Thursday, August 12, 2021

என் மீட்பர் உயிரோடிருக்கிறார்

 – எதிர்காலத்தைக் குறித்த ஜீவனுள்ள நம்பிக்கை

வாசிக்க: யோபு 19,20; சங்கீதம் 41; ரோமர் 3

வேத வசனம் யோபு 19: 25. என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.
26. இந்த என் தோல் முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்.
27. அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; இந்த வாஞ்சையால் என் உள்ளிந்திரியங்கள் எனக்குள் சோர்ந்துபோகிறது.

கவனித்தல்: மனிதன் அனுபவிக்கும் பாடுகள் கடவுளைப் பற்றியும் மனித சமுதாயத்தைப் பற்றியும் பல கேள்விகளை எழுப்புகின்றன. மனிதர்களுக்கு, குறிப்பாக நல்ல மற்றும் அப்பாவி மனிதர்களுக்கு, ஏன் பாடுகள் வருகின்றன என்பதை ஜனங்கள் புரிந்துகொள்ள சிரமப்படுகின்றனர். பாடுகளைப் பற்றி மனிதர்களின் கூற்று, யாருக்கு வருகிறது என்பதைப் பொறுத்து, நபருக்கு நபர் வேறுபடுகிறதாக இருக்கிறது. யோபு சோதிக்கப்பட்டபோது, அவனுடைய நண்பர்கள் தேமானியனான எலிப்பாசும், சூகியனான பில்தாதும், நாகமாத்தியனான சோப்பாரும் ஆறுதல் கூறுவதற்காக புறப்பட்டு வந்தனர். யோபுவின் துக்கம் மகா கொடிய துக்கம் என்பதை அவர்கள் கண்டுகொண்டனர். ஆயினும், ஏழு நாட்கள் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்தபின்,  யோபுவின் நண்பர்கள், ஒருவன் பின் ஒருவராக, அவனைக் குற்றம் சாட்டத் துவங்கினர். யோபு தன் பாவத்தில் இருந்து மனம் திரும்ப வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். யோபுவோ தனக்குத் தெரியாத காரணத்தின் நிமித்தம் தேவன் அவன் மேல் கோபமாக இருக்கிறார் என நினைத்தான். ஆகவே, அவன் தேவனுடன் வழக்க்காட விரும்பினான். அவனுடைய நண்பர்களின் குற்றச்சாட்டுகள் யோபுவை சோர்வடையப் பண்ணின. அவர்கள் ”காரியத்துக்குதவாத வைத்தியர்கள்” ஆகவும், ”அலட்டுண்டாக்குகிற தேற்றரவாளர்”களாகவும் யோபுவுக்கு இருந்தனர் (யோபு.13:4; 16:2). தனக்கு எதிரான நண்பர்களின் குற்றச்சாட்டு, மற்றும் தனக்கு ஏன் இவ்வாறு நேர்ந்தது என்பதை அறிய முடியாமல் இருந்த போதிலும், தேவன் மேல் உள்ள தன் விசுவாசம் மற்றும் நம்பிக்கையைப் பற்றி பேச யோபு தவறவில்லை. யோபு தன் மன விரக்தியையும் வெளிப்படுத்தினார் தான்.

16ம் அதிகாரத்தில், பரலோகத்தில் உள்ள தன் நண்பரைப் பற்றி, அவர் தனக்காக சாட்சி பகருகிறவர் மற்றும் ”ஒரு மனுபுத்திரன் தன் சிநேகிதனுக்காக வழக்காடுகிறதுபோல“ வழக்காடுகிறவர் என்று தன் நம்பிக்கையைப் பற்றி யோபு சொல்கிறதை நாம் காண்கிறோம் (யோபு 16:19-21). யோபு 19:25;. யோபு தன் எதிர்கால நம்பிக்கையைப் பற்றி உறுதியுடன் அறிக்கை செய்கிறதை நாம் காண்கிறோம். தேவனே அவருடைய மீட்பர் என்பதை அது குறிக்கிறது. 27ம் வசனத்தில் தன்னிலையில் ”நான்” “என்” என யோபு அழுத்திக் கூறுவதைக் கவனியுங்கள். எல்லா பொய் குற்றச்சாட்டுகளுக்கும் எதிராக தேவன் தனக்காக வழக்காடுவார் என்ற தன் நம்பிக்கையைப் பற்றி யோபு கூறுகிறார். அதைக் காண்பதற்கு அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார். நம் நிகழ்காலப் பிரச்சனைகளை நாம் ஒருவேளை புரிந்து கொள்ள இயலாமல் போகலாம். ஆனால், கிறிஸ்துவில் நமக்கு இரு ஜீவனுள்ள நம்பிக்கை உண்டு. இயேசுவே நம் மீட்பர். அவர் நமக்காகப் பரிந்து பேசுகிறவர். “நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்….ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்” என வேதம் சொல்கிறது (எபி.4:14,16).

பயன்பாடு: ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, யோபுவால் தன் மீட்பரை விசுவாசக் கண்களால் காண முடிந்தது. அவர் தன் விசுவாசம் மற்றும் நம்பிக்கை குறித்து மிகவும் உறுதியாக இருந்தார். எதிர்மறையான சூழ்நிலையிலும், அவர் தன் விசுவாசத்தைக் குறித்து அறிக்கையிட்டு, மீட்பராகிய தேவனைப் பார்க்கும் தம் இருதய விருப்பத்தை வெளிப்படுத்தினார். விசுவாசக் கண்களால் தேவனைப் பார்த்தது, யோபு தன் பாடுகளை பொறுமையுடன் சகிக்க உதவியது. நான் என் வாழ்வில் ஏதேனும் பாடுகளை அனுபவிக்க நேர்ந்தால், எனக்கு ஏன் இது நேர்ந்தது என்பதை நான் புரிந்து கொள்ளாவிடினும் கூட, நான் என் கண்களை தேவன் மீது வைத்திருக்க வேண்டும். நான் தேவனைப் பார்க்கும்போது, என் நிகழ்காலப் பிரச்சனைகளை மேற்கொள்வதற்கான பலத்தையும் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையையும் பெறுகிறேன். எனது இக்காலத்துப் பாடுகள் இனி வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல (ரோமர் 8:18). தேவனை என் மீட்பராக நான் பார்க்கிறேனா?

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, நீர் எனக்குத் தந்திருக்கிற நித்திய நம்பிக்கைக்காக உமக்கு நன்றி. என் மீட்பராகிய இயேசுவே, நீரே என் நம்பிக்கை, மகிமையின் நம்பிக்கை. நீர் எனக்காக வைத்திருக்கிற எதிர்காலத்தை குறித்து நம்பிக்கையுடன் இருக்கவும், அதை உறுதியாக அறிக்கை செய்யவும் உதவியருளும். ஆமென்.

 - அற்புதராஜ் சாமுவேல்

+91 9538328573

Day - 223

No comments: