Wednesday, August 18, 2021

தேவன் அநீதி செய்வாரா?

வாசிக்க: யோபு 31,32; சங்கீதம் 47; ரோமர் 9

வேத வசனம் ரோமர் 9: 13. அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது.
14. ஆகையால் நாம் என்ன சொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே.
15. அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார்.
16. ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.

கவனித்தல்:தேவன் ஏசாவை வெறுக்கக் காரணம் என்ன?” என்று வேதாகமத்திற்கு எதிராக விமர்சனம் செய்பவர்கள் கேள்வி கேட்கிறார்கள்.  ரோமர் 9:13 ஐ புரிந்து கொள்வதும், விளக்குவதும் கடினம் என சில கிறிஸ்தவர்களும் நினைக்கின்றனர். “தேவன் ஏசாவை வெறுத்தேன் என்று ஏன் சொல்லவேண்டும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று ஸ்பர்ஜன் அவர்களிடம்  ஒரு பெண் கேட்டார். அதற்குப் பதிலளிக்கும்போது, “அது அவ்வளவு கடினமானது அல்ல, மேடம். யாக்கோபை தேவனால் எப்படி நேசிக்க முடிந்தது என்பதைப் புரிந்து கொள்வதுதான் எனக்குச் சிரமமாக இருக்கிறது” என்று ஸ்பர்ஜன் சொன்னார். இன்னமும் சிலர், அன்பின் தேவனால் எப்படி பிறக்காத ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்னரே வெறுக்க முடியும்? என்று சிலர் கேட்கக் கூடும். ஏசாவிடம் தேவன் அநியாயமாக நடந்து கொண்டாரா? இந்தக் கேள்விக்கு விடைகாண்பதற்கு முன், தேவன் எதையும் திட்டமிடாமல் தான் தோன்றித்தனமாக மனம் விரும்பியபடி விசித்திரமாக செயல்படமாட்டார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். மத்தேயு 6:24, 10:37, லூக்கா 14:26, மறும் யோவான் 12:25 ஆகிய வசனங்களில், நம் குடும்பம் மற்றும் மற்ற எதையும் விட இயேசுவை முதலாவதாக நேசிக்க வேண்டும் என்று அவர் சொல்வதை நாம் காண்கிறோம். ஆகவே, ஏசாவை தேவன் வெறுத்தார் என்பதை நாம் அப்படியே பொருள் எடுத்துக் கொள்ளக் கூடாது. சர்வத்தையும் ஆளுகை செய்யும் தேவன் ஒரு மனிதனை தெரிந்து கொள்ளும்போது. அவனுக்கென்று ஒரு திட்டத்தை தேவன் வைத்திருப்பார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தேவன் தாம் விரும்பியதைச் செய்யும் உரிமை உடையவராக இருக்கிறார். அதை நாம் ஒருவேளை இப்போது புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். தேவனிடத்தில் அநீதி இல்லை என்பதை அப்போஸ்தலனாகிய பவுல் மிகவும் உறுதியுடன் கூறுகிறார். தேவனிடத்தில் நீதிபரர் என்பதை நிரூபிக்க தேவனுடைய இரக்கத்தைப் பற்றி பவுல் குறிப்பிடுகிறார். தேவனுடைய இரக்கத்தை எவரும் கிரியைகளினால் பெறமுடியாது. நாமெல்லாரும் பாவம் செய்து தேவமகிமையற்றவர்களாகிப் போனோம் (ரோமர் 3:23).  ஆனால் கிருபையின் தேவன் நம் மீது இரக்கமாயிருந்து, இயேசு கிறிஸ்துவின் மூலமாக இரட்சிப்பைப் பெறுவதற்கு நம்மை நீதிமானாக மாற்றி இருக்கிறார். தேவன் நீதியும் அன்பும் உள்ளவர் என்பதை தேவனுடைய இரக்கங்கள் நமக்கு நினைவுபடுத்துகிறது.

பயன்பாடு: நான் ஆராதிக்கும் தேவன் அனைத்தையும் ஆளுகை செய்கிறவராக இருக்கிறார். அவர் ஒருபோதும் அநியாயம் செய்ய மாட்டார். சமயங்களில், சில குறிப்பிட்ட காரியங்களை நான் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும்போது, தேவனைச் சந்தேகப்படுவதற்குப் பதிலாக, அனைத்தையும் உள்ளடக்கிய தேவனுடைய பரந்த சித்திரத்தைப் பார்க்க நான் முயற்சி செய்ய வேண்டும்.  தேவன் அனைவரையும் நேசிக்கிறார், அவருடைய இரட்சிப்பை எல்லோரும் பெற முடியும். அதை மனித முயற்சிகளினால் பெற்றுக் கொள்ள முடியாது. ”கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல” (எபே.2:8-9) என்று வேதாகமம் எனக்கு நினைவு படுத்துகிறது.

ஜெபம்: நீதிபரராகிய தேவனே, என் வாழ்க்கையில் நீர் காண்பித்த இரக்கங்களுக்காக உமக்கு நன்றி. உம் அன்பையும் இரக்கத்தையும் பெற நான் தகுதியற்றவன். அனைத்தையும் ஆளுகை செய்யும் தேவனே, உம் செயல்களைக் காண என் கண்களைத் திருந்தருளும்.  பிதாவாகிய தேவனே, உம்மை எப்பொழுதும் நேசிக்கவும், எல்லாவற்றிலும் நம்பவும் எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 229

No comments: