Thursday, August 26, 2021

பண ஆசை, ஒரு முடிவிலா பயணம்

வாசிக்க: பிரசங்கி 5,6; சங்கீதம் 55; 1 கொரிந்தியர் 1

வேத வசனம் பிரசங்கி 5: 10. பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே.

கவனித்தல்: அனேகர் பணத்தைக் கொண்டு எதையும் வாங்கிவிடமுடியும் என்று நினைக்கிறார்கள். தங்களுக்கு தேவையான அளவு பணத்தை உடையவர்கள் வாழ்வில் அவர்கள் விரும்பும் அனைத்தையும் உடையவர்களாக இருப்பார்கள் என்று சிலர் நம்புகிறார்கள். ஆயினும், நமக்குத் தேவையான அனைத்தையும் பணத்தினால் விலைகொடுத்து வாங்க முடியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்று ஆகும். பணம் மற்றும் செல்வம் பற்றி பிரசங்கி 5ஆம் அதிகாரம் சில முக்கியமான உண்மைகளை நமக்குப் போதிக்கிறது. பண ஆசையுடையவர்கள் மற்றும் செல்வப்பிரியர் ஒருபோதும் திருப்தியடைவதில்லை என வசனம் 10 கூறுகிறது. தன்னிடம் இருக்கும் பணம் மற்றும் செல்வம் குறித்து மன திருப்தியுடன் இருப்பவர்களைக் காண்பதரிது. ஒருவருடைய வாழ்வில் மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் கொண்டு வருவதற்குப் பதிலாக, அபரிதமான பணம் மற்றும் செல்வமானது தூக்கமின்மையையும், கவலைகளையும், மன அழுத்தங்களையும் மற்றும் கேடுகளையும் உண்டாக்குகிறது (வ.11-13). ஆயினும், பண ஆசை உடையவர்கள் இன்னும் அதிகமதிகமாக சொத்துக்களைச் சேர்ப்பதை நிறுத்துவதில்லை. ”பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்” என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது (1 தீமோ.6:10).

மறுபக்கத்திலோ, உண்மையான திருப்தியானது தேவனிடம் இருந்து வருகிறது என்று பிரசங்கி சொல்கிறார். ”தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்” (பிர.5:18-19). ”ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனைத்” தருகிறவர் தேவனே (உபா.8:18). ”கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்” என்று நீதி.10:22 கூறுகிறது. தேவ மனிதராக இருக்கும் ஒரு ஆண் அல்லது பெண் பண ஆசைக்கு விலகி இருக்க வேண்டும் (1 தீமோ.6:11). பண ஆசையானது பொருளாசைக்கு நம்மை வழிநடத்துகிறதாக இருக்கிறது. பொருளாசை என்பது விக்கிரகாராதனை என்றும், விக்கிரக வணக்கத்தை சேர்ந்தவர்கள் ”தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லை” என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது (எபே.5:10; கொலோ.3:5). எந்தச் சூழ்நிலையிலும் நாம் மனரம்மியமாக இருப்பதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். தேவனுடைய நோக்கங்களுக்காகவும் தேவை உள்ளவர்களுக்கு உதவுவதற்காகவும் செலவழிக்க நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்.

 பயன்பாடு:போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்” என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். பண ஆசையானது என் வாழ்வில் கொண்டு வருகிற ஆபத்துகளைப் பற்றி நாம் எச்சரிக்கையாக இருந்து, அவைகளை விட்டு விலகி ஓட வேண்டும். பரலோகத்தில் நான் பொக்கிஷங்களை சேர்த்து வைப்பேன்.

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, உம் அன்பு, மன்னிப்பு, மகிழ்ச்சி மற்றும் சமாதானத்தை எனக்குத் தந்ததற்காக உமக்கு நன்றி. என் வாழ்வின் மகிழ்ச்சியை, பணத்திலோ அல்லது உலகப் பிரகாரமான உடைமைகளிலோ நான் கண்டு கொள்ள முடியாது.  மாறாக, உம்மில் மட்டுமே நான் கண்டு கொள்ள முடியும். ஆண்டவராகிய இயேசுவே, வேறெதைக் காட்டிலும் அதிகமாக உம்மை நேசிக்கவும், உம் மகிமைக்காக வாழவும் எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 237

No comments: