Tuesday, August 10, 2021

விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்

வாசிக்க: யோபு 15,16; சங்கீதம் 39; ரோமர் 1

வேத வசனம் ரோமர் 1: 16. கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.
17. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.

கவனித்தல்: ரோமசபைக்கு பவுல் எழுதிய நிருபமானது கிறிஸ்தவ உபதேசங்கள் மற்றும் இறையியல் குறித்து முறையாகவும் நேர்த்தியாகவும் விவரிக்கிறது. ரோமர் 16,17 தான் பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தின் மைய கருப்பொருள் அல்லது அஸ்திபாரக் கருத்து என அனேக வேத நிபுணர்கள் கருதுகின்றனர். சீர்திருத்த இயக்கத்தை முன் நின்று நடத்தின மார்ட்டின் லூதர் அவர்களின் மன மாற்றத்தில் இந்த வேதபகுதி முக்கியமான பங்கு வகித்தது. முதல் நூற்றாண்டில் இருந்தே, இயேசுகிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியானது மிகப் பெரும் தாக்கத்தை உண்டாக்கி, அனேக ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டுபண்ணி இருக்கிறது. நற்செய்தி என்பது ஒரு புத்தகத்தின் பெயரோ அல்லது ஒரு உரை அல்லது பேச்சின் தலைப்போ அல்ல. பவுல் சொல்வது போல, ”விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.” நற்செய்தியும் இயேசுகிறிஸ்துவும் பிரித்துப் பார்க்கப்பட முடியாத ஒன்று ஆகும். ரோமர்களின் சிலுவை மரணத்தினால் கொல்லப்பட்ட ஒருவரை விசுவாசிப்பது இழிவானதாகவும், அவமானத்திற்குரியதாகவும் அக்காலத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால், பவுலோ விசுவாசிக்கிற அனைவரையும் இரட்சிக்கும் சுவிசேஷத்தின் வல்லமையைப் பார்க்கிறார். சுவிசேஷமானது அனைவருக்கும் கிடைக்கக் கூடியதாகவும், இயேசுவை விசுவாசிக்கிற எவரையும் இரட்சிக்க வல்லமையுள்ளதாகவும் இருக்கிறது. அவர்கள் சுவிசேஷத்தின் வல்லமையினால் இரட்சிக்கப்பட முடியும். அனைவருக்கும் தேவனுடைய இரட்சிப்பு எதற்குத் தேவை என்று சிலர் கேட்க கூடும்.  பவுல் விளக்குகின்றது போல, நாம் அனவரும் சிருஷ்டிகரைத் தொழுது கொள்ளாமல் பாவிகள் ஆனோம்.

மேலும், நியாயத்தீர்ப்பில் இருந்து ஒரு பாவியைக் காக்கிற தேவனுடைய நீதியை நற்செய்தி நூல் வெளிப்படுகிறது. நற்செய்தியை விசுவாசிக்கிறவர்கள்  தேவனுடைய நீதியை பெற்றுக் கொண்டு, நீதிமானாக்கப்படுகிறோம்.தேவனிடம் இருந்து வருகிற நீதியை விசுவாசத்தினால் மாத்திரமே பெற்றுக் கொள்ள முடியும். வேறு எந்த விதத்திலும் அதைச் சம்பாதிக்க முடியாது. விசுவாசத்தினால், நாம் தேவ நீதியைப் பெற்று, தேவனுடைய பார்வையில் நீதிமான்கள் ஆக்கப்படுகிறோம். ”விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.” வீணான (மாயையான) காரியங்களை நம்புவதில் பல ஆண்டுகளைச் செலவழித்து ஒருவர் இதுவரை எதையும் பெறாமல் இருக்கக் கூடும், ஆயினும் அவர் நற்செய்தியை அல்லது இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது,  அவர்கள்  விசுவாசத்தினால் உண்டாகும் ஜீவனையும்  இரட்சிப்பையும் பெற்றுக் கொள்கிறார்.  இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து தங்கள் வாழ்க்கையில் மகத்தான மாற்றங்களைப் பெற்ற அனேகரைப் பற்றி வரலாறு நமக்குக் கூறுகிறது. இந்த தேவ நீதிக்கான விலைக்கிரயத்தை இயேசு ஏற்கனவே செலுத்தி விட்டார். நாம் அதை விசுவாசத்தினால் பெற்று, கிருபையினால் இரட்சிக்கப்படுகிறோம். நாம் எப்படி வாழ்கிறோம்?

பயன்பாடு: எந்த சூழ்நிலையிலும், நான் தைரியமாக சுவிசேஷத்தைக் குறித்து சாட்சிபகர வேண்டும். நான் பலவிதங்களில் பலவீனமாக இருக்கலாம். ஆனால், நற்செய்தியானது என்னை இரட்சிக்க வல்லமையுள்ளதாகவும், தேவனுடனான என் உறவை சீர்பொருந்தப் பண்ணுகிறதாகவும் இருக்கிறது. என் சுய நீதியானது என்னை இரட்சிக்கமாட்டாது. ஆனால், நான் தேவனை விசுவாசிக்கும்போது, அவர் என்னை இரட்சித்து, பாதுகாத்து, நான் நீதிமான் என்று அறிவிக்கிறார். நான் தேவனுடைய நீதியில் வாழ வேண்டும்.  தேவனுடைய பிள்ளையாகிய நான், விசுவாசத்தினால் (விசுவாசித்து) வாழ்கிறேன்.

ஜெபம்: பிதாவே, உலகத்தில் உம் இரட்சிக்கும் வல்லமையை வெளிப்படுத்தும் நற்செய்திக்காக உமக்கு நன்றி. இயேசுவே, உம் தியாக வாழ்க்கை மூலம் நீர் எனக்கு சம்பாதித்தீந்த நீதிக்காக உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே, நற்செய்தியை தைரியமாகப் பிரசங்கிக்கவும், விசுவாசத்தினால் பிழைத்து வாழவும் என்னைப் பலப்படுத்தி உதவியருளும்.  ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 221

No comments: