Wednesday, January 13, 2021

எதுவரைக்கும் கர்த்தாவே?

வாசிக்க: ஆதியாகமம் 25, 26; சங்கீதம் 13; மத்தேயு 7:1-14

வேதவசனம்: சங்கீதம் 13:1. கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? 2. என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனைபண்ணிக்கொண்டிருப்பேன்?

கவனித்தல்: நீண்டகாலம் காத்திருப்பதைப் பற்றிய தன் கவலையையும், கடினமான அந்த நேரத்தில் தேவனைப் பார்க்க முடியாமல் இருப்பதைப் பற்றிய தன் விரக்தியையும் தாவீது வெளிப்படுத்துகிறார். இதன் நிமித்தமாக, அவருடைய இருதயத்தில் கவலையை உண்டாக்குகிற மனப்போராட்டத்தில் தவிக்கிறார். நாம் எதிர்பார்த்ததை விட மிக அதிகமான காலம் ஏதாவதொரு காரியத்திறாக காத்திருக்கும்போது, அந்த காத்திருக்குதல் நம் இருதயத்தை இளைக்கப் பண்ணும். காத்திருக்கும் நேரத்தில், நாம் தொடர்ந்து நம் பிரச்சனைகளையே பார்த்துக் கொண்டிருந்தால், அவைகளில் இருந்து விடுபட்டு வெளிவரும் வழி தெரியாமல் திகைக்கக் கூடும். தேவன் நம்மை கைவிட்டுவிட்டார் என்று நாம் நினைக்கலாம். ஆயினும், அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை ஒரு முற்றுப் புள்ளி அல்ல. மாறாக, தேவன் கடந்தகாலத்தில் செய்த நன்மைகளை நினைத்து, அவரைப் பற்றிய ஒரு புதிய பார்வையைப் பெறுவதற்கான ஆரம்பப்புள்ளியாக அது மாறக் கூடும். தாவீதும் அதையே இங்கு செய்கிறார். நமக்குத் தெரியாத பலவிதமான பிரச்சனைகளின் நடுவில் இருந்த தாவீது, தேவன் மேல் உள்ள தன் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார் (சங்கீதம் 13:5). நாம் தேவனை நம்பத் துவங்கும்போது, நம் கவலைகளில் இருந்து விடுபட்டு, மகிழ்ச்சியை அனுபவிக்கவும், அவரைத் துதிக்கும் பாடல்களைப் பாடவும் ஆரம்பிக்கிறோம். 

பயன்பாடு: குறிப்பிட்ட சில காரியங்களுக்காக நான் காத்திருக்கும் நேரங்களில், நானும் மனம் சோர்வடைந்து விடுகிறேன். ஆயினும், ஒரு மனப் போராட்டத்தை என் இருதயத்திற்குள் அனுமதிப்பதற்குப் பதிலாக, கடந்த காலத்தில் தேவன் எவ்வாறெல்லாம் எனக்கு உதவி, காப்பாற்றி இருக்கிறார் என்பதை நான் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர் எனக்குச் செய்த நன்மைகளை, நிறைவேற்றிய வாக்குத்தத்தங்களை நினைத்துப் பார்க்கும்போது, என் இருதயமானது தேவன் மேல் நம்பிக்கை வைக்கும்படி என் கவனம் அவரை நோக்கி திரும்புகிறது. அதன் பின், நான் மிகுந்த நம்பிக்கையுடன் அப்படிப்பட்ட கடினமான நேரங்களை,  “தேவனுக்காக காத்திருக்கும்” நேரமாக நம்பிக்கையுடன் பயன்படுத்த முடியும். நான் தேவனுக்காக காத்திருக்கும்போது, ஒரு புதிய பலத்தைப் பெறுகிறேன். நான் சோர்ந்து போவதில்லை. ஆகவே, நான் தேவனை எல்லாவற்றிற்காகவும் துதிக்கிறேன். ஏனெனில், அவரே எனக்கு எல்லாமுமாக இருக்கிறார்.

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, என் மீதான உம் கிருபையின் அன்பிற்காக நன்றி. நீரே என் புகலிடமும் தஞ்சமுமானவர். நான் உம்மை எக்காலத்திலும் நம்புவேன். நீர் என்னை ஒருபோதும் கைவிடுவதில்லை. உம்மைப் துதிக்கும் பாடலை நான் எப்போதும் பாடச் செய்யும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
13 ஜனவரி 2021

No comments: