Sunday, January 10, 2021

லோத்துவின் வாழ்க்கை உணர்த்தும் பாடம்

 வாசிக்க: ஆதியாகமம் 19, 20; சங்கீதம் 10; மத்தேயு 5:33-48

வேதவசனம்: ஆதியாகமம் 19: 1 அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள்; லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான்... அதற்கு அவர்கள்: அப்பாலே போ; பரதேசியாய் வந்த இவனா நியாயம் பேசுகிறது? இப்பொழுது அவர்களுக்குச் செய்வதைப்பார்க்கிலும் உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம் என்று சொல்லி...14... அவனுடைய மருமக்கள்மாரின் பார்வைக்கு அவன் பரியாசம்பண்ணுகிறதாகக் கண்டது...16 அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது...18 அதற்கு லோத்து: அப்படியல்ல ஆண்டவரே...

கவனித்தல்: லோத்துவின் ஆரம்பம் நன்றாகத்தான் இருந்தது. தன் உறவினரான ஆபிராமை தேவன் அவர் இருந்த இடத்தை விட்டு புறப்பட்டுப் போகும்படி அழைத்த போது, அவருடன் சேர்ந்து போகும் இடம் இன்னதென்று தெரியாமல் பயணம் செய்ய புறப்பட்டார். ஆயினும், லோத்துவின் உடைமைகள் பெருகி, ஒரு பிரச்சனை வந்த போது, ஆபிராமை விட்டு விலகி, சோதோமுக்கு அருகில் நல்ல தண்ணீர் நிறைந்த செழிப்பான இடத்தை நோக்கிச் சென்றார். லோத்து சோதோம் பட்டணத்திற்குள் வசித்ததாகவும், அங்கே ஒரு நல்ல நிலையில் இருந்ததாகவும் ஆதியாகமம் 19 வாசிக்கும்போது அறிகிறோம். ஆயினும்,  சோதோமின் மக்களுடன் வசிப்பதற்காக அவர் தன் குணாதிசயத்தை, நற்பெயரை மற்றும் தன் நிலையை ஒழுக்க ரீதியாகப் பார்க்கையில் சமரசம் செய்து கொண்டதாகத் தெரிகிறது. சோதோமுக்கு வரப்போகிற நியாயத்தீர்ப்பைப் பற்றி அவர் சொன்ன போது, மற்றவர்கள் அவரை நம்பாமல் பரியாசம் செய்தாலும் கூட, அவர் சோதோம் நகரத்தை விட்டு அகல மனமில்லாதவராகவே இருந்தார். சோதோமின் அழிவுக்குப் பின் பாதுகாப்பாக வாழ தேவன் காட்டின இடத்தில் வாழ்வதற்குப் பதிலாக, சோதோம் அழிக்கப்படும்போது அத்துடன் சேர்த்து அழிக்கப்பட இருந்த சோவார் எனும் ஊருக்குப் போக அனுமதி கேட்பதைப் பார்க்கிறோம். அப்போஸ்தலனாகிய பேதுரு லோத்துவைப் பற்றிச் சொல்லும்போது, சோதோம் மனிதரின் அக்கிரமத்தினால் “வருத்தப்பட்டு”, “இருதயத்தில் வாதிக்கப்பட்டார்” என்று சொன்னாலும், சோதோம் நகரத்தின் மீது தேவனுடைய தண்டனை விழுகிற வரைக்கும் அந்நகர பாவ மனிதர்களுடன் தான் அவர் தொடர்ந்து வாழ்ந்து வந்தார். இறுதியில், அவருடைய குடும்பத்தின் வருந்தத்தக்க நிலையை நாம் காண்கிறோம்.

பயன்பாடு: தேவனுடன் சேர்ந்து நடக்கிறதில் நல்ல துவக்கத்தைக் கொண்டிருந்த பல நல்ல மனிதர்கள் உண்டு. ஆனால், பின்னாட்களில் பல்வேறு காரணங்களுக்காக அவர்கள் தேவனை விட்டு விலகிவிட்டார்கள். உலகப் பிரகாரமான உடைமைகளின் மீதான ஒருவரின்  ஆசை எப்படி அவருடைய முடிவை நிர்ணையிக்கிறதாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள லோத்துவின் வாழ்க்கை ஒரு நல்ல உதாரணம் ஆகும். நான் தேவனுடன் என் வாழ்வில் எப்பொழுதும், எல்லா நேரங்களிலும் நடக்க வேண்டும். தேவனுக்காக, தேவனுடைய ராஜ்ஜியத்திற்காக நான் விட்டு வந்தவைகளை பின்னோக்கிப் பார்க்கவோ திரும்பிச் செல்லவோ கூடாது. மேலும், தேவனுடைய பார்வைக்கு பொல்லாப்பாய் தெரிகிற எந்த தீமையையும் நான் எதிர்ப்பேன். நான் அவபக்தியான காரியங்களில் சமரசம் செய்து கொண்டு, விட்டுக் கொடுத்து வாழ ஆரம்பித்தால், என்றாவது ஒரு நாள் நானும் அவைகளில் சிக்கிக் கொள்ள நேரிடும். குறிப்பிட்ட காரியங்களை அல்லது மனிதர்களை விட்டு விலகி ஓடுமாறு தேவன் சொல்லும்போது, சாக்குப் போக்குகளைச் சொல்வதற்குப் பதிலாக,  “ஆம் ஆண்டவரே, இதோ உம் வார்த்தையின் படியே” என்று சொல்வதே என் உடனடி பதிலாக இருக்க வேண்டும்.

ஜெபம்: பிதாவே, உம்முடன் நடக்கவும், உமக்கு முன்பாக குற்றமற்றவனாக வாழவும் என்னை அழைத்திருப்பதற்காக நன்றி. என் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் நான் உம்முடன் வாழ எனக்கு உதவும். அவ்வாறு செய்ய என்னைப் பெலப்படுத்தும் உம் சிலுவைக்காகவும், கிருபைக்காகவும் நன்றி. என்னை வழிநடத்தும் பரிசுத்த ஆவியானவருக்காக நன்றி. ஆமென்.
இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்
பின்னோக்கேன் நான் (2)
உலகம் என் பின்னே சிலுவை என் முன்னே
பின்னோக்கேன் நான் (2)

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
10 ஜனவரி 2021

No comments: