Wednesday, June 2, 2021

தேவை: ஒபதியா போன்ற தேவபக்தியுள்ள அதிகாரிகள்

வாசிக்க: 1 இராஜாக்கள் 17, 18 ; நீதிமொழிகள் 2 ; யோவான் 9: 1-23

வேத வசனம்: 1 இராஜாக்கள் 18: 3. ஆனபடியால் ஆகாப் அரமனை விசாரிப்புக்காரனாகிய ஒபதியாவை அழைப்பித்தான்; ஒபதியா கர்த்தருக்கு மிகவும் பயந்து நடக்கிறவனாயிருந்தான்.
4. யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைச் சங்கரிக்கிறபோது, ஒபதியா நூறு தீர்க்கதரிசிகளைச் சேர்த்து, அவர்களைக் கெபிக்கு ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, அவர்களைப் பராமரித்துவந்தான்.

கவனித்தல்: இந்த வேதபகுதியில், இஸ்ரவேல் ராஜ்ஜிய வரலாற்றில் வருகிற மூன்று வித்தியாசமான நபர்களை நாம் பார்க்கிறோம்: ஆகாப், ஒபதியா, மற்றும் யேசபேல். ஒபதியா என்ற பெயரின் அர்த்தம்—தேவனுடைய வேலைக்காரன் (ஊழியன்) அல்லது யெகோவாவை வணங்குகிறவன்— அவன் கர்த்தர் மேல் வைத்திருந்த அர்ப்பணிப்பை சரியாகக் குறிப்பிடுகிறது. கர்த்தருக்குப் பயந்து நடக்கிற ஒபதியா இஸ்ரவேலின் மிகவும் மோசமான துன்மார்க்கமான ராஜாக்களில் ஒருவராகிய ஆகாப் ஆவார். ஆகாப் பாகாலை வணக்கம் செய்கிற யேசபேலைத் திருமணம் செய்திருந்தார். ஆகாபும் யேசபேலும் பாகால் வணக்கத்தை இஸ்ரவேலில் புகுத்தினர். இப்படிப்பட்ட தேவபக்தியற்ற ஆட்சியாளர்களின் கீழ் கடவுளுக்குப் பயந்து நடக்கிற ஒரு விசுவாசி எப்படி வேலை செய்திருக்கக் கூடும் என்று நாம் ஆச்சரியப்படலாம். ஒபதியா ஒரு முக்கியமான வேலையில் இருந்தான், அதாவது ஆகாபினுடைய அரண்மனை விசாரிப்புக்காரன். தன் விலங்குகளுக்கு தீவனம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க ஆகாப் ஒபதியாவை அனுப்பியது அவன் ராஜாவுக்கு எவ்வளவு முக்கியமானவனாக இருந்தான் என்பதைக் காட்டுகிறது. எலியாவினால் தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்ட அந்த பஞ்சக்காலத்தில், ஆகாப் தன் விலங்குகளுக்கு உணவு கொடுப்பது பற்றி கவலைப்பட்டு, தீவனம் தேடி தீவிரமாகச் சென்றான். மறு பக்கத்திலோ, ஒபதியா தீர்க்கதரிசிகளைப் பற்றி கவலைப் பட்டு, அவர்களைப் பாதுகாத்தான். ஆகாப் ராஜா தன் விலங்குகளுக்கு உணவைத் தேடிக் கொண்டிருந்த காலத்தில், அவனுடைய ஊழியக்காரன் ஒபதியாவால் தீர்க்கதரிசிகளுக்கு உணவளிக்க முடிந்தது என்பது ஆச்சரியமானது ஆகும். பஞ்சம் தீவிரமடைந்த போது தேவபக்தியற்ற ஆகாப் மற்றும் யேசபேலின் இயலாமையை அது அம்பலப்படுத்தியது.

தேவபயம் அற்ற இடங்களில் வேலை செய்வதில் அனேகர் ஒழுக்கம் மற்றும் நெறி சார்ந்த குழப்பங்கள் அல்லது சங்கடங்களை உடையவர்களாக இருக்கிறார்கள். வேலையை விட்டு விலகுவது அவர்களை ஒழுக்கம் சார்ந்த வீழ்ச்சி அல்லது தோல்விகளில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் என்று நினைக்கக் கூடும். ஆயினும், எல்லா இடங்களிலுமே ஒழுக்கம் மற்றும் நன்னெறி சார்ந்த சங்கடங்கள் இருக்கும் என்றும், அதன் அளவு மற்றும் நிலை தான் இடத்திற்கு இடம் மாறுபடும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அப்படியெனில், நாம் சமரசம் செய்துகொண்டு அனுசரித்து நடக்க வேண்டும் என்பது இதன் பொருள் அல்ல. மாறாக, நாம் இருக்கிற இடத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று தேவன் விரும்பினால், எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொள்வதற்கும, நம் பரிசுத்தத்தைக் காத்துக்கொள்வதற்கும் தேவையான பலத்தை அவர் நிச்சயம் தருவார். ஒரு சிறிய விளக்கு கூட இரவின் இருளை நீக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உயர்ந்த பதவிகளில் தேவபக்தியுள்ளவர்கள் இருப்பது ஜனங்களுக்கு நம்பிக்கையைத் தந்து, குரலற்றவர்களின் நலன்களைப் பாதுகாக்க உதவும். இந்த உலகில் உள்ள குழப்பங்களையும், ஏற்றதாழ்வுகளையும் நாம் காணும் போது, நமக்கு ஒபதியா போன்ற தேவபக்தியுள்ள அதிகாரிகள் தேவை என்பதை அது நினைவுபடுத்துகிறது.

பயன்பாடு: நான் எங்கு வேலை செய்தாலும், என்ன வேலை செய்தாலும், அது அலுவலகமோ அல்லது வீடோ எதுவானாலும், நான் தேவனுக்காக வேலை செய்கிறேன். முதலாவதாக, நான் தேவனுக்கு ஊழியம் செய்கிறேன். என் தேவபக்தியுள்ள நடக்கைகளை சமரசம் செய்து கொள்ளும்படி என் வேலை சார்ந்த பொறுப்பு என்னைக் கட்டாயப்படுத்தாதவரையில், தேவ பக்தியற்ற இடங்களில் தேவனுடைய சித்தத்தைச் செய்கிற ஒரு சாட்சியாக நான் இருக்க முடியும். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், தேவன் என்ன செய்ய விரும்புகிறாரோ அதை அவர் என் மூலமாக செய்து முடிப்பார். கர்த்தரை நான் எப்பொழுதும் என் முன்பாக வைத்திருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறாரோ அதையே நான் செய்ய வேண்டும்.

ஜெபம்: பிதாவே, எங்கள் நாட்டில் இருக்கிற தேவபக்தியுள்ள அதிகாரிகளுக்காக உமக்கு நன்றி. என் தேவனே, என் வாழ்க்கையின் நோக்கத்தையும், உம் சித்தத்தையும் புரிந்து கொள்ள எனக்கு உதவும். ஆண்டவரே, என் வாழ்விலும் வேலையிலும், உமக்கு உண்மையுடன் இருக்க எனக்கு உதவும். எந்தச் சூழ்நிலையிலும் உமக்காக நிற்கவும், எது சரியோ அதைச் செய்யவும் உம் பலத்தைத் தாரும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 153

No comments: