Friday, August 13, 2021

விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல்

வாசிக்க: யோபு 21,22; சங்கீதம் 42; ரோமர் 4

வேத வசனம் ரோமர் 4: 23. அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதென்பது, அவனுக்காகமாத்திரமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.
24. நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும்.
25. அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.

கவனித்தல்: ஆதியாகம் 15:6ம் வசனத்திற்கு பவுல் கொடுக்கும் விளக்கவுரையாக ரோமர் 4ம் அதிகாரம் இருக்கிறது. அதில், ஆபிரகாம் கிரியைகளினாலோ அல்லது நியாயப்பிரமாணத்தினாலோ அல்ல விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்பட்டான் என்பதை பவுல் விளக்குகிறார். ”ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.” விசுவாசிக்கிற அனைவருக்கும் ஆபிரகாம் தகப்பனானான் – அவன் விசுவாசிகளின் தகப்பன். நாம் ஆபிரகாமின் விசுவாச அடிச்சுவடுகளில் நடப்பதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும் ஆபிரகாம் எப்படி விசுவாசித்தான் என்பதையும், ஆபிரகாமின் விசுவாசத்தை சிறப்பானதாக, தனித்துவமானதாக தேவன் ஏன் கருதினார் என்பதையும் ரோமர் 4:18-22 விளக்குகிறது. ஆபிரகாம் பலவீனமானவனாக இருந்தான், ஆனால் அவன் விசுவாசத்தில் பலவீனமாக இருக்கவில்லை. ஆபிரகாமின் விசுவாசம் குருட்டு விசுவாசம் அல்ல; தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லமை உள்ளவர் என்ற நம்பிக்கையில் கட்டப்பட்ட விசுவாசம் ஆகும். ஜான் ஸ்டாட் என்ற அறிஞர் சொல்வது போல, “விசுவாசம் என்பது பகுத்தறிகிற ஒரு நம்பிக்கை ஆகும். எந்த யோசனையும் இன்றி ஒருவர் விசுவாசிக்க முடியாது. வேதாகமத்தின் மற்ற பகுதிகளைப் போல, ஆபிரகாமின் அனுபவம் நம் அனைவருக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது என்று 23ம் வசனத்தில் இருந்து பவுல் எழுதுகிறார். நாம் ஆபிரகாமின் விசுவாச முன்மாதிரியை பின்பற்ற அழைக்கப்பட்டிருக்கிறோம். இயேசுவை தேவன் மரித்தோரில் இருந்து உயிரோடே எழுப்பினார் என நாம் விசுவாசிக்கும்போது, ஆபிரகாமை அவனுடைய விசுவாசத்தின் நிமித்தம் நீதிமானாக்கியது போல, தேவன் அதை நமக்கு நீதியாக எண்ணுகிறார்.

 இந்நாட்களில், பலவிதமான விசுவாசத்தைப் பற்றி ஜனங்கள் பிரசங்கிக்கவும், வலியுறுத்தவும் செய்கிறார்கள். விசுவாசம் என்பது பொருளாதார ஆசீர்வாதங்களுக்கான சாவி (அ) திறவுகோல் என சில கிறிஸ்தவர்கள் நினைக்கின்றனர். சிலர் இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கின்றனர், ஆனால் அவருடைய சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை விசுவாசிப்பதில்லை. இயேசுவைப் பற்றி நாம் என்ன விசுவாசிக்க வேண்டும் என்பதை 25ஆம் வசனத்தில் நாம் காண்கிறோம்—இயேசு நம் பாவங்களுக்காக மரித்தார், நாம் நீதிமான்களாக்கப்படும்படி தேவன் அவரை மரித்தோரில் இருந்து உயிரோடே எழுப்பினார். இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு சான்றுபகரும் ஆதாரங்கள் ஏராளம் நம்மிடம் உண்டு. ஆகவே, நாம் எந்த சாக்குப்போக்குகளையும் சொல்ல முடியாது. இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நம்புவது பகுத்தறிவுக்கு எதிரானது அல்ல. இயேசுவின் மீதான நம் விசுவாசம் கட்டுக்கதைகள் மீது கட்டப்பட்டது அல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக, தேவன் மீதான நம் விசுவாசம் நமக்குப் பலனளிக்கிறதாக இருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் மீதுள்ள நம் விசுவாசத்தினால் நாம் நீதிமான்களாக்கப்படுகிறோம்.

பயன்பாடு: ஆபிரகாம் நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்த சூழ்நிலையிலும் தேவனை நம்பினான். தேவனுடைய வார்த்தைகளை வாசிக்கவும், விசுவாசிக்கவும் அவர் வேதாகமத்தை எனக்குத் தந்திருக்கிறார். தேவனை சந்தேகிப்பதற்கு என்னிடம் காரணம் ஏதும் இல்லை. அவர் என் விசுவாசத்தைக் காண்கிறார். இயேசு என் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் என்றும், என்னை நீதிமானாக்குவதற்காக எழுப்பப்பட்டும்  இருக்கிறார் என நான் விசுவாசிக்கிறேன்.

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, விசுவாசத்தினால் வரும் நீதியினால் எங்களை இரட்சிப்பதற்கு நீர் காட்டிய உம் கிருபைக்காக நன்றி. பரிசுத்த ஆவியானவரே, இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் குறித்த என் சந்தேகங்கள் அனைத்தையும் தெளிவுபடுத்துகிறதற்காக உமக்கு நன்றி. எல்லா இடங்களிலும், எல்லா நாட்களிலும், நான் உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் மீதுள்ள என் விசுவாசத்தை அறிவிக்க எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 224

No comments: