Sunday, January 31, 2021

கர்த்தர் கெட்டுப்போக விடுவதில்லை

 வாசிக்க: யாத்திராகமம் 11, 12; சங்கீதம் 31; மத்தேயு 16:1-12

வேதவசனம்:  சங்கீதம் 31: 23. கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்புகூருங்கள்; உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்புசெய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்.  24. கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.

கவனித்தல்:  நாம் வாழும் இன்றைய உலகில், உணவுப் பொருட்கள், மருந்துகள், அழகு சாதன பொருட்கள், மற்றும் பல பொருட்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக பதப்படுத்தும் வேதியியல் பதப்பொருள்கள் (preservatives)  சேர்க்கப்படுவதை நாம் பார்க்கிறோம்.   பொருட்கள் அழிந்து போகாமல் பாதுகாப்பதுதான் பதப்பொருட்களைப் பயன்படுத்துவதன் நோக்கம் என்றாலும், நீண்ட நாட்கள் பயன்படுத்தும் போது அதை பயன்படுத்துபவர்களின் ஆரோக்கியத்திற்கும் நலத்திற்கும் தீங்கு விளைவிப்பதாக அவை இருக்கின்றன. இங்கு கர்த்தர் தமக்கு உண்மையாக இருப்பவர்களைப் பாதுகாக்கிறார் என்று தாவீது சொல்கிறார். சங்கீதம் 31ல், தன் வாழ்வில் மிகவும் கடுமையான ஒரு நெருக்கடியான வேளையிலும் கர்த்தன் மீதான தன் நம்பிக்கையை தாவீது வெளிப்படுத்துகிறார். அவர் தன்னை கவலைப்படுத்துகிற சிந்தனைகள், வேதனைகள், மற்றும் எப்பக்கத்திலும் திகிலை உண்டாக்கியதும், சரீரப்பிரகாரமாகவும் உணர்வுப் பூர்வமாகவும் பலவீனப்படுத்தின எதிரிகளின் அவதூறுகளைப் பற்றிச் சொல்கையில்,  “நானோ கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நீரே என் தேவன் என்று” சொல்கிறார் (வ.9-14).தேவன் தமக்கு உண்மையானவர்களை எல்லா உபத்திரவங்களிலும் இருந்து விடுவித்து, அவர்களைப் பாதுகாக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, தேவன் தமக்கு உண்மையாய் இருப்பவர்களுக்கு “உண்டுபண்ணி வைத்திருக்கிற நன்மை” எவ்வளவு பெரிது! நம் காலங்கள் நம் எதிரிகளின் கைகளில் அல்ல,  தேவனுடைய கரங்களில் இருக்கிறது. அவருடைய வேளையில் தேவன் நம்மை விடுவித்து, உயர்த்துகிறார். தேவன் உண்மையுள்ளவராகவே இருக்கிறார். 430 வருட அடிமைத்தன எகிப்தில் இருந்து இஸ்ரவேலர்களை விடுவித்து, தேவன் தம் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினார். இன்றும் கூட தம்மை நம்பி, தமக்கு உண்மையாக இருப்பவர்களை விடுவிக்க தேவன் வல்லவராக இருக்கிறார். நம் எதிரி யார் என்பது அல்ல அல்லது நம்முடைய கவலைப் படவைக்கும் சூழ்நிலை என்ன என்பது அல்ல, நாம் யார் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதே மிகவும் முக்கியமானது ஆகும். நாம் எக்காலத்திலும் தேவனை நம்ப முடியும்!

பயன்பாடு:  என் வாழ்வில் நான் ஒருபோதும் எதிர்பார்த்திராத விரும்பத்தகாத சூழ்நிலைகள் மற்றும் பாடுகள் என்னைச் சுற்றி இருக்கையில், நான் சரீரப்பிரகாரமாகவும், உணர்வுப் பூர்வமாகவும் பலவீனமாக இருந்த நேரங்கள் உண்டு. நான் என் சூழ்நிலையைப் பார்த்துக் கொண்டிருந்த நேரங்களில், என் பயம் அதிகரித்து, கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் நம்பிக்கையூட்டும் எதுவும் என் பார்வைக்குத் தெரியாமல் இருந்தது. ஆயினும், கடந்தகாலங்களில் என் வாழ்விலும் தேவனுக்குப் பயந்த மற்ற  மனிதர்களின் வாழ்க்கையிலும் தேவன் என்ன செய்தார் என்பதை நான் நினைவுகூர்கின்ற போது, தேவன் மேல் உள்ள என் நம்பிக்கையும் விசுவாசமும் அதிகரித்து, என் பயங்கள் என்னை விட்டு விலக ஆரம்பிக்கின்றது. தேவனுடைய விடுதலை மற்றும் உண்மைத்தன்மையைப் பற்றிச் சொல்கிற பல சம்பவங்களை நாம் வேதத்தில் வாசிக்கிறோம். தேவனுடைய பாதுகாப்பு ஒருபோதும் அழிந்து சிதைந்து போவதில்லை. ஆண்டவரே நான் உம்மை நேசிக்கிறேன், உம்மையே நம்புகிறேன். நீர் எவ்வளவு பெரியவர்!

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, என்னை அழிக்க நினைக்கிற எந்தக் கொடிய மற்றும் தீய எண்ணங்களிலும் இருந்து நீர் என்னைப் பாதுகாக்கிறதற்காக உமக்கு நன்றி.   என் காலங்களும், என் வாழ்க்கையும் உம் கரங்களில் இருக்கிறது! உம் அன்பு எவ்வளவு ஆச்சரியமானது! உம் அன்பையும் பாதுகாப்பையும் நான் எப்போதும் நினைவில் கொள்ளவும், எக்காலத்திலும் உம்மை  நேசித்து, அன்பு கூரவும் எனக்கு உதவும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
31 ஜனவரி 2021


No comments: