Thursday, August 5, 2021

உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு.

வாசிக்க: யோபு 5,6; சங்கீதம் 34; அப்போஸ்தலர் 24

வேத வசனம்அப்போஸ்தலர் 24: சில நாளைக்குப்பின்பு பேலிக்ஸ் யூதஸ்திரீயாகிய தன் மனைவி துருசில்லாளுடனேகூட வந்து, பவுலை அழைப்பித்து, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தைக் குறித்து அவன் சொல்லக்கேட்டான்.
25. அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும் குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்.
26.
மேலும், அவன் பவுலை விடுதலைபண்ணும்படி தனக்கு அவன் பணங்கொடுப்பானென்று நம்பிக்கையுள்ளவனாயிருந்தான்; அதினிமித்தம் அவன் அநேகந்தரம் அவனை அழைத்து, அவனுடனே பேசினான்.  

கவனித்தல்: பலர் இயேசுக் கிறிஸ்துவின் போதனைகள் மற்றும் நற்செய்தின் எளிமை ஆகியவற்றைக் போற்றுகின்றனர். ஆயினும் பெரும்பாலானோர் (பல கிறிஸ்தவர்களும் கூட) தங்கள் காதுகளுக்கு இதமான, மனதுக்கு இனிமையான செய்திகளை மட்டுமே கேட்க விரும்புகின்றனர். தங்களை எதிர்க்கிற செய்திகளைக் கேட்பதை மக்கள் பொதுவாக விரும்புவதில்லை. இங்கே, (மார்க்கத்தின் [ஆதிச் சபை கிறிஸ்தவர்கள் மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றுதான் முதலாவது அழைக்கப்பட்டனர்] விஷயங்களை விவரமாய் அறிந்திருந்த) ரோம தேசாதிபதியாகிய பேலிக்ஸ் தன் யூத மனைவியுடன் பவுலை சந்தித்து ”கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தைக் குறித்து” கேட்டான் என நாம் வாசிக்கிறோம்.  அந்நாட்களில் தத்துவ ஞானிகள் மற்றும் சிறந்த ஆசிரியர்களை ஆட்சியாளர்கள் தனிப்பட்ட முறையில் சந்தித்து தங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளச் செல்லும்போது, அவர்கள் ஆட்சியாளர்களின் நம்பிக்கை அல்லது பரிசுகளைப் பெறுவதற்காக அவர்கள் மனம் நோகாமல் பேச முயற்சி செய்வார்கள். மோசமான பின்விளைவுகளுக்குப் பயந்து, ஆட்சியாளர்களுக்கு எதிராக அவர்கள் எதையும் சொல்ல மாட்டார்கள். பவுலோ நற்செய்தியை பிரசங்கிக்கவும்,  பேலிக்ஸ் மற்றும் துருசில்லாளின் உடனடி தேவை—நீதி, இச்சையடக்கம், இனிவரும் நியாயத்தீர்ப்பு—குறித்து பேசவும் பயம் இல்லாதவராக இருந்தார். இந்த மூன்று காரியங்களை குறிப்பாக பவுல் ஏன் வலியுறுத்திப் பேசினார் என நமக்குத் தெரியாது. ஆனால் பவுல் தேர்ந்தெடுத்த தலைப்புகள் சரிதான் என்பதை வரலாறு நமக்கு உறுதிப்படுத்துகிறது. பவுலின் செய்திக்கு பேலிக்ஸ் கொடுத்த மறுமொழியைக் கவனியுங்கள்: அவன் பயமடைந்து, பவுலை தன்னை விட்டு போகச் செய்தான். பவுல் பேசிய வார்த்தைகள் அவனுடைய மனச்சாட்சியை உலுக்கி, அவன் செய்த பாவங்களைக் குறித்த உணர்வைக் கொடுத்திருக்க வேண்டும். பவுல் சொன்ன செய்தியை மேற்கொண்டு கேட்கவும் ஏற்றுக் கொள்ளவும் விருப்பம் இல்லாமல், ”இப்பொழுது நீ போகலாம்” என்று சொல்லி அவன் பவுலை பேச விடாமல் தடுத்து நிறுத்தினான். பவுல் பிரசங்கித்த செய்தியைக் ஏற்றுக் கொள்ள மனதில்லாதிருந்த பேலிக்ஸ், பவுலிடம் இருந்து பணம் (சட்டத்திற்குப் புறம்பாக) வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அனேகந்தரம் அவனைப் போய்ப் பார்த்தான். அடுத்த இரண்டு வருடங்களில் பவுலிடம் இருந்து நற்செய்தியைக் கேட்பதற்கு ஏற்ற சமயத்தை அவன் கண்டு பிடிப்பதற்கு முன்பே, அவனுடைய பதவி அவனிடம் இருந்து பறிக்கப்பட்டது.

இயேசுவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற முடிவை தள்ளிப்போடுகிறவர்கள், இயேசுவே ஆண்டவர் என்று அறிக்கை செய்வதற்கு அவர்களுக்கு வசதியான நேரத்தை மீண்டும் கண்டுகொள்வதே இல்லை. சிறையில் இருந்து வெளிவந்தால், அனேகருக்குப் பிரசங்கிக்க முடியும் என்று நினைத்து, பவுல் தேசாதிபதியைப் பிரியப்படுத்த முயற்சி செய்து, பணம் ஒழுங்கு பண்ணி இருந்திருக்கலாம். ஆனால் அவன் அதை செய்ய வில்லை. நற்செய்தியை அறிவிப்பதற்கு அவனை தெரிந்தெடுத்த இயேசுவிற்கு உண்மையுள்ளவனாக இருப்பதை பவுல் தெரிந்து கொண்டார். அது அவருக்கு அரண்மனைகளில் கர்த்தரைக் குறித்துப் பேசுவதற்கான வாய்ப்புகள் பலவற்றைக் கொடுத்தது. இயேசுவின் மார்க்கத்தை ஏற்றுக் கொள்ள பேலிக்ஸ் ஆயத்தமாக இருக்கவில்லை.  கிறிஸ்துவுக்காக உண்மையுடன் வாழவும், நற்செய்தியை பிரசங்கிக்கவும் நாம் ஆயத்தமாக இருக்கிறோமா? நம் தேவனை சந்திக்க ஆயத்தம் உள்ளவர்களாக நாம் இருக்க வேண்டும்.

பயன்பாடு: நீதி, இச்சையடக்கம், மற்றும் இனிவரும் நியாயத்தீர்ப்பையும் குறித்துப் பேசும் செய்திகள் எல்லா காலத்திற்கும் பொருந்தக் கூடியவை ஆகும். மக்கள், குறிப்பாக ஆட்சியாளர்கள், தாங்கள் செய்வதெல்லாம் சரி என்று நினைக்கிறார்கள். மற்றவர்கள் அவர்களைக் கேள்வி கேட்பதை அவர்கள் விரும்புவதில்லை நான் அவர்களைப் போல இருக்கக் கூடாது. என் “நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது” (ஏசாயா 64:6). இயேசுகிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தால் நான் நீதிமானாக்கப் பட்டிருக்கிறேன். கிறிஸ்துவே என் நீதி ஆவார். இச்சையடக்கம் என்பது ஆவியின் கனியில் ஒரு பகுதி ஆகும். நான் இயேசுவுக்குச் சொந்தமானவன்; நான் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறேன் (கலா.5:22-24). நான் தேவனுக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். என் வாழ்க்கை இந்த உலகத்தில் முடிந்து போவதில்லை. நித்திய ஜீவனுக்கு கிறிஸ்து என்னை அழைத்திருக்கிறார். நான் தேவனுக்கு முன்பாக நிற்க ஆயத்தம் உள்ளவனாக இருக்க வேண்டும்.

 ஜெபம்:  இயேசுவே, பாவத்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையைக் கொடுக்கிற நற்செய்திக்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, தாமதம் இன்றி உம் வார்த்தையைக் ஏற்றுக் கொண்டு பின்பற்றும் இதயத்தை எனக்குத் தாரும். அனுதினமும் ஆவியின் கனியைக் கொடுக்கிறவனாக வாழ எனக்கு உதவும். என் தேவனே, பயம் இன்றி நற்செய்தியைப் பிரசங்கிக்கவும், உம்மைச் சந்திக்கும்படி மக்களை ஆயத்தப்பட உதவவும் என்னை பலப்படுத்தி அருளும். ஆமென்.  

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 216

No comments: