Wednesday, January 27, 2021

இரட்சகராகிய தேவனிடம் நான் சொல்லும் சாக்குபோக்குகள்

வாசிக்க: யாத்திராகமம் 3, 4; சங்கீதம் 27; மத்தேயு 14:1-21

வேதவசனம்:  யாத்திராகமம் 3:7. அப்பொழுது கர்த்தர்: எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். 8. அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்க...இறங்கினேன். 10. நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார்.

கவனித்தல்: இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேதாகம வசனங்களில் தேவன் சொல்கிற வார்த்தைகளைக் கவனியுங்கள். தேவன் தம் ஜனங்களின் உபத்திரவத்தைப் பார்க்கிறார், அவர்களின் கூக்கூரலைக் கேட்கிறார், வேதனைகளை அறிந்திருக்கிறார், மற்றும் அவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்க வருகிறார்.  “ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே” தேவன் மோசேக்கு தரிசனமாகி, “வா” என்று அழைக்கிறார். ஆனால், மோசே என்ன செய்தார்! அவர் தன் சாக்குபோக்குகளை ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டிருந்தார். மொத்தத்தில் ஐந்து என நாம் வாசிக்கிறோம். மோசே தேவனிடம் கேட்டவை நியாயமான சந்தேகங்கள் மற்றும் கேள்விகள்தான் என சிலர் நினைக்கக் கூடும்.  “நான் எம்மாத்திரம்” (யாத். 3: 11), “ (உம்) நாமம் என்ன... நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன்?”(யாத். 3: 13)," அவர்கள் என்னை நம்பார்கள்; என் வாக்குக்குச் செவிகொடார்கள்; கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள்” (யாத்.4:1), “நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன்” (யாத்.4:10), “ஆண்டவரே, நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும்” (யாத்.4: 13). மோசேயின் எல்லா சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் தேவன் பொறுமையாகப் பதில் சொன்னதை நாம் வாசிக்கிறோம். ஆயினும், மோசே தன் விருப்பமின்மையையும், வேறு யாரையாவது அனுப்பும் என்று சொன்ன போது, தேவன் மோசேயின்மேல் கோபமடைந்தார். இரண்டு காரியங்களை நாம் இங்கு கற்றுக் கொள்கிறோம்: தம் ஜனங்களின் கஷ்டங்களைக் குறித்து தேவன் கரிசனையுள்ளவராக இருக்கிறார், தம் விடுதலையின் செய்தியை அறிவிக்க தேவன் நம்மை அழைக்கும்போது நாம் தயக்கமின்றி கீழ்ப்படியவேண்டும். 

பயன்பாடு: என் தயக்கங்களையும், பயங்களையும் வெளிப்படுத்தி நான் எத்தனை முறை தேவனுக்குக் கீழ்ப்படிய மனமில்லாதவனாக இருந்திருக்கிறேன்! சில நேரங்களில், என் பயங்கள், சந்தேகங்கள், மற்றும் பிரச்சனைகள் போன்றவை நான் சேவிக்கும் தேவனை விட மிகப் பெரிதுபோல எனக்குத் தோன்றி இருக்கிறது. என்னை அவருடைய வேலைக்கு அழைக்கும் தேவன் என் தேவைகள் அனைத்தையும் அறிந்திருக்கிறார் என்றும், அதைச் செய்வதற்கான பலத்தையும் தருகிறார் என்பதையும் பற்றி நான் முழு நிச்சயத்துடன் இருக்க வேண்டும். ஆச்சரியமான இரட்சகர், சர்வ வல்லமையுள்ள தேவன்! நான் அவரை எக்காலத்திலும் நம்ப முடியும். அவரைப் போல வேறொருவரும் இல்லை. 

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, உம் அன்பு மற்றும் கரிசனைக்காக நன்றி. என்னை மன்னியும் தேவனே, உம் வார்த்தைக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக அனேக முறை நான் சாக்குப் போக்குகளைச் சொல்லி விலக முயற்சி செய்திருக்கிறேன். உம்மைப் பார்ப்பதற்குப் பதிலாக, நான் என் பலவீனங்களைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன். என் தேவனே, நான் எப்பொழுதும் உம்மையே நோக்கிப் பார்க்க எனக்கு உதவும். என் செயல்கள் மற்றும் கீழ்ப்படிதல் மூலமாக நான் உம்மீது கொண்டிருக்கும் அன்பைக் காட்ட என்னை பெலப்படுத்தும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
27 ஜனவரி 2021


No comments: