

வாசிக்க: 2 இராஜாக்கள் 15, 16; நீதிமொழிகள் 12; யோவான் 14: 1-14

வேத வசனம்: யோவான் 14: 6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

கவனித்தல்: இந்த உலகத்தில் 400க்கும் அதிகமான மதங்கள் இருந்தாலும், உலக மக்கள் தொகையில் 75%க்கும் அதிகமானோர் ஐந்து முக்கியமான பெரிய மதங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இந்திய தேசமானது பல மதங்கள் தோன்றிய ஒரு இடமாகவும், அதன் மத ரீதியான பன்முகத்தன்மைக்காகவும் அறியப்பட்டிருக்கிறது. ”மதங்கள் நதிகளைப் போன்றவை; முடிவில் அவை எல்லாம் கடலிலேயே கலக்கின்றன” என்று தத்துவ ஞானிகள் மற்றும் ஆசிரியர்கள் கூறுகிறார்கள். வேறு விதமாகச் சொல்வதானால், நீங்கள் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுகிறவர்களாக இருந்தாலும், முடிவில் ஒரே கடவுளையே சென்றடைவீர்கள் என்பது ஆகும். பல்வேறு மதங்கள் நிறைந்த, மத ரீதியாக பன்முகத்தன்மை நிறைந்த இந்த உலகில், ஒரு கிறிஸ்தவர் “இயேசு மட்டுமே வழி” என்று சொல்லும்போது, அதை அபத்தமானதாகவும், கிறிஸ்தவரல்லாதோர் மீது செலுத்தும் இறையியல் வன்முறை என்றும் ஜனங்கள் நினைக்கிறார்கள். கடவுளிடம் செல்வதற்கு இயேசுவும் ஒரு வழி அல்லது வழியாக இருக்கக் கூடும் என்று எவராகிலும் சொன்னால், அனேகர் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டு, இயேசுவை தங்கள் கடவுளர்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்கின்றனர். இயேசுக் கிறிஸ்துவைப் பற்றிய கிறிஸ்தவர்களின் நம்பிக்கையானது கிறிஸ்தவர்களின் சொந்த கண்டு பிடிப்பு அல்ல. நாம் இங்கு பார்ப்பது போல, இயேசு தாமே, “நானே வழி... என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று சொல்கிறார். இந்த கூற்றில் என்ன விசேஷம் இருக்கிறது?

யோவான் 14:6 இயேசு “நானே” என்று கூறும் ஆறாவது கூற்றை நம் முன் வைக்கிறது. இயேசு “நானே” என்று சொல்லும் ஏழு வாக்கியங்களும் ஜீவன் அல்லது வாழ்க்கையுடன் தொடர்புடையதாக இருப்பது கவரக் கூடியதாக இருக்கிறது. ஒரு சாதாரண மனிதர் இப்படிப் பட்ட ஒரு துணிச்சலான கூற்றை சொல்ல முடியாது. “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்று இயேசு சொல்கிறார். அந்தியோகியாவில் இயேசுவைப் பின்பற்றுபவர்களை கிறிஸ்தவர்கள் என்று மற்றவர்கள் அழைக்க ஆரம்பிப்பதற்கு முன்பு, ஆதிச் சபை கிறிஸ்தவர்கள் தங்களை “மார்க்கத்தார்” (அல்லது வழியைச் சேர்ந்தவர்கள்) என்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள் (அப்.9:2). இயேசு “கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவர்” என்று யோவான் குறிப்பிடுகிறார். அவர் தேவனுடைய சத்தியத்தின் முழு உருவமாக இருக்கிறார். அவரே ஜீவனாக இருக்கிறார். உலக வரலாற்றில், “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்று இதுவரை எவரும் கூறியதில்லை. ஏனெனில், அவர்களெல்லாரும் சாதாரண மனிதர்களே. அவர்கள் அனைவருமே, தங்களை அல்ல, வேறு ஏதோ ஒன்றையே வழி, சத்தியம், மற்றும் ஜீவன் என்று காட்டினார்கள். இயேசு மட்டுமே தேவனிடத்தில் இருந்து வந்தவர், தேவனாக இருக்கிறவர். ஆகவே, அவர் மட்டுமே ஜனங்களை தேவனிடம் கொண்டு சேர்க்க முடியும். வேறு வழி எதுவும் கிடையாது. இயேசுவின் பிரத்யேகமான கூற்று குறுகிய மனப்பான்மையுடனானது அல்ல. மாறாக இது சத்தியத்தை வெளிப்படுத்துகிறது, அதாவது அனைத்து மனிதர்களும் இயேசு கிறிஸ்து மூலமாக நித்திய வாழ்வைப் பெற முடியும் என்ற தேவனுடைய அன்பைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்துகிறது. ஜனங்கள் தேவனை நோக்கி வருவதைக் கட்டுப்படுத்துவதோ அல்லது தடுத்து நிறுத்துவதோ இயேசு தன்னைப் பற்றி சொன்ன கூற்றின் நோக்கம் அல்ல. மாறாக, அனைவரும் தங்கள் நேரம், சக்தி, மற்றும் தங்கள் வாழ்க்கையை வீணாக்காமல், எளிதாக தேவனிடம் வரவேண்டும் என இயேசு விரும்புகிறார்.

பயன்பாடு: இயேசுவே வழி என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் என்னை தம் வெளிச்சத்தில் நடத்தி, தம் ஜீவனை எனக்கு அளிக்கிறார். என் வாழ்வின் அனைத்து அடிமைத்தனங்களில் இருந்தும் அவருடைய சத்தியம் என்னை விடுவிக்கிறது. இயேசுவின் மூலமாக, நான் அனுதினமும் என் வாழ்வில் தேவனுடனான உறவில் மகிழ முடியும். 

ஜெபம்: இயேசுவே, பிதாவிடம் செல்வதற்கான வழியைக் காண்பிப்பதற்காக நன்றி. என் சுய பலத்தில் நான் இந்த பரலோகப் பாதையில் நடக்க முடியாது. ஆண்டவரே, இந்தஆன்மீக வாழ்வில் உம் வழிநடத்துதல் மற்றும் கிருபை எனக்குத் தேவை. என் வாழ்நாள் முழுவதும் உம் வழியில், உம் சத்தியத்தில் நடக்க எனக்கு உதவும். ஆமென்.

 - அற்புதராஜ் சாமுவேல்

+91 9538328573

Day - 163

No comments: