Thursday, January 14, 2021

ஆசீர்வாத ஏணியின் முதல் படி

வாசிக்க: ஆதியாகமம் 27, 28; சங்கீதம் 14; மத்தேயு 7:15-29

வேதவசனம்: ஆதியாகமம் 27: 20. அப்பொழுது ஈசாக்குத் தன் குமாரனை நோக்கி: என் மகனே, இது உனக்கு இத்தனை சீக்கிரமாய் எப்படி அகப்பட்டது என்றான். அவன்: உம்முடைய தேவனாகிய கர்த்தர் எனக்கு நேரிடப்பண்ணினார் என்றான்.

கவனித்தல்: தன் இளைய மகன் மீதான தேவனுடைய திட்டத்தையும் தயையையும் ரெபெக்காள் அறிந்திருந்தாள் (ஆதி 25:23). ஈசாக்குக்கும் அதை அறிந்திருக்கக் கூடும். ஆயினும், தான் விரும்பின சுவையான உணவைச் சாப்பிட்டு தன் மூத்த மகனான ஏசாவை ஆசீர்வதிக்க ஈசாக்கு விரும்பினான். மறுபக்கத்திலோ, அதே ஆசீர்வாதத்தை தன் தகப்பனை ஏமாற்றி தந்திரமாகப் பெற யாக்கோபை ரெபெக்காள் ஆயத்தப்படுத்துகிறாள். முன்னதாக, ஏசா சேஷ்ட புத்திரபாகத்தைக் குறித்து அலட்சியமாக இருந்ததையும், அப்பத்தையும் கூழையும் கொடுத்து யாக்கோபு எப்படி தந்திரமாக ஏசாவிடம் இருந்து சேஷ்ட புத்திரபாகத்தைப் பெற்றான் என்பதையும் வாசித்தோம் (25:29-34). முழு குடும்பத்தின் பலவீனத்தையும் நாம் இங்கு காண்கிறோம். ஈசாக்கை ஏமாற்ற மிகவும் குறுகிய காலத்தில் ரெபெக்காளும் யாக்கோபும் ஒரு வழியைக் கண்டுபிடித்தனர்.அவர்கள் தங்கள் திட்டத்தில் வெற்றி பெற்றாலும், அதன் விளைவாக கசப்பு, பயங்கள், கண்ணீர்கள் மற்றும் துக்கம் என எதிர்மறை விளைவுகளே உண்டாயிற்று. யாக்கோபின் வார்த்தைகளை இங்கே கவனியுங்கள். யாக்கோபுக்கும் தேவனுக்குமிடையே தனிப்பட்ட எந்த தொடர்பும் இல்லை. ஆகவே அவன், “உம்முடைய தேவனாகிய கர்த்தர்”  என்று சொல்கிறான். ஈசாக்கை ஏமாற்ற ”நான் சொல்வதைக் கேள்” என்று சொன்ன ரெபெக்காள், பின்னர் அதே வார்த்தைகளைச் சொல்லி தேவனுடைய உண்மையான ஆசீர்வாதத்திற்கு ஆயத்தப்படுத்துவதை நாம் காண்கிறோம் (27:8, 13, 43).  “யாக்கோபு  (முதன்முறையாக?) தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும் கீழ்ப்படிந்து”, அவர்கள் சொன்னபடி தன் பயணத்தை ஆரம்பித்தான் என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம். ஏசாவும் இந்தக் கீழ்ப்படிதலைக் கண்டான். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தக் கீழ்ப்படிதலின் பயணத்தில்தான் தேவன் யாக்கோபைச் சந்தித்து தன் வார்த்தைகளையும் வாக்குத்தத்தங்களையும் பகிர்ந்து கொள்கிறார். அந்த இடத்தில் இருந்துதான் தேவனுக்கும் யாக்கோபுக்குமான தனிப்பட்ட உறவு துவங்குகிறது (27:12-22).

பயன்பாடு: நான் பொறுமையின்றி, என் சொந்த வழியில் தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக எத்தனை முறை முயற்சி செய்திருக்கிறேன்? தேவனுடைய ஆசீர்வாதம் மற்றும் திட்டம் பற்றி நான் உறுதியாக இருந்தாலும், தேவனுடைய நேரம், மற்றும் அவர் எனக்காக வைத்திருக்கும் வழி ஆகியவற்றைக் காணத் தவறிய நேரங்கள் என் வாழ்வில் உண்டு. தேவனுக்காகவும், அவர் செயல்படும் நேரத்திற்காகவும் காத்திருப்பதற்குப் பதிலாக, ஒரு நல்ல காரியத்திற்காகத்தானே என்று நினைத்து நான் தந்திரமான வழிகளை பயன்படுத்தக் கூடும். வேதாகமம் சொல்வது போல, தேவன் பொய் சொல்வதில்லை (1 சாமு.15:29). அவருடைய வாக்குத்தத்தங்களும் ஆசீர்வாதமும் உண்மையானவையும் உறுதியானவையும் என்றாலும், நான் என் வாழ்வில் தேவனுடன் நடக்கும் கீழ்ப்படிதலின் பயணத்தில்தான்  அவைகளைப் பெற முடியும். தேவனுடைய வாக்குத்தத்தங்களைச் சுதந்தரிக்க குறுக்கு வழி எதுவும் இல்லை.

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, உம் வார்த்தைகளுக்காக, உம் ஆசீர்வாதங்களுக்காக் நன்றி. என் வாழ்வில் ஏதேனும் குறுக்கு வழிகளை, தந்திரமான வழிகளை நான் பயன்படுத்தி இருந்தால், என்னை மன்னியும். அன்பிலும், கீழ்ப்படிதலிலும் நான் உம்முடன் நடக்க எனக்கு உதவும்.  ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
14 ஜனவரி 2021

No comments: