Friday, August 6, 2021

காரணமின்றி மற்றவர்கள் உங்களை வெறுக்கும்போது…

வாசிக்க: யோபு 7,8; சங்கீதம் 35; அப்போஸ்தலர் 25

வேத வசனம்சங்கீதம் 35: 28. என் நாவு உமது நீதியையும், நாள்முழுதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்.

கவனித்தல்: சங்கீதப் புத்தகத்தில் தேவனுக்கு அல்லது தனக்கு எதிரானவர்களுக்கு நியாயத்தீர்ப்பு உண்டாகவேண்டும் என்று முறையிடுகிற சங்கீதங்களில் (Imprecatory Psalms) சங்கீதம் 35 ம் ஒன்றாகும். சங்கீதம் 35 ல், காரணமின்றி தன்னைத் தாக்குகிறவர்களிடம் இருந்து பாதுகாக்குமாறு, தாவீது தேவனிடம் வேண்டுகிறார். தாவீதைக் கொல்வதற்காக சவுல் அவனை துரத்தி பின் தொடர்ந்து சென்ற போது இந்த சங்கீதத்தை எழுதி இருக்கலாம் என இதில் உள்ள வசனங்கள் உணர்த்துகின்றன. தனக்கு எதிராக வந்தவர்களிடம் இருந்து சந்தித்த பலவித தாக்குதல்கள் பற்றி தாவீது சொல்கிறார்: சரீரப் பிரகாரமான தாக்குதல் (வ.1-10), தனிப்பட்ட தாக்குதல் (வ.11-18), மற்றும் அவதூறுகள் நிறைந்த தாக்குதல் (பொய் குற்றச்சாட்டுகள், வ.19-20). முகாந்திரமில்லாத (அ) காரணமில்லாத இத்தாக்குதல்கள் தாவீதின் வாழ்வில் வியாதியையும் ஆபத்தையும் (வ.13, 26) உண்டாக்கியது. வெறுப்பு நிறைந்த தாக்குதல்களுக்கு எதிராக பதிலடி கொடுப்பது அல்லது எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக, அவரை தாக்கினவர்களுக்கு உரிய நீதியை செய்யும்படி தேவனிடம் தாவீது கேட்கிறார். தன் கோரிக்கைகள் அல்லது விண்ணப்பங்களை முடிக்கும் ஒவ்வொரு முறையும், தாவீது தேவனை துதிப்பதற்கு உறுதி கூறுகிறார் (வ.9,18,28). தன் உள்ளான மற்றும் புறம்பான போராட்டங்கள் மற்றும் பிரச்சனைகளைக் குறித்து தேவனிடம் முறையிடுகிற போது, தேவனைத் துதித்தல் பற்றி அதிக முக்கியத்துவம் கொடுத்து முடிக்கிறார். பொய் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் கொடுத்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, தேவனுடைய நீதியையும், நாள் முழுதும் தேவனை துதிக்கவும் விரும்புவதாக கூறுகிறார்.

காரணமின்றி நாம் தவறாக நடத்தப்பட்டால் அல்லது பொய் குற்றச்சாட்டுகள் நம் மீது சுமத்தப்பட்டால், நம் பதில் அல்லது எதிர்வினை என்னவாக இருக்கும்? நம் பக்கத்தில் தவறு இல்லை என்பதை நிரூபிக்கவோ அல்லது குற்றச்சாட்டுகள் எல்லாம் தவறானவை என்பதை நிரூபிக்கும் விரிவான விளக்கம் கொடுக்கவோ நாம் விரும்பக் கூடும். ஆயினும், நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதில் கொடுத்துக் கொண்டிருப்பதும், எல்லா பிரச்சனைகளையும் கையாளுவதும் நமக்குக் கடினம் ஆகும். நாம் ஏதாகிலும் செய்து நம்மை நிரூபிப்பதற்குப் பதிலாக, தேவன் நம் யுத்தங்களை நடத்தவும், நம்மைப் பாதுகாக்கவும் நாம் அனுமதிக்க வேண்டும். தாவீதைப் போல,  தேவைகள், பிரச்சனைகள், மற்றும் கவலைகள் வரும் காலங்களில் தேவன் மீது நம் கவனத்தை வைக்க வேண்டும். நாம் தேவனைத் துதித்து ஆராதிக்கும்போது, வாழ்வில் நாம் எதிர்கொள்ளக் கூடிய எந்தப் பிரச்சனைகளையும் விட நம் தேவன் மிகப் பெரியவர் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.

பயன்பாடு: நான்  பொய் குற்றச்சாட்டுகள் மற்றும் காரணமற்ற தாக்குதல்களை எதிர்கொள்ளும்போது, நான் தேவனிடம் சென்று அவர் என்னைப் பாதுகாத்து நியாயம் செய்யும்படி அவரிடம் கேட்க வேண்டும்.  விளக்கங்களைக் கொடுப்பதில் அல்லது எனக்கு எதிராக இருப்பவர்களை பழிவாங்குவதில் என் சக்தியை நான் விரயம் செய்யக் கூடாது.  நான் எதிர்கொள்கிற பிரச்சனைகளுக்கு எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக, நான் தேவனையும் அவருடைய நீதியையும் தேட வேண்டும். தவறான குற்றச்சாட்டுகள் அல்லத் தாக்குதல்கள் குறித்து பேசுவதும் சிந்திப்பதும் என்னை சோர்ந்து போகச் செய்கிறது. ஆனால், தேவனை துதிப்பதோ என் ஆத்துமாவை உயிர்ப்பித்து, கர்த்தருக்காக உறுதியாக நிற்பதற்கான பலத்தை எனக்குத் தருகிறது. நான் நாள் முழுதும் தேவனைத் துதிக்க முடியும்.

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, நீரே என் இரட்சகர்; நீர் பலவீனரைப் பாதுகாக்கிறவர். இதுவரையிலும் என் வாழ்வில் நீர் செய்து வந்த அதிசயமாக காரியங்களுக்காக உம்மைத் துதிக்கிறேன்.  ஆண்டவராகிய இயேசுவே, முகாந்திரமில்லாமல் மற்றவர்கள் என்னைப் பகைத்து வெறுக்கும்போது, உம்மையும் உம் வார்த்தைகளையும் நினைவு கூர உதவியருளும். என் தேவனே, என் எதிரிகளை நீர் ஆசீர்வதியும். இந்நாள் முழுதும் உம்மைத் துதிப்பதற்கு உம் ஆவியை எனக்குத் தந்தருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 217

No comments: