Tuesday, January 12, 2021

கவலைக்கு சிறந்த மருந்து

 வாசிக்க: ஆதியாகமம் 23, 24; சங்கீதம் 12; மத்தேயு 6: 19-34

வேதவசனம்: மத்தேயு 6: 25. ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?...31. ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள்.32. இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். 33. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

கவனித்தல்: பொதுவாக, கவலையில்லாத வீட்டையும், கவலையில்லாத மனிதனையும் காண்பதரிது. கவலை என்பது அனேகருக்கு தூக்கமில்லாத இரவுகளைக் கொடுக்கிற உலகளாவிய ஒரு வியாதி. மத்தேயு 6 ஆம் அதிகாரத்தில், மனிதனுக்கு கவலையை உண்டாக்குகிற முக்கியமான சில காரணங்களைப் பற்றி இயேசு பேசுகிறார். எல்லா தேவைகளையும் தேவன் சந்திக்கிற கவலையில்லாத ஒரு வாழ்க்கைக்கு தன் வார்த்தைகளைக் கேட்போரை இயேசு அழைக்கிறார். நம் தேவைகள் பெரிதோ அல்லது சிறிதோ, தேவன் அவைகளை அறிவார். அது மாத்திரமல்ல, நம் தேவைகளுக்குத் தேவையானதைச் செய்யும் வழியையும் அவர் அறிந்திருக்கிறார். மனிதன் அறியாத வழிகளில்  தேவன் தரும் பாதுகாப்பையும், தேவைகளுக்குத் தேவையானதைத் தருவதையும், அவரை நம்புபவர்கள் தங்கள் வாழ்வில் காண்கிறார்கள். ஈசாக்குக்கு தான் விரும்பியபடி ஒரு மனைவியைப் பெற தேவன் ஆபிரகாமுக்கு உதவியதையும், அவனுடைய வேலைக்காரனுடைய வேண்டுதலுக்கு தேவன் பதிலளித்ததையும் பாருங்கள் (ஆதி.24). நம் தேவைகளைக் குறித்துக் கவலைப்படுவதற்குப் பதிலாக, நாம்  “ முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும்” தேட வேண்டும் என இயேசு அழைக்கிறார். நாம் தேவனுடைய வார்த்தையை நம்பி விசுவாசிக்கலாம். ஏனெனில், அவை  “புடமிடப்பட்ட” பரிசுத்த, மற்றும் பரிபூரண சொற்கள்(சங்.12). 

பயன்பாடு: ஒரு பறவையையோ அல்லது காட்டுப் பூவையோ பார்க்கும்போது, தேவன் எவ்வாறு அவைகளைப் பராமரித்து, போஷிக்கிறார் என்று இயேசு சொன்ன வார்த்தைகளை நான் நினைவுகொள்ள வேண்டும். தேவனுடைய படைப்பையும், இயற்கை காட்சிகளையும் காணும்போது, அவன் என் மனதுக்கு இதமானவைகளாக மட்டுமல்ல, தேவனுடைய பார்வையில் நான் அவைகளை விட எவ்வளவு அதிக விசேஷமானவன் என்பதையும் எனக்கு நினைவுபடுத்துகின்றன. தேவன் என் ஒவ்வொரு தேவையையும் அறிந்திருக்கிறார். ஆகவே நான் எதைக்குறித்தும் பயப்படவோ, கவலைப்படவோ மாட்டேன். தேவன் என் தேவைகளைச் சந்திக்கிற இந்த கவலையில்லாத வாழ்க்கையை வாழ, நான் எல்லாவற்றிலும்  “ முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும்” தேடுவேன்.

ஜெபம்: பிதாவே, இன்று நீர் தந்த நல்ல வார்த்தைக்காக நன்றி. என் தேவைகளை நீர் அறிந்திருக்கிறீர். நான் உம் வார்த்தையை நம்பி, அதைப் பின்பற்றும்போது, உம் பாதுகாப்பையும் போஷிப்பையும் என் வாழ்க்கையில் காண முடியும். முக்கியமானவைகளுக்கு முதலிடம் கொடுத்து நான் வாழ எனக்குதவும். உம் இராஜ்ஜியத்தின் குடிமகனாகவும், உம் நீதியை கடைபிடிக்கிறவனாகவும் வாழ எனக்கு உம் பெலத்தைத் தாரும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
12 ஜனவரி 2021

No comments: