Saturday, August 7, 2021

மக்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ள ஜெபித்தல், பிரசங்கித்தல், மற்றும் முயற்சி செய்தல்

வாசிக்க: யோபு 9,10; சங்கீதம் 36; அப்போஸ்தலர் 26

வேத வசனம்அப்போஸ்தலர் 26: 27. அகிரிப்பா ராஜாவே, தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறீரா? விசுவாசிக்கிறீரென்று அறிவேன் என்றான்.
28. அப்பொழுது அகிரிப்பா பவுலை நோக்கி: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய் என்றான்.
29. அதற்குப் பவுல்: நீர் மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற யாவரும், கொஞ்சங்குறையமாத்திரம் அல்ல, இந்தக் கட்டுகள் தவிர, முழுவதும் என்னைப்போலாகும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.

கவனித்தல்: பவுல் தன் சாட்சி, ஊழிய அழைப்பு பற்றி சொல்லி, இயேசுவே மேசியா என விளக்கிய போது, இரண்டு விதமான பதில்களைப் பெற்றார் என நாம் அப்போஸ்தலர் 26ல் வாசிக்கிறோம். பவுலுக்கு மன நிலை பாதிக்க்கப்பட்டு பைத்தியம் பிடித்து விட்டது என ரோம தேசாதிபதி பெஸ்து நினைத்தான்.  கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும்படி பவுல் தன்னை சம்மதிக்கப்பண்ண முயற்சிக்கிறான் என  அகிரிப்பா ராஜா நினைத்தார்.  கிறிஸ்தவ மார்க்கத்தைப் பற்றி நன்கறிந்திருந்த முந்தைய தேசாதிபதி பேலிக்ஸைப் போல, பெஸ்து கிறிஸ்தவ மார்க்கம் பற்றி அதிகம் அறிந்திருக்க வில்லை. ஆகவே, இயேசுகிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் வரலாற்றுத் தன்மை பற்றி பவுல் அவனிடம் சொல்கிறார். மறுபக்கத்தில், அகிரிப்பா ராஜா ஒரு யூதராக இருந்த படியால், மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள்  மற்றும் இயேசுவின் வாழ்க்கை தொடர்பான காரியங்களை அறிந்திருப்பார்.  அகிரிப்பா ராஜாவிடம் பவுல் கேட்ட கேள்வி முக்கியமானது ஆகும். இயேசுவை அகிரிப்பா ராஜா விசுவாசிக்கிறாரா இல்லையா என்று அவர் கேட்கவில்லை. மாறாக,  தீர்க்கதரிசிகள் பற்றிய யூதர்களின் அடிப்படை நம்பிக்கை தொடர்பான ஒரு கேள்வியை பவுல் கேட்டார். அது “ஆம்” அல்லது “இல்லை” என்று சொல்லி முடிக்கக் கூடிய ஒரு கேள்வி இல்லை என்பதை அகிரிப்பா நன்கறிந்திருந்தார். அவர் ஆம் என்று சொல்லி இருந்தால், தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலாக இயேசுவை விசுவாசிக்க வேண்டியதாக இருந்திருக்கும். இல்லை என்று சொன்னால், யூதர்களின் கோபத்திற்கு உள்ளாக வேண்டியதாயிருந்திருக்கும். அப்படிப் பட்ட ஒரு சிக்கலான சூழ்நிலையைத் தவிர்க்க, ”நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய்” என்று அவர் சொன்னார். அகிரிப்பா ராஜா கிறிஸ்தவர் ஆக விரும்பினார் என்று இதை பொருள் கொள்ளக் கூடாது. அவருக்கு அதிக நேரம் தேவை அல்லது ஒரு சாக்குபோக்காக அப்படி சொல்லி இருக்க வேண்டும். கிறிஸ்துவை விசுவாசிப்பது பற்றி ஒருவர் பிரசங்கித்தார் அல்லது பேசினார் என்பதற்காக எவரும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது உண்மை ஆகும்.

பவுலின் ஆத்தும வாஞ்சை பற்றி பல விசயங்களை அகிரிப்பா ராஜாவிடம் அவர் சொன்ன பதில் நமக்குக் கூறுகிறது. மேலும், எல்லா மனிதரும் இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாக மாற நாம் ஜெபிக்க வேண்டும், நற்செய்தியை அறிவிக்க வேண்டும், மற்றும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள அவர்களை நாம் சம்மதிக்கப் பண்ண வேண்டும் என்பதை பவுலின் பதிலானது நமக்கு நினைவுபடுத்துகிறது. நாம் இவைகளைச் செய்யும்போது, இயேசு கிறிஸ்துவின் மீது நாம் வைத்திருக்கும் விசுவாசம் கட்டுக்கதைகள் மீது அல்ல, வரலாற்று நிகழ்வுகளின் மீது கட்டப்பட்ட விசுவாசம் என்பதை தைரியமாகச் சொல்ல முடியும்.

பயன்பாடு:  இயேசு கிறிஸ்துவின் மீதான என் விசுவாசம் ”தந்திரமான கட்டுக்கதைகள்” மீது கட்டப்பட்டதல்ல. இயேசுவின் வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவை நன்கறியப்பட்ட வரலாற்றுச் சம்பவங்கள் ஆ கும். இயேசுவைப் பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்ள என் நேரத்தை நான் பயன்படுத்த வேண்டும். இயேசுவைப் பற்றி இதுவரை கேள்விப்படாத அனைவருக்காகவும் நான் ஜெபிக்க வேண்டும். அதன் பின், நான் நற்செய்தியை அறிவித்து, இயேசுவை ஏற்றுக் கொள்ளும்படி அழைப்பு கொடுக்க அல்லது சம்மதிக்கப் பண்ண முயற்சி செய்ய வேண்டும். கிறிஸ்தவர் ஆகும்படி நான் ஒருவரை கட்டாயப்படுத்த முடியாது/கூடாது. மற்றவர்கள் இயேசுகிறிஸ்துவை அறிந்து கொள்ளும்படி சாட்சியுள்ள ஒரு வாழ்க்கையை நான் வாழ வேண்டும்.

ஜெபம்: பிதாவாகிய தேவனே, என்னை இரட்சிப்பதற்காக உம் குமாரனாகிய இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பியதற்காக உமக்கு நன்றி. அனைவரும் சத்தியத்தை அறிகிற அறிவைப் பெறும்படி நான் ஜெபிக்கிறேன். இயேசுவே, அனைவருக்கும் நற்செய்தி அறிவிப்பதில் என் பங்கை நான் செய்வதற்கு என்னைப் பலப்படுத்தியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 218

No comments: