Tuesday, August 31, 2021

நீ உனக்கு சொந்தமல்லவே!

வாசிக்க: உன்னதப்பாட்டு 3,4; சங்கீதம் 60; 1 கொரிந்தியர் 6

வேத வசனம்: 1 கொரிந்தியர் 6: 19. உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?
20.
கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.

கவனித்தல்: கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே” என்பது ஒரு இந்தியப் பழமொழி. முன்னாட்களில், கலாச்சாரப் நடைமுறைகள் மற்றும் சமுதாய வாழ்வில் கோவில்கள் முக்கிய பங்கை வகித்தன. கொரிந்துப் பட்டணம் ஒரு முக்கியமான வியாபார மையமாகவும், அதில் இருந்த கோவில்களுக்காக, குறிப்பாக, அப்ரோதீத்துவின் கோவிலுக்காக நன்கறியப்பட்ட ஒரு இடமாக இருந்தது.  காதல், காமம், மற்றும் இனப்பெருக்கத்துக்கான கடவுளாக அப்ரோதீத்துவை மக்கள் வணங்கி வந்தனர். பாலியல் ஒழுக்கக் கேடு மற்றும் மத ரீதியான அல்லது சமய விபச்சாரம் கொரிந்துவில் பரவலாக இருந்தது. கொரிந்தியருக்கு எழுதின நிருபத்தில் பவுல் குறிப்பிடும் சில ஒழுக்கம் மற்றும் நெறிமுறை சார்ந்த பிரச்சனைகள்  சபையில் கொரிந்து பட்டண கலாச்சாரத்தின்  தாக்கத்தை காட்டுகிறது.

கொரிந்து சபையில் உள்ள விசுவாசிகளில் சிலர் முன்பு பாவம் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தவர்கள் ஆவர். ஆயினும், அவர்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட போது, கழுவப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டு, நீதிமான்களாக்கப்பட்டு, தேவனுக்கு பரிசுத்தமானவர்களாக மாறினார்கள் (வ.9-11).  கிறிஸ்தவர்களான பின்பும் கூட, கொரிந்து சபையின் விசுவாசிகளினிடையே சச்சரவுகளும், வழக்குகளும், பாலியல் ஒழுக்கம் சார்ந்த கேடுகளும் இருந்து வந்தன. அவர்கள் தங்கள் தவறான செயல்களுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டிருந்தார்கள் என்பதாக தெரிகிறது (வ.12). எனவே, ஒவ்வொரு விசுவாசியும் கர்த்தருக்குச் சொந்தமானவர்கள் என்றும், அவர்களுடைய சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்கள் என்றும் பவுல் அவர்களிடம் சொன்னார் (வ.15). கிறிஸ்தவர்கள் தங்கள் பாவ வாழ்க்கையை தொடர அனுமதிக்கக் கூடாது.; அவர்கள் வேசித்தனத்திற்கு விலகி ஓட வேண்டும். கொரிந்து விசுவாசிகள் தங்கள் சொந்த சரீரத்திற்கு எதிராகப் பாவம் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்த பவுல் இரண்டு காரணங்களைக் கூறுகிறார்: ஒவ்வொரு கிறிஸ்தவரின் சரீரமும் அவர்களுக்குள் வாசம் செய்யும் பரிசுத்த ஆவியானவர் வாழ்கிற தேவ ஆலயமாக இருக்கிறது. ஒவ்வொரு கிறிஸ்தவரும் அவர்களை தன் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் விலைகொடுத்து வாங்கின கர்த்தராகிய இயேசுவுக்குச் சொந்தமானவர்கள் ஆவர். ஆகவே, விசுவாசிகள் தங்கள் சரீரங்களினால் தேவனை மகிமைப்படுத்த வேண்டும் என பவுல் அறிவுரை கூறுகிறார்.  நாம் சிந்திப்போம்: நம் சரீரங்கள் மூலமாக தேவனை நாம் மகிமைப்படுத்துவது எப்படி?

பயன்பாடு: நான் இயேசுவை நேசித்து, அவருடைய போதனைகளைக் கைக்கொள்ளும்போது, பிதாவாகிய தேவனும், இயேசுவும் என்னுள் வாசம் செய்வார்கள் என  இயேசு வாக்குப்பண்ணி இருக்கிறார் (யோவான் 14:23). இங்கே, எனக்குள் வாழ்கிற பரிசுத்த ஆவியானவரைப் பற்றி வேதம் சொல்கிறது. எங்கும் நிறைந்த தேவன், சர்வ வியாபி, எனக்குள் வாசம் செய்கிறார்! அப்படியானால், தேவனுக்குப் பிரியமான வாழ்க்கை வாழும்படி என் சரீரத்தை தீட்டுப்படுத்தாமல் இருக்க நான் எவ்வளவு அதிக கவனம் உள்ளவனாக இருக்க வேண்டும். நான் தேவனுக்குச் சொந்தம், என் சரீரமும் தேவனுக்குரியது ஆகும். ஆகவே, நான் எதைச் செய்தாலும், அவைகளை எல்லாம் தேவனுடைய மகிமைக்காக செய்ய வேண்டும். நான் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்வதற்கு என் சரீரத்தை (என் அவயவங்களை) பயன்படுத்த மாட்டேன். மாறாக, எவ்விதத்திலும் தேவனை மகிமைப்படுத்தும்படி என் சரீரத்தைப் பயன்படுத்துவேன்.

ஜெபம்: பரிசுத்த தேவனே, என்னை உம் சொந்தமாக ஏற்றுக் கொண்டு, எனக்குள் வாழ்வதற்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, என் ஆவி ஆத்துமா மற்றும் சரீரத்தில் உம்மை கர்த்தராகிய தேவனாக கனப்படுத்தி மகிமைப்படுத்த எனக்கு உதவியருளும். இயேசுவே, தேவனைத் துதிக்க, ஆராதிக்க, மற்றும் மகிமைப்படுத்த என் சரீரத்தை அனுதினமும் பயன்படுத்த உம் ஞானத்தை எனக்குத் தந்தருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 242

No comments: