Wednesday, January 20, 2021

வெற்றியின் இரகசியம்

வாசிக்க: ஆதியாகமம்  39, 40; சங்கீதம் 20; மத்தேயு 10:27-42

வேதவசனம்: சங்கீதம் 20:7. சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம். 8. அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்.

கவனித்தல்:  பலம் பொருந்திய, வலிமையான ஒரு எதிரிக்கு முன் நிற்கும் தேவ மனிதனைப் பற்றியும், அவனுடைய வெற்றிக்கான ஒரு ஜெபத்தையும் பற்றி சங்கீதம் 20 கூறுகிறது. அந்நாட்களில், போர் இரதங்களும், குதிரைகளும் ஒரு இராணுவத்தின் வலிமையை வெளிப்படுத்துகிற அடையாளங்களாகக் கருதப்பட்டன. இங்கே, இரதங்களும் குதிரைகளும் எதிரியின் பக்கத்தில் இருந்து அணிவகுத்து வருவதை நாம் பார்க்கிறோம். நாம் இங்கு காணும் யுத்தக்காட்சி என்னவெனில், (எதிரிகளாகிய) அவர்கள் இரதங்களிலும் குதிரைகளிலும் இருக்கிறார்கள். ஆனால் (தேவனை நம்புகிற) நாங்களோ எங்கள் தேவனுடைய நாமத்தில் இருக்கிறோம். சம வலிமையற்ற பலவீனமான ஒரு இராணுவத்திற்கு முன்பாக வல்லமை நிறைந்த ஒரு இராணுவம் தோற்றுப் போகும் என்பது நடைபெற சாத்தியமில்லாத ஒன்று. ஆயினும், வலிமையான எதிரிகள் தோற்கடிக்கப்பட்டனர். நாம் வாழும் இந்நாட்களில், பணம், பதவி, கல்வி, குடும்பச் செல்வாக்கு (அ) பின்புலம் , மற்றும் சமுதாய அந்தஸ்து போன்ற பல காரியங்கள் வெற்றிக்கான காரணிகளாக கருதப்படுகின்றன. ஆயினும், கர்த்தருக்குள் நாம் இருக்கும்போது, மற்றவர்களிடம் இருக்கும் எந்த பலமோ தகுதியோ நம்மிடம் இல்லையெனினும், நாம் எழுந்து நிமிர்ந்து நிற்க முடியும்.

பயன்பாடு: ஒரு வெற்றிகரமான வாழ்க்கைக்குத் தேவையானவை என மற்ற மனிதர்கள் கருதும் எதுவும் என்னிடம் இல்லாமல் இருந்தாலும், நான் கர்த்தருக்குள் இருக்கும்போது நம்பிக்கையுடன் உறுதியாக இருக்க முடியும். என் வாழ்க்கையில் எனக்கு எதிராக என்ன வந்தாலும் நான் கவலைப்படத் தேவை இல்லை. தேவன் என்னுடன் இருக்கும்போது மற்றும் நான் தேவனுடன் இருக்கும்போது, நான் எழுந்து நிமிர்ந்து நிற்க பெலத்தையும் வல்லமையையும் தேவன் தருகிறார். வாழ்க்கையில் என் வெற்றிக்கான இரகசியம் தேவனே! நான் எப்பொழுதும் தேவனை நம்புகிறேன். அவர் என்னை ஒருபோதும் கைவிடுவதில்லை.

ஜெபம்:  ஜெபங்களுக்குப் பதில்கொடுக்கிற தந்தையாகிய தெய்வமே, நான் எப்பொழுதும் உம்மையே நம்பி இருக்கவும், உம்முடன் வாழவும் எனக்கு உதவும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
20 ஜனவரி 2021


No comments: