Saturday, August 14, 2021

நம் பாடுகளில் களிகூருதல்

வாசிக்க: யோபு 23,24; சங்கீதம் 43; ரோமர் 5

வேத வசனம் ரோமர் 5: 3. அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து,
4.
உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்.
5. மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.

கவனித்தல்: களிகூருதல் மற்றும் உபத்திரவம் (அ) பாடுகள் ஆகிய வார்த்தைகள், அர்த்தத்தின் அடிப்படையில் ஒன்றுக்கொன்று எதிரானதாக இருக்கிறது. உபத்திரவத்தில் களிகூருதல் என்பது அபத்தமானதாகவும், பைத்தியமானதாகவும் தோன்றுகிறது. அனேக கிறிஸ்தவர்கள், அவர்கள் புரிந்து கொண்டாலும் புரிந்து கொள்ளாவிட்டாலும், ”பாடுகளில் களிகூருதல்” என்பதை ஒரு கிறிஸ்தவ கொள்கையாக ஏற்றுக் கொள்ள முயற்சி செய்கின்றனர். ”இது எப்படி சாத்தியம்?” கிறிஸ்து எனக்காக பாடுபட்டார் என்பது உண்மை எனில், நான் ஏன் பாடுபடவேண்டும்?” என்று ஒருவர் கேட்கக் கூடும்.

விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதலின் பலன்களைக் குறித்து ரோமர் 5ஆம் அதிகாரம் விளக்குகிறது. நாம் நீதிமானாக்கப்படுதல் தேவனுடன் சமாதானத்தைப் பெறவும், கிருபையில் பிரவேசிக்கும் பாக்கியத்தையும் நமக்குத் தருகிறது. இது உணர்ச்சிப் பூர்வமான ஒரு உணர்வு அல்ல, மாறாக தேவனுடனான நம் புதிய உறவில் நாம் அனுபவிக்கக் கூடிய ஒன்று ஆகும். மூன்றாம் வசனத்திற்கு முன்,  ”தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்” என பவுல் எழுதுகிறார்.  இந்த நம்பிக்கையானது நாம் சிருஷ்டிக்கப்பட்டதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ள நமக்கு உதவுகிறது. எனவே, நம் தற்கால பாடுகளும் நம் வாழ்க்கையில் தேவன் வைத்திருக்கும் நோக்கத்தை உள்ளடக்கியதாக இருக்கக் கூடும். நாம் கவலைப்படுவோமானால், நம் வாழ்க்கையில் தேவன் ஏன் உபத்திரவத்தை (அ) பாடுகளை அனுமதிக்கிறார் என்ற நோக்கத்தை புரிந்து கொள்ள தவறிவிடுவோம். நம் உபத்திரவங்களில் களிகூருதல் என்பது கிறிஸ்துவில் நமக்கிருக்கும் நம்பிக்கையை அனுபவிக்கச் செய்து தேவ ஞானத்தை அறிந்து கற்றுக் கொள்ளும் செயல்முறையை ஆரம்பித்து வைக்கிறது. நம் வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் உபத்திரவமானது தேவன் நம்மை எந்த நோக்கத்திற்காக அழைத்தாரோ அதற்கேற்றபடி நாம் மாற நமக்குப் போதிக்கிறதாகவும், நம்மை உருமாற்றுகிறதாகவும் இருக்கிறது. ஆகவே, உபத்திரவங்களில் களிகூருதலின் மூலம், ஆவிக்குரியப் பிரகாரமாக நாம் வளருவதற்கு உதவும் செயல்முறையின் ஒவ்வொரு நொடியையும் நாம் மகிழ்ச்சியாக அனுபவிக்க முடிகிறது. உலகப் பிரகாரமான நம்பிக்கை நம்மைக் கைவிட்டு, ஏமாற்றமளிக்கக் கூடும். கிறிஸ்துவில் நமக்கு இருக்கிற நம்பிக்கையானது ஒரு போதும் நம்மை வெட்கப்படுத்துவதில்லை. ஏனெனில், பரிசுத்த ஆவியானவர் நம்முடன் இருக்கிறார். அவர் நம் இருதயங்களை தேவ அன்பினால் நிரப்பி இருக்கிறார். கிறிஸ்தவர்களாக நாம் எதிர்கொள்ளக் கூடிய உபத்திரவங்கள் கர்த்தருக்குள் நாம் மகிழ்ச்சியாக இருப்பதை பாதிக்க/தடுக்க முடியாது. பாடுகளில் மகிழ்ந்து களிகூருதல் என்பது அப்போஸ்தல உபதேசம் ஆகும், இது நமக்கு அளிக்கும் பலன் அனேகம் ( யாக்கோபு 1:2-5; 1 பேதுரு 4:12-16).

 பயன்பாடு: நான் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்டிருக்கிற படியினால், இயேசு கிறிஸ்துவின் மூலமாக நான் தேவனிடம் சமாதானம் பெற்றிருக்கிறேன். நான் தேவனுடைய கிருபையில் பிரவேசிக்கும் பாக்கியத்தை என் விசுவாசமானது எனக்கு பெற்றுத் தந்திருக்கிறது. தேவனுடனான என் உறவை எதுவும் பிரிக்க முடியாது. நான் என் இருதயத்தில் சமாதானத்தைப் பெற்றிருக்கிறேன். ஆகவே, உலகப்பிரகாரமான பாடுகளைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. என் பாடுகளில் மகிழ்ந்து களிகூருவதன் மூலம், தேவன் எனக்குள் மற்றும் என் மூலமாக செய்ய விரும்புகிறவைகளை செய்ய நான் அவரை அனுமதிக்கிறேன்.

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, நீர் எனக்குத் தந்திருக்கிற கிருபை, அன்பு, சமாதானம் ஆகியவற்றிற்காக உமக்கு நன்றி. அவை திரியேக தேவன்—பிதா, குமாரன், மற்றும் பரிசுத்த ஆவியானவர்—என்னுடன் இருக்கிறார் என்பதை எனக்கு நினைவுபடுத்துகிறது. ஆகவே நான் எக்காலத்திலும், என் உபத்திரவங்களிலும் களிகூர்ந்து மகிழ முடியும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 225

No comments: