Sunday, August 8, 2021

கடினமான காலங்களில் தேவனுக்கு செவிகொடுத்தல்

வாசிக்க: யோபு 11,12; சங்கீதம் 37; அப்போஸ்தலர் 27

வேத வசனம்அப்போஸ்தலர் 27: 10. மனுஷரே, இந்த யாத்திரையினாலே சரக்குக்கும் கப்பலுக்கும் மாத்திரமல்ல, நம்முடைய ஜீவனுக்கும் வருத்தமும் மிகுந்த சேதமும் உண்டாயிருக்குமென்று காண்கிறேன் என்று சொல்லி, அவர்களை எச்சரித்தான்.
11. நூற்றுக்கு அதிபதி பவுலினால் சொல்லப்பட்டவைகளைப் பார்க்கிலும் மாலுமியையும் கப்பல் எஜமானையும் அதிகமாய் நம்பினான்.  

கவனித்தல்:   பவுல் ரோமாபுரிக்கு கொண்டு செல்லப்பட்ட போது, கப்பலில் இருந்தவர்கள் அனைவரும் கடுமையான புயல் காற்றை எதிர்கொண்டு பட்ட கஷ்டஙகளைப் பற்றிய விரிவான விவரங்களை அப்போஸ்தலர் 27ம் அதிகாரம் நமக்குத் தருகிறது. அந்தப் பயணமானது துவக்கத்தில் இருந்தே கடினமானதாக இருந்தது. அது தொலைதூரப் பயணத்திற்கு உகந்த காலம் அல்ல. ஆகவே தன் கடல்பயண அனுபவம் மற்றும் தேவ ஞானத்தில் இருந்து பயணம் செய்ய வேண்டாம் என பவுல் யூலியு மற்றும் அவனைச் சேர்ந்தவர்களிடம் சொன்னான். ஆயினும், பவுல் சொன்னதை அவன் கேட்கவில்லை. மாறாக, நல்ல துறைமுகம் என்ற இடத்திலிருந்து பேனிக்ஸ் என்ற இடத்திற்குச் சென்று மழைக்காலத்தில் பாதுகாப்பாக தங்கும்படி கப்பலின் மாலுமி மற்றும் எஜமான் சொன்ன வார்த்தைகளை ஏற்றுக் கொண்டான். நல்ல துறைமுகத்தில் இருந்து 40 மைல்கள் தொலைவில் உள்ள பேனிக்ஸிற்கு செல்ல கிளம்பிய சிறிது நேரத்திலேயே, அவர்கள் கடுங்காற்றை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. அதன் பின், மெலித்தா தீவைச் சென்றடையும் வரைக்கும், கப்பலானது அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை, காற்றின் போக்கில் கப்பல் சென்று கொண்டிருந்தது. பதினான்கு நாட்களாக அவர்கள் முறையாக உணவருந்தாமல் இருந்தனர். தங்கள் உயிரையும், கப்பலையும் அந்த பயங்கரமான புயலில் இருந்து பாதுகாப்பதற்காக, அவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக, கப்பலில் இருந்த சரக்குகள், தளவாடங்கள், மற்றும் உணவு தானியங்களைக் கூட கடலில் தூக்கி எறியவேண்டியதாயிற்று. “இனி தப்பிப்பிழைப்போமென்னும் நம்பிக்கை (அவர்களுக்கு) முழுமையும் அற்றுப்போயிற்று” (வ.20). இரண்டாம் முறை பவுல் பேசியபோது, அவர்கள் அனைவரும் பவுலின் வார்த்தைகளுக்குச் செவி கொடுத்து, மனதில் உறுதியைப் பெற்றார்கள். அவர்கள் முதலிலேயே பவுலுக்குச் செவிகொடுத்திருந்தால், அந்த பயங்கரமான பிரச்சனைகளை தவிர்த்திருக்கலாம் (வ.21). கடைசியாக, பவுலின் ஜெபத்தின் காரணமாக அந்த நம்பிக்கையற்ற சூழிநிலையில் இருந்து அனைவரின் உயிரும் பாதுகாக்கப்பட்டது (வ.24).

காற்றின் போக்கு மற்றும் கப்பல் பயணம் பற்றி பவுலை விட மாலுமியும் கப்பலின் எஜமானும் நன்கறிந்திருப்பார்கள் என அந்த நூற்றுக்கு அதிபதி நினைத்திருக்கலாம். இது போலவே, உலகப் பிரகாரமான நிபுணர்கள் அல்லது அனுபவசாலிகள் எந்தப் புயலையும் கடந்து செல்லவும், எந்தச் சூழ்நிலையையும் மேற்கொள்ளவும் முடியும் என அனேகர் நினைக்கின்றனர். புயல் வீசும் மற்றும் ஆபத்தான அனைத்து சூழ்நிலைகளின் மீதும் தேவன் ஆளுகை செய்கிறார் என்பதை அவர்கள் காணத் தவறுகிறார்கள். ஆயினும், அவர்கள் தேவனுடைய ஆளுகையை ஏற்றுக் கொண்டு, அவருடைய ஆலோசனைகளைப் பின்பற்றும்போது, தேவன் அவர்களைப் பாதுகாக்கிறார். நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் விஞ்ஞானிகள் எதிர்காலத்தைக் குறித்து அறிந்து கொள்ள முடியாது. ஆனால், தேவன் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். நம் வாழ்க்கையின் கடினமான புயல்களின் ஊடாக நாம் கடந்து செல்லும் போதும் கூட நம்முடன் பேசவும், நமக்கு வழிகாட்டவும் அவரால் கூடும். நாம் தேவனுக்குச் செவிகொடுத்து அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியவேண்டும். நாம் எவ்வளவு சீக்கிரமாக தேவனைப் பின்பற்றுகிறோமோ, அவ்வளவதிகமாக நம் வாழ்க்கையில் போராட்டங்களைத் தவிர்த்து, பேரழிவுகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

பயன்பாடு: காற்றையும் கடலையும் அடக்கி ஆளுகை செய்யும் தேவன் சில நேரங்களில் வாழ்க்கையின் கடும் புயல்களினூடாக செல்வதற்கு என்னை அனுமதிக்கக் கூடும். அப்படிப் பட்ட தருணங்களில், தேவனுடனான என் ஜெபவாழ்க்கையை விட்டுவிடாமல், அனைவருக்காகவும் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும்.  அப்படிப்பட்ட தருணங்களில் என் தேவைகளை தேவன் சந்திப்பதற்காக நான் தேவனுக்கு நன்றி உள்ளவனாக இருக்க வேண்டும். நான் தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுக்கும்போது, அவர் என் இருதயத்தை அமைதிப்படுத்தி, சமாதானத்தை எனக்குத் தருகிறார். ஒவ்வொரு இரவுக்கும் பின் ஒரு விடியல் உண்டு. நான் தேவனை நம்ப முடியும்; அவருடைய கிருபையானது என்னை சேரவேண்டிய இடத்தில் கொண்டு போய் சேர்க்கும்.

ஜெபம்: அனைத்தையும் ஆளுகை செய்யும் தேவனே, என் வாழ்க்கையில் உம் வழிநடத்துதலுக்காகவும்ம் உம் கரிசனைக்காகவும் உமக்கு நன்றி. ஆண்டவரே, எந்த சமயத்திலும் உம் வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து, உம் சித்த்திற்குக் கீழ்ப்படிய எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 219

No comments: