Sunday, June 27, 2021

நீங்கள் இயேசுவை நேசிக்கிறீர்களா?

வாசிக்க: 1 நாளாகமம் 21, 22; நீதிமொழிகள் 27; யோவான் 21: 15-25

வேத வசனம்: யோவான் 21: 17. மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.


கவனித்தல்: யோவான் நற்செய்தி நூலில் இயேசுவுக்கும் மற்றவர்களுக்கும் இடையே நிகழ்ந்த சுவராசியமான மற்றும் ஆழமான பல  உரையாடல்களைக் காணலாம்.  இங்கே, இயேசுவின் கடைசி உரையாடல்களில் ஒன்றை நாம் காண்கிறோம்; அதில் இயேசுவைச் சேவிப்பதற்குத் தேவையான முக்கியமான செய்தியை புரிந்து கொள்ள இயேசு சீமோன் பேதுருவுக்கு உதவினார். “நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா” என்று சீமோன் பேதுருவிடம் இயேசு  திரும்பத் திரும்ப கேட்ட போது, சீமோன் பேதுருவின் மனதில் அது பலவிதக் கேள்விகளை எழுப்பியிருக்கும். பேதுரு “துக்கப்பட்டார்” என்பது வெளிப்படையாக தெரிகிறது. “நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா” என்ற ஒரே கேள்வியை இயேசு ஏன் மூன்று முறை கேட்டார் என்பதற்கு வேத அறிஞர்கள் பல விளக்கங்களைக் கொடுக்கிறார்கள்: சீமோன் இயேசுவை மூன்றுமுறை மறுதலித்திருந்த படியால், அவனை மறுபடியும் சீடனாக நிலை நிறுத்தும்படி இயேசுவின் மீது அவன் கொண்டிருந்த அன்பையும் விசுவாசத்தையும் உறுதிப்படுத்தும்படி அப்படி செய்தார்; ஒரு அற்புத மீன் பிடிப்புக்குப் பின் சீமோன் பேதுருவை தன்னைப் பின்பற்றும்படி அழைத்தது போல (லூக்கா 5),  இங்கே, அது போன்ற ஒரு மீன்பிடித்தல் சம்பவத்திற்குப் பின், பேதுருவின் அழைப்பை மறுபடியும் உறுதிப்படுத்தி தன் சீடராக திரும்பவும் நிலை நிறுத்துகிறார்.  

கிரேக்க மொழியில், இந்த உரையாடலில், agapaó (அகாபே, தேவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான நிபந்தனையற்ற உயரிய நிலை அன்பைக் குறிக்கும் சொல்) மற்றும் philo (சகோதர அல்லது நட்பு ரீதியான அன்பைக் குறிக்கும் சொல்), என்ற இரண்டு வார்த்தைகள்பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இயேசு முதல் இரண்டு முறையும் அகாபே என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்; பேதுரு மூன்று முறையும் சகோதர சிநேகத்தைக் குறிக்கும் வார்த்தையையே பயன்படுத்துகிறார். அதை மூன்றாவது கேள்வியில் இயேசுவும் பயன்படுத்துகிறார்.  இயேசு ஒரு உயர்ந்த நிலை அன்பை எதிர்பார்த்தார்; ஆனால் பேதுரு அதைப் புரிந்து கொள்ள வில்லை என்று சிலர் கூறுகின்றனர். இந்த இரண்டு வார்த்தைகளும் ஒரே பொருளில் யோவான் நற்செய்தி நூலில் பல இடங்களில் பயன்படுத்தப்படிருப்பதால், இந்த உரையாடலில் இந்த இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்தி இருப்பதற்கு  குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை என சிலர் கூறுகின்றனர். ஆயினும், மற்ற பத்து சீடர்களின் முன்பாக பேதுருவை மறுபடியும் சீடராக நிலை நிறுத்துவதும் மற்றும் இயேசுவை பேதுரு உண்மையிலேயே நேசிக்கிறாரா என்பதைப் பற்றிய அவருடைய அறிக்கையும் இந்த உரையாடலில் மிக முக்கியமானது ஆகும்.

 “இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா” என்பது தான் இயேசு சீமோனிடம் கேட்ட முதலாவது கேள்வி ஆகும். இந்தக் கேள்வி பல அர்த்தங்களைத் தரக் கூடும்: நீ  இவர்களை (மற்ற சீடர்களை) நேசிப்பதைக் காட்டிலும் அதிகமாக என்னை நேசிக்கிறாயா? ; இவர்களை விட அதிகமாக நீ என்னை நேசிக்கிறாயா?; இந்த உலகத்தின் காரியங்களை நேசிப்பதைக் காட்டிலும் அதிகமாக நீ என்னை நேசிக்கிறாயா? இயேசுவின் மீதான அன்பு மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதில் நன்கறியப்பட்டவராக பேதுரு இருந்தார்; அவர் வெளிப்படையாக அனேகந்தரம் அதை சொல்லி இருக்கிறார்.  ஆயினும், இங்கே பேதுரு தாழ்மையுடன் தன்னை இயேசுவுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டியதாக இருந்தது. இயேசு அனைத்தையும் அறிந்திருக்கிறார் என்பதை அவன் உணர்ந்து சொன்ன வார்த்தைகளில் உள்ள வித்தியாசத்தைக் கவனியுங்கள்.

இயேசு நம்மிடமும் இதே கேள்வியைத்தான் கேட்கிறார்:  “இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா” நாம் நம் விருப்பங்கள் மற்றும் முன்னுரிமைகளுக்கு, உலகத்தின் வேறு காரியங்கள் மற்றும் மனிதர்களுக்குக் கொடுத்து, இயேசுவுக்கு உரிய இடம் கொடுக்காமல் இருக்கலாம். இதன் பொருள் நாம் இயேசுவை நேசிக்க வில்லை என்பது அல்ல. நம் முன் இருக்கும் கேள்வி என்ன வெனில், நாம் மற்ற மனிதர்கள் மற்றும் காரியங்களைக் காட்டிலும் அதிகமாக இயேசுவை நேசிக்கிறோமா என்பது தான். நாம் இயேசுவை நேசிக்கிறோம் என்பதை அவர் அறிந்திருக்கிறார். .

பயன்பாடு: நான் இயேசுவை நேசிக்க, பின்பற்ற அவர் எனக்கு மற்றுமொரு வாய்ப்பை தருகிறார்; நான் மறுபடியும் மனம் திரும்பி அவரிடம் வர வாய்ப்பு தரும் தேவனாக இருக்கிறார். மனிதனுடனான அன்பின் உறவை புதுப்பிக்க அவர் விரும்புகிறார். இந்த உலகத்தின் எந்த மனிதனை அல்லது பொருளை நேசிப்பதைக் காட்டிலும் நான் இயேசுவை அதிகம் நேசிக்க வேண்டும். நான் அவரை அன்பு செய்து, பின்பற்ற வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறார்.  என் வார்த்தைகளினாலோ அல்லது உலக உடைமைகளினாலோ இயேசுவைப் பிரியப்படுத்த முடியாது. அவர் என் இருதயத்தையும், உண்மையுடன் அவரைச் சேவிக்க வேண்டும் என்ற என் அர்ப்பணிப்பையும் அறிந்திருக்கிறார். 

ஜெபம்: இயேசுவே, நீர் என் மீது காட்டும் அன்பு மற்றும் கரிசனைக்காக உமக்கு நன்றி. சில சமயங்களில், நான் (வெளிப்படையாகவோ அல்லது யாரும் அறியாத படியோ) உம்மை மறுதலித்து, என் பழைய பாவ வாழ்க்கைக்குச் சென்றிருக்கிறேன். ஆயினும், நீர் உம் மாபெரும் அன்பினால், நான் உம்மிடம் திரும்பி வர எனக்கு வாய்ப்புகளைத் தந்தீர். உம் மன்னிப்பிற்காக நன்றி. என் தேவனாகிய கர்த்தாவே, என் வாழ்நாள் முழுதும், நீர் என்னை நேசிப்பது போலவே நானும் உம்மை நேசிக்க எனக்கு உதவியருளும். ஆமென்.  

 - அற்புதராஜ் சாமுவேல் +91 9538328573

Day - 178

No comments: