Monday, August 16, 2021

அப்பா, பிதாவே! – ஒரு தனித்துவமான அன்பின் கூப்பிடுதல்

வாசிக்க: யோபு 29,30; சங்கீதம் 46; ரோமர் 8

வேத வசனம் ரோமர் 8: 15. அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.
16. நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்.

கவனித்தல்: உலகமெங்கிலும், பெற்றோர்களாக (ஒரு குழந்தையின் தந்தை அல்லது தாய்) ஆகும்படி, அன்பு செய்யவும் மற்றும் அன்பு செய்யப்படவும், தங்கள் குடும்பத்தின் பெயர் மற்றும் பாரம்பரியம் நிலைத்திருக்க, மருத்துவக் காரணங்களுக்காக, மற்றும் தங்கள் சொந்த விருப்பங்கள் என பல காரணங்களின் நிமித்தம் குழந்தை இல்லாத தம்பதியர் குழந்தைகளை தத்தெடுக்கின்றனர். காரணம் என்னவாக இருந்தாலும், தத்தெடுக்கப்பட்ட ஒரு பிள்ளை தன்னை சுவிகரித்துக் கொண்ட பெற்றோரின் சொத்துக்களை சுதந்தரமாகப் பெறவும், சட்டப் பூர்வமான எல்லா வாரிசுகளையும் போல சம உரிமைகளைப் பெறவும் உரிமை உண்டு. ஒரு குழந்தையை தத்தெடுக்கும்படி எவரும் கட்டாயப்படுத்த முடியாது. ஒரு குழந்தையை தங்களுடையதாகும்படி தேர்வு செய்யும் உரிமை அதைத் தேர்ந்தெடுக்கும் பெற்றோருக்கே உண்டு.

நம்மில் வாசம் செய்யும், நம்மை நடத்தும் ஆவியானவர் நம்மை தேவனுடைய பிள்ளைகளாகப் பண்ணுகிறார் என்று ரோமர் 8ம் அதிகாரம் சொல்கிறது. ஆவியின் பிரமாணமானது நம்மை அடிமைப்படுத்துகிற பாவம் மற்றும் மரணம் என்பவைகளின் பிரமாணத்தில் இருந்து நம்மை விடுவிக்கிறது (வ.2). நாம் பெற்றுக் கொண்ட பரிசுத்த ஆவியானவர் நம்மை ஒருபோதும் அடிமைப்படுத்துவதில்லை. மாறாக, தேவனை, “அப்பா பிதாவே” என்று நம்மைக் கூப்பிடப் பண்ணுகிறார். புத்திர சுவிகாரத்தின் மூலமாக, நாம் தேவனுடன் தனித்துவமான மற்றும் நெருக்கமான ஒரு உறவைப் பெறுகிறோம். தேவனுடனான நம் அன்பின் உறவுக்கு ஆவியானவர் சாட்சி கொடுக்கிறார். வேறு எந்த மதமும் சர்வ வல்ல தேவனை “அப்பா பிதாவே” என்று கூப்பிடும் இப்படிப்பட்ட சிறப்பான பாக்கியத்தை ஒரு பக்தருக்குக் கொடுப்பதில்லை. தேவனுடனான நம் உறவு பயத்தின் அடிப்படையிலானது அல்ல, அன்பினால் அமைந்தது ஆகும். ஒரு பிள்ளை தன் பெற்றோருக்குக் கீழ்ப்படிகிற/சேவைசெய்கிற/அவர்களை நேசிக்கிற விதமானது ஒரு அடிமை தன் எஜமானனுக்கு ஊழியம் செய்வதில் இருந்து வேறுபட்டது ஆகும். ஒரு பிள்ளை தன் பெற்றோரை கனம்/மரியாதை செய்ய வேண்டும் என்ற அன்பினால் தூண்டப்பட்டு செயல்படும். ஆனால், ஒரு அடிமையோ தண்டனையைக் குறித்த பயம் அல்லது பரிசு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பினல் வேலை செய்வார். தேவனுடன் நாம் ஒரு தனிப்பட்ட சிறப்பான உறவை உடையவர்களாக இருக்கிறோம். தேவன் தன் பிள்ளைகளாக யார் இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வதில் பாரபட்சம் பார்ப்பதில்லை. தேவனுடைய ஆவியினால் நடத்தப் படுகிற அனைவரும் தேவனுடைய பிள்ளைகள் ஆவர் (ரோமர் 8:14).  பிதாவாகிய தேவனிடம் நாம் நம் அன்பை எப்படி வெளிப்படுத்துகிறோம்?

 பயன்பாடு: பிதாவாகிய தேவனுடனான என் உறவில் நான் களிகூர்ந்து மகிழ்கிறேன். நான் தேவனுடைய பிள்ளை! நான் பாவத்திற்கோ அல்லது பயத்திற்கோ இனி அடிமை அல்ல. நான் ஜெபிக்கும்போது, எனக்கு உதவி தேவைப்படும்போது, மற்றும் என் அன்பை நான் வெளிப்படுத்த விரும்பும்போது, தேவனை நோக்கி, “அப்பா பிதாவே” என்று நான் கூப்பிட முடியும். நான் எதைப் பற்றியும் பயப்படவோ கவலைப்படவோ தேவையில்லை. தேவனுடைய இருதய விருப்பத்தை நிறைவேற்றுகிற பொறுப்பு எனக்கு உண்டு. தேவ மகிமைக்காக நான் அனைத்தையும் செய்வதற்கு பரிசுத்த ஆவியானவர் என்னை பலப்படுத்துகிறார்.

ஜெபம்: அப்பா (Abba), என்னை அரவணைக்கும் உம் அன்பிற்காக நன்றி. அனுதினமும் நான் உம் அன்பை பெற்றனுபவிக்க முடியும். உம் அன்பானது எல்லா பயத்தையும் நீக்கி, வார்த்தைகளால் சொல்ல முடியாத மகிழ்ச்சியையும், அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையையும் எனக்குத் தருகிறது. பிதாவாகிய தேவனே, என் சூழ்நிலை என்னவாக இருந்தாலும், நான் உம் பிள்ளை என்பதை இன்று உணர்ந்து, அதன்படி வாழ எனக்கு உதவியருளும். ஆமென்    

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 228

No comments: