Thursday, January 28, 2021

ஜெபிக்க நேரம் கண்டுபிடித்தல்

 வாசிக்க: யாத்திராகமம் 5, 6; சங்கீதம் 28; மத்தேயு 14:22-36

வேதவசனம்:  மத்தேயு 14: 22. இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.
 23. அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்.

கவனித்தல்: ஒரு நாள் முழுதும் தன் வேலையைச் செய்த பின், ஒரு பெருங்கூட்ட ஜனங்களுக்கு ஊழியம் செய்த பின், தன்னுடன் இருந்த அனைத்து ஜனங்களும் திருப்தியாகும்வரை சாப்பிடும்படி ஒரு அற்புதத்தைச் செய்த பின், இயேசு ஜெபிக்க ஒரு மலையின் மேல் ஏறினார். நோயாளிகளை இயேசு குணமாக்கினதைக் கண்ட பின் (மத்.14:14), அனைவரும் (பெண்கள் மற்றும் குழந்தைகள் தவிர, ஆண்கள் மட்டும் 5000 பேர்) திருப்தியாக சாப்பிட உணவுப் பெருக்கத்தின் அற்புதத்தைச் செய்த பின் (மத்.14:15-21),  இயேசுவைச் சுற்றிலும் இருந்தவர்களுக்கு அவரை விட்டுச் செல்ல மனம் இருந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் மனதில், இயேசுவைக் குறித்து வேறு ஆசைகள் அல்லது எதிர்பார்ப்புகள் இருந்திருக்கலாம் (யோவான் 6:14,15).  ஆனால்,  ஜனங்களை திரும்ப அவரவர் வீட்டிற்கு அனுப்பும் போது,  தன் சீடர்களை அக்கரைக்குச் செல்லும்படி துரிதப்படுத்தினார். மூல மொழியில், இயேசு தன் சீடர்கள் படகிற்குப் போகும்படி கட்டாயப்படுத்தினார், வலுக்கட்டாயமாக அனுப்பினார் என்று வருகிறது. அதன் பின்பு இயேசு மலையின் மேல் ஏறி, “அங்கே தனிமையாயிருந்தார்.” வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அவர் தேவனுடன் தனித்து இருந்தார்.  இயேசு ஜனங்களைக் குணமாக்கி, பெரும் கூட்ட மக்களுக்கு ஊழியம் செய்து கொண்டிருந்தாலும் கூட, அவர் ஜெபிப்பதற்கு நேரம் கண்டுபிடித்து, அந்நேரங்களில் தேவனுடன் தனிமையில் இருந்தார். அவர் தன் சீடர்களைத் துரிதமாக அனுப்பிய விதம், அவருடைய வாழ்க்கையில் அவர் ஜெபிப்பதற்கு கொடுத்த முன்னுரிமையைக் காண்பிக்கிறது. 

பயன்பாடு:  அனேக கிறிஸ்தவர்களுக்கு அனுதினமும் வேதம் வாசிக்க அல்லது ஜெபிக்க நேரம் கண்டுபிடிப்பது மிகக் கடினமாக ஒரு காரியமாக இருக்கிறது. அதிக வேலை என்று சொல்லி நான் ஜெபம் செய்யாமல் இருக்கக் கூடாது. இயேசு செய்தது போல, ஜெபம் செய்ய, அதற்கு நேரம் ஒதுக்க, என் வாழ்வில் எதையாகிலும் நான் துறக்க அல்லது விலக்கி வைக்க வேண்டியதிருக்கலாம். எனக்கு தேவை உள்ள நேரங்களில் நான் தேவனிடம் வந்து ஜெபிப்பது போல, மற்ற நாட்களில் நான் தேவனைத் தேடி வருவதில்லை. என் தேவைகள் அனைத்தையும் என் பரம பிதா நன்கறிந்திருக்கிறார். ஆகவே நான் என் தேவைகளுக்காக அல்ல, தேவனுடன் தனிமையில் இருப்பதற்காக ஜெபிக்க நேரம் ஒதுக்க வேண்டும். நான் அனுதினமும் ஜெபிப்பதற்கு  நேரம் கண்டுபிடிக்க எனக்கு உதவும் எதையும் நான் செய்வேன். “தேவனுடன் இருப்பதற்காக நேரம் செலவழிப்பதுதான் நமக்குத் தேவையான சக்தியைப் பெறுவதற்கான சிறந்த இடம்” என்று ஒரு தேவமனிதர் சரியாகச் சொல்லி இருக்கிறார்.

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, நீர் ஜீவனுள்ள தேவன். நீர் என்னை நேசிக்கிறீர். என்னுடன் அனுதினமும் பேச விரும்புகிறீர். நீரே என் வல்லமையின் ஊற்று. அனுதினமும் நான் ஜெபிக்கத் தடையாக என் வாழ்வில் இருக்கும் எதையும் அகற்ற எனக்கு உதவும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
28 ஜனவரி 2021


No comments: