Sunday, August 1, 2021

இந்தக் காலத்திலே நீ மவுனமாக இருப்பாயோ?

வாசிக்க: எஸ்தர் 4-6; சங்கீதம் 30; அப்போஸ்தலர் 22:1-21

வேத வசனம்எஸ்தர் 4: 14. நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான்.

கவனித்தல்: எல்லா யூதர்கள்களுக்கும் எதிரான ஆமானின் கோபமானது நியாயமற்றதாக தோன்றுகிறது. மேலும் ஆமானின் தீய திட்டத்திற்குப் பின் உள்ள நோக்கம் குறித்து அது பல கேள்விகளையும் எழுப்புகின்றது. மொர்தெகாய் ஆமானை நமஸ்கரிக்க மறுத்த காரணம் என்ன என்பது நமக்குத் தெரியாது. ஏனெனில், நியாயப்பிரமாணத்தில் அதற்க்கு எதிராக எந்த சட்டமும் இல்லை. மொர்தெகாய் மற்றும் ஆமானின் மூதாதையருடைய பெயர்கள் இஸ்ரவேலருக்கும் அமலேக்கியருக்கும் இடையே இருந்த நீண்டகாலப் பிரச்சனையை நமக்கு நினைவுபடுத்துகிறது (யாத்.17:14-16; 1 சாமு.15:7-9). ஆகாகியனாகிய ஆமான் பென்யமீனனாகிய மொர்தெகாயை பழிவாங்க விரும்பி இருக்கலாம். ஆமான் பேரரசில் உள்ள அனைத்து யூதர்களையும் கொன்று போடும் தன் திட்டத்திற்கு ஆதரவாக வெற்றிகரமாக ராஜாவை சம்மதிக்கப்பண்ணி விட்டான். யூதர்களை அழித்து, அவர்களைக் கொள்ளையிடும் தன் திட்டத்தை— தேவனுடைய மீட்பின் திட்டத்திற்கு  எதிரான அவனுடைய திட்டத்தை—எவரும் தடுத்து நிறுத்த முடியாது என ஆமான் நினைத்திருக்கக் கூடும். மகாராணி எஸ்தருடைய யூதப் பிண்ணனி மற்றும் மொர்தெகாய் உடனான அவளுடைய உறவு நிலை என்ன என்பதை ஆமானுக்கு எதுவும் தெரியவில்லை.

”இந்தக் காலத்திலே,” தன் ஜனங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எஸ்தருக்கு உண்டு என்பதை நினைவுபடுத்தவும், ராஜா முன் தன் ஜனங்களுக்காக முறையிடவும் வேண்டும் என்று மொர்தெகாய் எஸ்தருக்கு செய்தி அனுப்பினான். யூதர்களுக்காக எஸ்தர் பரிந்து பேச வேண்டும் என்பதில் மொர்தெகாய் உறுதியாக இருந்தார். அதன் பின், சூசானில் உள்ள அனைத்து யூதர்களையும் ஒன்று கூட்டி உபவாசம் இருக்கும்படி எஸ்தர் மொர்தெகாயிடம் கேட்டுக் கொள்கிறாள்.  “இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன்” என்ற தீர்மானத்துடன் அவளும் அவர்களுடன் இணைந்து உபவாசம் இருந்தாள் (எஸ்தர் 4:16).  தன் ஜனங்களுக்காகப் பரிந்து பேசும்படி ராஜாவிடம் எஸ்தர் போவதற்கு முன், உபவாசம் மற்றும் ஜெபத்தில் தன் ஜனங்களுடைய துன்பத்தில் பங்கு கொண்டாள். இப்படிப்பட்ட ஒரு காலத்தில் தன் ஜனங்களைப் பாதுகாக்க அவள் என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்டிருக்க வேண்டும். யோசேப்பிற்கும் இது போன்ற ஒரு அனுபவம் இருந்தது (ஆதி.45:7). ஒரு குறிப்பிட்ட இடத்தில் அல்லது வேலையில் நாம் இருப்பது தற்செயலானது அல்ல. ஒரு பிரச்சனை வரும்போது, ஜெபத்துடனும் உபவாசத்துடனும், செய்யக் கூடியவைகளை நாம் செய்ய வேண்டும். அதன் பின், தேவன் மற்ற எல்லா காரியங்களையும் பார்த்துக் கொள்வார் என்றும் நம் மூலமாக அவர் மகிமைப்படுவார் என்றும் நாம் உறுதியுடன் இருக்க முடியும். ஆமானின் தீய திட்டங்களை தடுத்து நிறுத்திய தேவன் தம் ஜனங்களை எல்லா ஆபத்துகள் மற்றும் வியாதிகளில் இருந்தும் பாதுகாக்க இன்றும் உண்மையுள்ளவராக இருக்கிறார். தேவனை நம்பி, நாம் நம் ஜனங்களுக்காக பரிந்து பேசி, அவர்களுக்காக ஏதாகிலும் செய்யக் கூடியதை செய்யத் துவங்க வேண்டும். நாம் மவுனமாக இருக்கக் கூடாது.

பயன்பாடு: என் வாழ்வைக் குறித்த அழைப்பும் நோக்கமும் தேவனிடம் உண்டு. எனக்கு அல்லது தேவ ஜனங்களுக்கு எதிராக ஒரு ஆபத்து வருவதற்கு முன்னரே, தேவன் அவைகளை அறிந்திருக்கிறார் மற்றும் அவைகளை எதிர்கொள்ள எனக்குத் தேவையானவைகளை முன்னமே ஆயத்தம் பண்ணித் தருகிறார். நான் சவாலான நேரங்களில் தேவனை நம்பி, அவருடைய உதவிக்காக ஜெபிக்க முடியும். தேவனுடைய வல்லமை மீதான விசுவாசத்தில் நான் செயல்படும்போது, அவர் பெரிய காரியங்களைச் செய்கிறார்.

ஜெபம்: பிதாவாகிய தேவனே, கடுமையான துன்பங்கள் மற்றும் பாடுகளில் இருப்பவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் என நினைவு படுத்துவதற்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, ஜெபத்திலும் உபவாசத்திலும் நான் அவர்களுக்காக பரிந்து பேசி விண்ணப்பம் செய்யவும், உம்மில் நிலைத்திருக்கவும் எனக்கு உதவும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 212

No comments: