Friday, June 18, 2021

யாராயினும் நா காக்க

வாசிக்க: 1 நாளாகமம் 3, 4; நீதிமொழிகள் 18; யோவான் 17: 1-19

வேத வசனம்: நீதிமொழிகள் 18: 20. அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான்.
21. மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.

கவனித்தல்: அழிவை உண்டாக்கும் ஆயுதங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக உலக தலைவர்கள் ஜாக்கிரதையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆயுதங்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பைக் கொடுத்து, தங்கள் நாடு மற்றும் மக்களின் நலன்களைப் பாதுகாக்க மற்ற நாடுகளுடன் ஒப்பந்தங்களைச் செய்து கொள்கிறார்கள். ஆயுதங்களை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்று கவலைப்படுகிற அனேகர் தங்கள் நாவுகளை சரியாகப் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவதில்லை. “மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்” என்று வேதம் சொல்கிறது. குணமாக்க அல்லது அழிவை உண்டாக்க, ஆசீர்வாதிக்க அல்லது சபிக்க, உறவுகளை கட்டி எழுப்ப அல்லது உறவுகளை உடைத்து சின்னாபின்னமாக்க வார்த்தைகளுக்கு சக்தி உண்டு என்பதை விளக்கும் வசனங்கள் மற்றும் சம்பவங்கள் வேதாகமத்தில் ஏராளம் உண்டு. இங்கே, ஒருவரின் வாயின் பலனால் அவருடைய வயிறு நிரம்பும் என்று நீதிமொழிகள் 18:20 சொல்கிறது. வாயின் பலனால் (நற்காரியங்கள் நிறைந்து) திருப்தி உண்டாகும் என்று நீதிமொழிகள்12:14 கூறுகிறது. நாம் என்ன பேசுகிறோம் என்பதைப் பற்றி நாம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.  நெல்லை சிந்தினால் அள்ளி விடலாம், ஆனால் சொல்லை சிந்தினால் திரும்ப அள்ள முடியாது என்று ஒரு தமிழ் பழமொழி கூறுகிறது. “தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான்” என்று நீதிமொழிகள் 13:3 சரியாகக் கூறுகிறது. 

சமயங்களில், “நான் ஏன் அப்படி பேசினேன்?” “அவன்/அவள் ஏன் அப்படிப் பேசினான்(ள்)?” என்று நாம் சிந்திக்கிறோம். அனேகர் கடினமான வார்த்தைகள் உண்டாக்கிய வேதனை மற்றும் காயங்களை மறக்கமுடியாமல் கஷ்டப்படுகிறார்கள். கசப்பு, வெறுப்பு மற்றும் மனக்காயம் ஆகியவற்றுடன் அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். “இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்” என்று இயேசு சொல்கிறார் (மத்.12:34; லூக்கா.6:45).  ஒருவரின் உதடுகள் அவருடைய இருதயம் இடும் கட்டளைகளை செயல்படுத்தும் கருவியாக இருக்கிறது; அவை சுயமாகப் பேசுவதில்லை. “நீங்கள் எதைப் பேசுகிறீர்களோ அதையே பெறுகிறீர்கள்” என்று நீதிமொழிகள் 18:21க்கு சில போதகர்கள் விளக்கம் தருகிறார்கள்.  நம் வார்த்தைகள் மூலமாக குணமாகுதலையும் ஜீவனையும் உண்டாக்க முடியும். நம் வெற்று வார்த்தைகளை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். “கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்” என்று தாவீது ஜெபிக்கிறார் (சங்.141:3). “உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை” செலுத்த எபிரேயர் 13:15 நம்மை அழைக்கிறது. நாம் ஏற்கனவே பேசிய வார்த்தைகள் மீது நமக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆயினும், வாழ்வை உண்டாக்கும் வார்த்தைகளை நாம் பேசும்படி, தேவன் நம் இருதயங்களை அவருடைய வார்த்தையால் நிரப்பும்படி, நாம் அவரிடம் கேட்கலாம். 

பயன்பாடு: தேவனுடைய வார்த்தையினால் நான் என் இருதயத்தை நிரப்ப விரும்புகிறேன். என் வார்த்தைகள் மூலமாக குணமாகுதலையும் அமைதியையும் உண்டாக்க நான் விரும்புகிறேன். என் நாவையும் உதடுகளையும் காத்துக்கொள்ள நான் கவனமாக இருக்க வேண்டும். “சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது” என்பதை நான் நினைவில் கொள்ள வேண்டும் (நீதி.10:19). நான் என்ன பேச வேண்டும் என ஆண்டவர் விரும்புகிறாரோ அதையே நான் பேசவேண்டும். இயேசுவின் வார்த்தைகள் ஆவியாயும் ஜீவனாயும் இருப்பது போல, நான் இயேசுவிடம் இருந்து பெற்ற வாழ்க்கையையும் ஆவியையும் வெளிப்படுத்துகிறவையாக என் வார்த்தைகள் இருக்க வேண்டும்.   

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, குணமாகுதல், சமாதானம், மற்றும் ஜீவனை உண்டாக்குகிற உம் வார்த்தைக்காக நன்றி. ஆண்டவரே, நான் சரியான வார்த்தைகளையே பேசும்படி என் உதடுகளையும், இருதயத்தையும் காத்துக் கொள்ளும்.  கடந்தகாலத்தில் நான் பேசிய கவனக் குறைவான வார்த்தைகளுக்காக நான் வருந்துகிறேன்; தேவனே, என்னை மன்னியும்.  இயேசுவே, மற்றவர்களுடைய வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி, மற்றும் சுகமாகுதலை உண்டாக்குகிற உம் வார்த்தைகளைப் பேச எனக்கு உதவியருளும். ஆமென். - அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 169


No comments: