Friday, January 29, 2021

பாரம்பரிய தீட்டு

  வாசிக்க: யாத்திராகமம் 7, 8; சங்கீதம் 29; மத்தேயு 15:1-20

வேதவசனம்:  மத்தேயு 15:1. அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் வந்து: 2. உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் போஜனம்பண்ணுகிறார்களே! என்றார்கள். 3. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?...6. உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.

கவனித்தல்: இயேசு பாரம்பரியங்களுக்கு எதிரானவர் என்று இந்த வேதப் பகுதி கூறவில்லை. மாறாக, தேவனுடைய வார்த்தையை அவமாக்கும் எந்தவொரு பாரம்பரியத்திற்கும் இயேசு எதிரானவர் என்பதை நாம் உறுதியாகக் கூறமுடியும். இயேசு வாழ்ந்த நாட்களில், “முன்னோர்களின் பாரம்பரியம்” வாய்மொழியாக இருந்தது. அது யூதர்களின் அனுதின வாழ்வில் அவர்கள் செய்யும் ஒவ்வொரு செய்கையிலும் ஒரு முக்கிய பங்கையும் வகித்தது. அப்பாரம்பரியங்களின் உண்மையான நோக்கம் என்னவாக இருந்ததெனில், மோசே மூலமாக தேவன் கொடுத்த நியாயப்பிரமாணத்தை ஜனங்கள் பின்பற்ற உதவ வேண்டும் என்பதாகும். ஆயினும், அவை மனிதர்களால் போதிக்கப்பட்ட வெறும் கற்பனைகளாக மாறின. தேவனுக்குக் கொடுக்க வேண்டிய இடத்தில் ஒரு பாரம்பரியத்தை வைக்கும்போது, தேவனுக்கு நாம் படைக்கும் எதுவும் உதட்டளவில் செய்யும் வெறும் சடங்காகவே இருக்கும். நம் சொல்லிலும் செயலிலும் தேவனை உயர்த்துகிறதும், நம் இருதயத்தில் இருந்து நாம் தேவனுக்குக் கொடுக்கிறதையுமே தேவன் எதிர்பார்க்கிறார். வெளிப்புறமான அல்லது சடங்காச்சாரமான தூய்மையை தேவன் விரும்புகிறதில்லை. நாம் நம் இருதயத்தில் சுத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று இயேசு  விரும்புகிறார். சங்கீதக்காரன் சொல்வது போல, நாம் “பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுது” கொள்ள வேண்டும் (சங்.29:2).

பயன்பாடு:  தெரிந்தோ அல்லது தெரியாமலோ, நம் வாழ்வில் பல பாரம்பரியங்களைப் நாம் பின்பற்றத்தான் செய்கிறோம். ஆரம்பத்தில், அவை மனிதர்களின் அனுதின வாழ்க்கைக்கு உதவ வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆயினும், நான் பின்பற்றும் எந்தவொரு சடங்கும் தேவனுடைய வார்த்தையை அவமாக்கக் கூடாது என்பதில் நான் கவனமாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும். மானம் மற்றும் அவமானம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு கலாச்சாரத்தில், பாரம்பரியம் சமுதாயத்தில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. ஆயினும், எந்த பாரம்பரியமும் தேவனை விட பெரியது அல்ல. எந்த பாரம்பரியத்தையும் விட, என் வாழ்வில் இயேசுவின் வார்த்தைகள்  மிகவும் முக்கியமானவை ஆகும். தேவனுக்கு முன்பாக எந்தவொரு பாரம்பரியமும் என்னைத் தீட்டுப்படுத்த நான் அனுமதிக்க மாட்டேன்.  தேவனுடைய வார்த்தையில் இருந்துதான் தேவனுடைய உண்மையான ஆசீர்வாதம் வருகிறது, எந்தவொரு பாரம்பரியத்திலிருந்தும் அல்ல.

ஜெபம்:  பரிசுத்த தேவனே, உம் வார்த்தைகளை அவமாக்கும் எதாவதொரு பாரம்பரியத்திற்கு நான் எப்பொழுதாவது இடம் கொடுத்திருந்தால், என்னை மன்னியும். எந்த பாரம்பரியமும் என்னைத் தீட்டுப் படுத்தாதபடி என்னைப் பாதுகாத்து, என் இருதயத்தை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க உதவும். உம் வசனத்தின் சத்தியத்தினால் என்னைப் பரிசுத்தமாக்கும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
29 ஜனவரி 2021


No comments: