Friday, August 27, 2021

நிகழ்காலத்தில் வாழ்தல்

வாசிக்க: பிரசங்கி 7,8; சங்கீதம் 56; 1 கொரிந்தியர் 2

வேத வசனம் பிரசங்கி 7: 14. வாழ்வுகாலத்தில் நன்மையை அநுபவித்திரு, தாழ்வுகாலத்தில் சிந்தனைசெய்; மனுஷன் தனக்குப்பின் வருவதொன்றையும் கண்டுபிடியாதபடிக்கு தேவன் இவ்விரண்டையும் ஒன்றுக்கொன்று எதிரிடையாக வைத்திருக்கிறார்.

கவனித்தல்: எல்லோருமே மகிழ்ச்சியாக இருக்கவும், அவர்கள் ஆசைப்படும் அனைத்தையும் பெறுகிற ஒரு நல்ல வாழ்க்கையை உடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.  தங்கள் வாழ்வில் ஒரு மோசமான நாள் வரவேண்டும் என்று எவரும் விரும்புவதில்லை.  ஆயினும், வாழ்க்கையைப் பற்றிய நம் எதிர்பார்ப்புகள் மற்றும் யதார்த்தம் ஆகியவை எப்பொழுதும்  ஒன்றாக செல்வதில்லை. நல்ல மற்றும் தாழ்வு காலம் இரண்டிலும் எப்படி வாழ்வது என்பதற்கான சில நடைமுறை அறிவுரைகளை பிரசங்கி 7ம் அதிகாரம் தருகிறது. நாம் நல்ல நாட்களை உடையவர்களாக இருக்கும்போது, வேறெதைப் பற்றியும் யோசிக்காமல், மகிழ்ச்சியாக, பாடல்களைப் பாடி தேவனைத் துதித்துக் கொண்டிருக்க முடியும். சில கிறிஸ்தவர்கள் மிஞ்சின நீதிமான்களாக இருந்து, கர்த்தர் அவர்களுக்குக் கொடுக்கிற நல்ல நாட்களை கொண்டாடி மகிழ்கிற சந்தோசத்தை இழந்து விடுகிறார்கள்.  ஆயினும், நம் நல்ல நாட்களை மகிழ்வுடன் செலவழிக்கும்போது, மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் திருப்திப்படுத்துகிற தவறை செய்யாமல் இருப்பதற்கு கவனமாக இருக்க வேண்டும். நம் உண்மையான மகிழ்ச்சி கர்த்தரிடத்தில் இருந்தே வருகிறது. ”தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது” (ரோமர் 14:17).

நம் வாழ்வில் நாம் அனேக ஏற்ற இறக்கங்கள், மகிழ்ச்சி மற்றும் துக்கம், செல்வம் மற்றும் ஒன்றுமில்லாமல் ஆகியவற்றை கடந்து வருகிறோம். நாம் மோசமான ஒரு நாளை அல்லது காரியத்தை எதிர்கொள்கையில், அதை ஏற்றுக் கொள்வது மிகவும் கடினமானதாக இருக்கிறது. அப்படிப்பட்ட தருணங்களில் தேவனுடைய ஆளுகையின் கீழ் எல்லாம் இருக்கிறது என்பதை நாம் நினைத்துப் பார்க்க பிரசங்கி நம்மை அழைக்கிறார். நாம் எதிர்கொள்வது என்னவாக நேர்ந்தாலும், அது தேவனுடைய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ”அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார் (ரோமர் 8:28). எல்லாம் நன்மைக்கே என்று நாம் கூற முடியுமா? தேவன் அனைத்தையும் செய்ய/மாற்ற வல்லவர் என்று நாம் விசுவாசிக்கிறோம். எல்லாம் நன்மைக்கே என்று நாம் கூறும்போது, தேவனுடைய வாக்குத்தத்தங்களை நம்பி, நாம் தேவனைச் சார்ந்து இருக்கிறோம் என்பதை நினைவுபடுத்திக் கொள்கிறோம். மேலும், நம் வெற்றிகளில் இருந்து கற்றுக்கொள்ளும் காரியங்களைக் காட்டிலும், நம் தோல்விகள் மற்றும் தவறுகளில் இருந்து அதிக காரியங்களை நாம் கற்றுக் கொள்கிறோம். எதிர்காலத்தைக் குறித்து நமக்கு எதுவும் தெரியாது. ஆனால் தேவன் அதை அறிந்திருக்கிறார். நம் காலங்கள் தேவனுடைய கரங்களில் இருக்கிறது (சங்.31:15). நாளைய தினத்தைக் குறித்து கவலைப்படாமல், அந்தந்த நாள், ஒரு சமயத்தில் ஒரே ஒரு நாள், மீது மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என இயேசு தன் மலைப்பிரசங்கத்தில் நம்மை உற்சாகப்படுத்துகிறார் (மத்.6:34). நம் வாழ்வின் ஒவ்வொருநாளும் தேவன் நமக்குக் கொடுத்த ஈவு ஆகும். நாம் அதை தேவ மகிமைக்காக பயன்படுத்துவதற்கான நடைமுறை ஞானத்தை தேவன் நமக்குத் தருகிறார்.

 பயன்பாடு: சர்வ வல்லமையுள்ள தேவனுடைய கரங்களில் நான் இருக்கிறேன். தேவன் எப்பொழுதும், நல்ல மற்றும் மோசமான காலங்களில், என்னுடன் இருக்கிறார்.  ஆகவே, எனக்கு என்ன நேர்ந்தாலும் நான் எதற்கும் பயப்படேன். என் வாழ்க்கையில் நான் பெறும் நல்ல நாட்கள் எனக்கு பலத்தையும் என் ஆத்துமாவை புதுப்பிக்கவும் செய்கிறது. மோசமான நாட்களினூடாகச் செல்லுதல், என் பலவீனங்கள், தேவனைச் சார்ந்து நான் வாழ வேண்டிய அவசியம், மற்றும் கர்த்தருக்கு முன்பாக தாழ்மையாக நடத்தல் ஆகியவற்றை எனக்கு நினைவுபடுத்துகிறது. நான் தேவனை எக்காலத்திலும் நம்ப முடியும்.

ஜெபம்: அனைத்தையும் ஆளுகை செய்யும் தேவனே, என் அனுதின வாழ்வில் நான் பயன்படுத்தும்படி நீர் இன்று நினைவுபடுத்துகிற நடைமுறை ஞானத்திற்காக உமக்கு நன்றி. இயேசுவே, தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையுடன் நடப்பதற்கு உம் ஞானத்தைத் தந்தருளும். பரிசுத்த ஆவியானவரே, உம்முடன் என் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கவும், தேவ மகிமைக்காக வாழவும் இன்று எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 238

No comments: