Thursday, August 19, 2021

”இயேசு கிறிஸ்து கர்த்தர்”

வாசிக்க: யோபு 33,34; சங்கீதம் 48; ரோமர் 10

வேத வசனம் ரோமர் 10: 9. என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
10. நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.

கவனித்தல்: ”இயேசு கர்த்தர்” என்பது மிகவும் சுருக்கமான மற்றும் சபையின் முதல் விசுவாச அறிக்கை ஆகும். ”இயேசுவே கர்த்தர்” என்று ஒருவர் அறிக்கை செய்யும்போது, ஆதிச்சபையில் அப்போஸ்தலர்களுடைய உபதேசத்தின் அஸ்திபாரமாக இருந்த,  இயேசுவின் மனிதத் தன்மையையும் தெய்வீகத்தையும் அவர் ஏற்றுக் கொள்கிறார். தேவனுடைய இரட்சிப்பைப் பெற, ஒருவர் தன் இருதயத்தில் விசுவாசித்து, தன் விசுவாசத்தை அறிக்கை செய்ய வேண்டும். அறிக்கை செய்வது என்பது மனதில் இருக்கும் விசுவாசத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்துவது ஆகும். இயேசு கிறிஸ்துவில் உள்ள நம் விசுவாசத்தைக் குறித்து அறிக்கை செய்யும்போது அல்லது பேசும்போது, நம் இருதயத்தில் இருந்து வார்த்தைகள் வரவேண்டும். ஆதிச் சபையில், ஞானஸ்நானம் எடுக்கும் நேரங்களில் கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தைக் குறித்து பகிரங்கமாக சாட்சி கொடுத்தனர். மத்தேயு 10:32,33ல், மனிதர்களுக்கு முன்பாக தன்னைப் பற்றி அறிக்கை செய்ய வேண்டும் என்று உற்சாகப்படுத்துகிறார். ஆயினும், கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தை பகிரங்கமாக அறிக்கை செய்து வெளிப்படுத்த முடியாத நாடுகள் மற்றும் இடங்கள் உண்டு. அப்படிப்பட்ட இடங்களில் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு நம் ஜெபங்கள் மிகவும் அவசியமானவை ஆகும். மறு பக்கத்திலோ, சிலர் தங்களுடைய சுயநல மற்றும் சமுதாய காரணங்களுக்காக தங்கள் கிறிஸ்தவ விசுவாசத்தை வெளிப்படுத்த விரும்புவதில்லை. அப்படி தங்களை இரகசிய கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் சமுதாயத்தைக் குறித்து பயப்படுகிறவர்களாக மாறி, முடிவில் இயேசுவின் மீதான தங்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்கள் என ஒரு கிறிஸ்தவ தலைவர் கூறுகிறார்.  இயேசுவைப் பற்றி நாம் என்ன விசுவாசிக்கிறோம் என்பதற்கும் அவரைப் பற்றி  பகிரங்கமாக அறிக்கை செய்கிறதற்கும் இடையே ஒரு தொடர்பு இருக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவின் மீது உள்ள விசுவாசத்தை அறிக்கை செய்வதிலும், நடைமுறை வாழ்வில் செயல்படுத்துவதிலும் நாம் மிகவும் நேர்மையுள்ளவர்களாக நாம் இருக்க வேண்டும். 1 கொரி.12:3 ல், ”பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்று” அப்போஸ்தலன் பவுல் கூறுகிறார். ”இயேசுவே ஆண்டவர்” என்று நாம் அறிக்கை செய்யும்போது, நாம் அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழலுக்கு சாட்சிகளாக இருக்கிறோம் என அறிக்கை செய்கிறோம். நம் வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் இயேசு ஆளுகை செய்ய நாம் அனுமதிக்கிறோமா?

பயன்பாடு: இயேசுவே என் வாழ்வின் ஆண்டவர். விசுவாசத்தினாலேயே நான் நீதிமானாக்கப்பட்டேனேயன்றி, கிரியைகளினால் அல்ல. இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தை அறிக்கை செய்யும்போது, நான் தேவனுடைய இரட்சிப்பைப் பெறுகிறேன். இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தை பகிரங்கமாக சொல்வதற்கும் வெளிப்படுத்துவதற்கும் நான் வெட்கப்படக் கூடாது.  இயேசுவின் நாமம் எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் ஆகும்.  இயேசுவே கர்த்தர் என்று நாவுகள் யாவும் அறிக்கை செய்யும். நான் இயேசுவுக்கு சாட்சியாக வாழ்கிறேன்.

ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் இரட்சிப்பைப் பெறுவதற்கான வழிவாசலைத் திறந்த உம் வாழ்க்கை மற்றும் சிலுவையில் நீர் செய்த தியாகத்திற்காக உமக்கு நன்றி.  பரிசுத்த ஆவியானவரே, “இயேசுவே கர்த்தர்” என்று ஜனங்கள் புரிந்து கொள்ளவும், நான் இயேசுவுக்கு சாட்சியாக வாழவும் என்னை பலப்படுத்தியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 230

No comments: