Wednesday, August 4, 2021

உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் கர்த்தருடைய கண்கள்

வாசிக்க: யோபு 3,4; சங்கீதம் 33; அப்போஸ்தலர் 23:23-35

வேத வசனம்சங்கீதம் 33: 18. தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;
19.
பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது.   

கவனித்தல்: ஏராளமான படைபலம், செல்வம் மற்றும் மக்கள் பலம் இருந்தும் வீழ்ச்சி அடைந்த புகழ்பெற்ற பேரரசர்கள், ராஜ்ஜியங்கள் மற்றும் தலைவர்கள் பற்றி வரலாறு நமக்கு சொல்கிறது.  அவர்கள் அனைவரும் தங்கள் வாழ்வின் மற்றும் புகழின் உச்சத்தில் இருந்த போது, எவரும் தங்களை அசைக்கவோ அல்லது ஜெயிக்கவோ முடியாது என்று நினைத்திருப்பார்கள். திறமை, ராணுவம், மற்றும் உலக செல்வம் ஆகியவை மீதான அவர்களுடைய நம்பிக்கையானது வாழ்க்கையின் பேரழிவுகளில் அவர்களுக்கு உதவ வில்லை. அவர்களில் பலர் எவ்வித உதவியும் கிடைக்காமல் இறந்தனர். சங்.33:16-17 சொல்வது போல, உலகப் பிரகாரமான வல்லமைகள் மற்றும் பலம் ஆகியவை ”விருதா” (வீண்). அவை பிரச்சனையான காலங்களில் நமக்கு உதவ முடியாது. ஆனால் கர்த்தருடைய கண்களோ தேவ பயம் உள்ளவர்களுக்கு விடுதலை பெறுவதற்குத் தேவையான பலத்தையும், அவர்களுக்கு தேவையானவைகளைக் கொடுப்பதற்காகவும் அவர்கள் மீது இருக்கிறது. தேவையுள்ள நேரத்தில், தேவனுடைய கிருபையே மிகப் பெரிய நம்பிக்கை ஆகும்.

பரவலான பேரழிவுகள் மற்றும் பஞ்சம் ஏற்படும்போது, உயிருக்குப் போராடும் போது அல்லது உணவு கிடைக்காமல் தவிக்கும்போது, மக்கள் எங்கேயாகிலும் உதவி அல்லது நம்பிக்கை கிடைக்காதா என்று தேடக் கூடும். தேவனை நம்புகிற/விசுவாசிக்கிற நாம் இத்தகைய சூழ்நிலைகளில் இருப்பதாக காணும் நேரங்களில், தேவனுடைய கிருபை மீது நாம் நம்பிக்கை வைக்கலாம். இங்கு வாசிப்பது போல, தேவனுடைய கண்கள் நம் மீது நோக்கமாயிருக்கிறது. அவர் நம் தேவைகளையும் போராட்டங்களையும் அறிந்திருக்கிறார்; அவர் நம்மை ஒரு போதும் கைவிடமாட்டார். ஏனெனில், அவருடைய அன்பு மாறாத, கிருபை நிறைந்த அன்பு ஆகும். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மரணத்தை ஜெயித்து, இன்றும் உயிரோடு இருக்கிறார்.  நம் கடினமான தருணங்களில், தேவன் மீது நம்பிக்கை வைக்கும்படி வேதாகமம் நம்மை உற்சாகப்படுத்துகிறது. கர்த்தருடைய கண்கள் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறபடியால், அவர் நம் ஜெபங்களுக்குப் பதிலளித்து, நம் வாழ்வில் இருள் சூழ்ந்த பள்ளத்தாக்குகளைக் கடந்து செல்ல அவர் நம்மை வழிநடத்துவார் (சங்.34:15; 1 பேதுரு 3:12). நினைவில் கொள்ளவும்: கவலைகளும் பிரச்சனைகளும் இல்லாத ஒரு வாழ்வை நமக்கு தேவன் ஒரு போதும் வாக்குப் பண்ணவில்லை. ஆயினும், நம் சோதனையான நேரங்களில், மரணத்தில் இருந்து விடுதலையையும், நமக்குத் தேவையானவைகளைத் தந்து உதவுவதாகவும் அவர் நமக்கு வாக்குபண்ணி இருக்கிறார். ஆகவே நாம் நம் நம்பிக்கையை தேவன் மீது வைக்கலாம். ”நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்(சங்.33:20).

பயன்பாடு: கர்த்தர் என்னைக் காண்கிறார், என் தேவைகளை அறிந்திருக்கிறார். எல்லா நேரங்களிலும் என் மனித வலிமை மற்றும் செல்வம் ஆகியவை பிரச்சனைகளில் இருந்து என்னை இரட்சிக்க முடியாது. பூமியில் எனக்கு இருப்பவைகளை நான் நம்பத் துவங்கும்போது, அது கர்த்தரிடம் இருந்து என் கவனத்தை திசைதிருப்பி, அதிக பிரச்சனைகளை உண்டாக்குகிறது. மாறாக, நான் தேவனுக்குப் பயந்து, அவருடைய கிருபையின் மீது என் நம்பிக்கையை வைக்கும்போது, என் ஜெபங்களுக்கான பதில்களையும், என் மனதை அழுத்தும் தேவைகளுக்கான ஒரு தீர்வையும் நான் கண்டு கொள்கிறேன். என் கண்களும், நம்பிக்கையும் எப்பொழுதும் இயேசுவின் மீது இருக்க வேண்டும்.

ஜெபம்: தேவனாகிய் கர்த்தாவே, என்னைக் காண்கிற அன்புநிறைந்த உம் கண்களுக்காக உமக்கு நன்றி. என் எல்லா தேவைகளையும், அவைகளை சமாளிப்பதற்கான வழியையும் நீர் அறிந்திருக்கிறீர் என்பதனால் உம்மை நான் துதிக்கிறேன். தேவனே, இன்றும் என்றென்றும் என் நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை உம் மீது வைக்க எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 215

No comments: