Sunday, January 24, 2021

இது இதயம் சம்பந்தப் பட்டது

வாசிக்க: ஆதியாகமம்  47, 48; சங்கீதம் 24; மத்தேயு 12:31-50

வேதவசனம்:  மத்தேயு 12:34 இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். 35. நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான். 36. மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 37. ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்.

கவனித்தல்: நாம் பேசிய வார்த்தைகளை நியாயப்படுத்துவதற்காக, சில நேரங்களில் “நான் என்ன நினைத்தேன் என்பது கடவுளுக்குத் தெரியும்” என்று நாம் சொல்கிறோம். ஆயினும்,  “நெல்லை சிந்தினால் அள்ளிவிடலாம், சொல்லைச் சிந்தினால் அள்ள முடியாது” என்று பெரியவர்கள் சொல்வது போல, நாம் பேசிய வார்த்தைகள் “திரும்பப் பெற முடியாதவை” என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நம் அனுதின வாழ்வில் பேசுகிற வார்த்தைகளைப் பற்றிய ஒரு எச்சரிக்கையை இயேசு நமக்குத் தருகிறார். நாம் பேசும் வார்த்தைகள் நம் இருதயத்தில் என்ன சேர்த்து வைத்திருக்கிறோம் என்பதை வெளிப்படுத்துகின்றன. வெற்று வார்த்தைகள் இருதயத்தின் வெறுமையைப் பற்றிச் சொல்கிறது. வெறுமையான இருதயம் பிசாசின் கூடாரம் ஆகிவிடும் ஆபத்து இருக்கிறது (மத்.12:43-45). மாறாக, நல்ல இருதயத்தில் இருந்து வரும் நல்ல வார்த்தைகள் இருமடங்கு பலன்களை தருவதாக இருக்கிறது. பேசுகிறவர்களுக்கு இரட்சிப்பையும் பாதுகாப்பையும், கேட்கிறவர்களுக்கும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. நல்ல வார்த்தைகள் மற்றும் கெட்ட/தீய வார்த்தைகள் பற்றி வேதாகமத்தில் பல வசனங்கள் உண்டு. மரணத்துக்கும் ஜீவனுக்குமான அதிகாரம் நம் வார்த்தைகளில் உண்டு (நீதி.18:21). அதைத் (மரணம் அல்லது ஜீவனை) தெரிவு செய்வது நம் கைகளில் இருக்கிறது. நாம் இயேசுவைப் பற்றி அறிக்கை செய்து இரட்சிப்பைப் பெறலாம் (ரோமர் 10:9-10). நல்ல மரமானது நல்ல கனிகளை மட்டுமே கொடுப்பது போல, நல்ல இருதயத்தில் இருந்து நல்ல வார்த்தைகள் மட்டுமே வரும். ஒரே மனிதரின் வாயிலிருந்து ”துதித்தலும் சபித்தலும்” வெளிவர முடியாது (யாக்கோபு 3:9-12).

பயன்பாடு: என் வாழ்க்கையில் நான் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் முக்கியமான பங்கு வகிக்கிறது. நான் தேவன் முன்பாக இருந்தாலும் சரி அல்லது மனிதர் முன்பு இருந்தாலும் சரி, ஒவ்வொரு நாளும் நான் பேசுகிற வார்த்தைகளைக் குறித்து கவனமாக இருக்க வேண்டும். பாவத்தில் இருந்து என்னை விலக்கிக் காத்துக் கொள்ள, நான் தேவனுடைய வார்த்தையை என் இருதயத்தில் சேர்த்து வைக்க வேண்டும் (சங்.119:11).  வெறுமையான மற்றும் அர்த்தமற்ற வார்த்தைகளைப் பேசுவதற்குப் பதிலாக, நான் சேவிக்கும் நல்ல தேவனைப் பற்றிய, அவருடைய நன்மைகளைப் பற்றிய வார்த்தைகளை அனுதினமும் பேசவேண்டும். தேவன் என் இருதயத்தை மகிழ்ச்சியினாலும் சமாதானத்தினாலும் நிரப்பி இருக்கிறார் (சங்.4:7-8). ஆகவே, மற்றவர்களுக்கு மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் தருகிற வார்த்தைகளைப் பேசுவேன்.

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, நல்ல வார்த்தைகளையே நான் பேசவேண்டும் என்று நினைவுபடுத்துவதற்காக உமக்கு நன்றி. நல்ல வார்த்தைகளைப் பேசுவது என்பது நீர் எனக்குச் செய்த நன்மைகளைப் பற்றிப் பேச எனக்கு உள்ள ஒரு வாய்ப்பு. உம்மைப் பற்றியும் உம் வார்த்தைகளின் நன்மை பற்றியும் பேச எனக்கு உதவும். இதயத்தைத் தொடுகிற/குணமாக்குகிற சரியான வார்த்தையை நான் பேச உம் பரிசுத்த ஆவியானவர் எனக்கு உதவுவாராக.  ஆமென்.


- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
24 ஜனவரி 2021

No comments: