Saturday, January 30, 2021

இயேசுவின் பாதத்தில் வைத்து விடுங்கள்

வாசிக்க: யாத்திராகமம் 9, 10; சங்கீதம் 30; மத்தேயு 15:21-39

வேதவசனம்:  மத்தேயு 15: 29. இயேசு...ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார். 30. அப்பொழுது, சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார். 31. ஊமையர் பேசுகிறதையும், ஊனர் சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும் ஜனங்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

கவனித்தல்: ஒரு ராஜா தனது சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும்போது, அவருடைய மக்கள் ராஜா முன்பாக வந்து அவருடைய காலடியில் தங்களால் இயன்றதை கொண்டு வைத்து தங்கள் மரியாதையைக் காண்பிப்பார்கள்.  இங்கே, இயேசு இருக்கிற இடத்தில், சப்பாணிகளையும், கண்பார்வை இல்லாதவர்களையும்,  ஊனமுற்றோர்களையும், வாய் பேச முடியாத ஊமைகளையும், மற்றும் பல பிணியாளிகளையும் ஜனங்கள் இயேசுவின் பாதத்தில் கொண்டு வந்து வைத்தார்கள் என்று வாசிக்கிறோம். அப்பொழுது அந்நோயாளிகளைக் குணமாக்குவதற்காக வெளிப்பட்ட தேவனுடைய வல்லமையைப் பற்றியும் நாம் வாசிக்கிறோம். இயேசு அவர்கள் அனைவரையும் சுகப்படுத்தினார். நவீன மருத்துவ வசதிகளால் கூட செய்ய முடியாத ஒன்றை இயேசு செய்தார். எனவே அந்த ஜனங்கள் ஆச்சரியப்பட்டு தேவனைத் துதித்தார்கள், மகிமைப்படுத்தினார்கள். அதைவிட அதிகமாக  அவர்கள் வேறு என்ன செய்ய முடியும்!   நம்முடைய இயலாமை, பலவீனங்கள், கவலைகள், துக்கங்கள், வேதனைகள் மற்றும் நம் வாழ்க்கையில் நம்மால் தாங்க முடியாத எதையும் வைப்பதற்கான சரியான இடம் இயேசுவின் பாதங்கள் தான். இன்றும் அவர் குணமாக்க வல்லவராக இருக்கிறார். ஏனெனில்,  “இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” (எபி.13: 8).

பயன்பாடு: நான் இயேசுவின் பாதத்தில் என் வாழ்க்கையை முன் வந்து வைக்கும்போது, “என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர். என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.” (சங்.30:11:12) என தாவீதைப் போல நானும் பாட முடியும். அவர் வல்லமையுள்ளவர். அவர் இன்றும் உயிரோடிருக்கிறார். என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவால் செய்ய முடியாத காரியம் எதுவும் இல்லை. அல்லேலூயா! ஆண்டவராகிய இயேசுவே, என் வாழ்க்கையை உம் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன். இதை விட அதிகமாக நான் வேறென்ன செய்துவிட முடியும்!

ஜெபம்:   ஆண்டவராகிய இயேசுவே, நீர் ஒருவரே என் துதிக்குப் பாத்திரர். என் தேவைகள் ஒவ்வொன்றையும் நீர் சந்திப்பதற்காக நன்றி. நீரே எனக்கு எல்லாம். நான் உம்மை எக்காலத்திலும் நம்ப முடியும். என் வாழ்க்கையில் உம்மையே மகிமைப்படுத்தி  வாழ எனக்கு உதவும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
30 ஜனவரி 2021


No comments: