Wednesday, August 11, 2021

சேற்றில் இருந்து தூக்கினார், கன்மலை மேல் நிறுத்தினார்

வாசிக்க: யோபு 17,18; சங்கீதம் 40; ரோமர் 2

வேத வசனம் சங்கீதம் 40: 1. கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.
2. பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி,
3.
நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள்.

கவனித்தல்: எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் தாவீதை சூழ்ந்து கொண்டபோது அவன் உதவி கேட்டு செய்த ஜெபத்தை நாம் சங்கீதம் 40 ல் வாசிக்கிறோம் (வ.12). அவன் கர்த்தருக்காக பொறுமையாகக் காத்திருந்தபோது, கடந்தகாலத்தில் தேவன் அவனுக்குக் கொடுத்த பதில்கள் மற்றும் விடுதலைகளை நினைவுகூர்ந்தான். இந்தச் சங்கீதத்தை தாவீது எப்பொழுது எழுதினார் என்று நமக்குத் தெரியாது. ஆனால் தாவீதின் வாழ்க்கையில் அவனைத் திணறடித்த ஏராளமான பிரச்சனைகள் இருந்தன என்பதை நாம் அறிவோம். உளையான சேற்றில் நிற்பது என்பது எப்பொழுதுமே பிரச்சனையானதும், ஆபத்தானதும் ஆகும். ஏனெனில், அதன் அடிப்பகுதியில் புதைமணல் அல்லது எளிதில் புதைந்துபோகிற தன்மை இருக்கும். 2ஆம் வசனத்தில், தான் நிற்பதற்குக் கூட கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த கடினமான வேளையில் தேவன் எவ்வாறு தன்னைப் பாதுகாத்து, நிற்க பெலனளித்தார் என்பதை தாவீது உருவகமாகக் கூறுகிறார். கர்த்தர் ஒரு மனிதரை காப்பாற்றும் போது, அவர் காப்பாற்றும் நபரை ஒரு கன்மலையில், நிற்க உறுதியான ஒரு இடத்தில் நிறுத்துகிறார்.  பின்னர், தாவீது தன் துதிப்பாடலானது மற்றவர்கள் தேவனை நம்பவும் விசுவாசிக்கவும் உதவுகிறதாக இருக்கும் என்ற தன் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். அவரைச் சுற்றியிருந்த தீமைகள் கணக்கற்றவை, அவை தாவீதின் பார்வையையும் இருதயத்தையும் பாதித்தன  என்பது உண்மை (வ.12). ஆயினும், தேவனுடைய உதவியைக் கேட்பதற்கு முன்பு தாவீது முதலாவது தேவன் தனக்குச் செய்த எண்ணமுடியாத அதிசயங்களையும் மற்றும் வார்த்தைகளால் விவரிக்கமுடியாத யோசனைகளையும் நினைவுகூர்கிறார் (வ.5). தாவீதின் பிரச்சனைகள் மற்றும் எதிரிகள் அனேகம். ஆனால், அவனுக்கு உதவி செய்து விடுவிக்கிறவர் தேவன். தாவீது பிரச்சனைகளையும் போராட்டங்களையும் எதிர்கொண்ட போது, தேவனைத் துதித்து, புதிய பாடல்களைப் பாடினார். அவர் தன் பிரச்சனைகளைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை.  மாறாக, தேவனுடைய உதவிக்காக ஜெபித்துக் கொண்டிருந்த போது, அவர் தேவனுக்காக காத்திருந்து, கடந்த காலங்களில் தேவன் செய்த இரக்கங்களை நினைவுகூர்ந்தார்.

நமக்கு அவசர உதவி தேவைப்படும்போது, அல்லது எதிர்பாராத ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும்போது, நான் தேவனுக்காக காத்திருக்க மன அமைதி இல்லாதவர்களாக இருக்கிறோம். ”எனக்கு ஏன், கர்த்தாவே?” என்று நாம் கேள்வி கேட்கவும் கூடும். சமயங்களில், ஆண்டவர் நமக்கு எப்படி அற்புதமாக உதவினார் , நம்மை வழிநடத்தினார் என்பதை நாம் மறந்து விடுகிறோம். கவலைப்பட்டுக்கொண்டு, எப்பொழுதும் நம் பிரச்சனைகளையே பார்த்துக் கொண்டிருப்பதனால், நாம் மன அழுத்தத்திற்குள்ளாகி, பலவீனமடைந்து விடுவோம். அது நம் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். நாம் இது போன்ற அல்லது இதைவிட தீவிரமான பிரச்சனைகளை மேற்கொள்ள தேவன் நமக்கு எப்படியெல்லாம் உதவினார் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, நம் தற்போதையை நிலைமையை எதிர்கொள்வதற்குத் தேவையான பலத்தைப் பெற்றுக் கொள்கிறோம். தேவன் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையானது ஒருபோதும் வீணாவதில்லை. நமக்கு உதவி செய்து, நம்மை விடுவிப்பவர் அவரே. தேவன் நம் அனைத்து ஜெபங்களுக்கும் பதிலளிக்கிறார்.

பயன்பாடு:  என் கால்களைப் பலவீனப்படுத்தும் அனேக போராட்டங்களை நான் எதிர்கொள்ளும்போது, கடந்த காலங்களில் தேவன் எனக்கு அளித்த உதவியையும், விடுதலையையும் நினைவுகூர்ந்து, இதுவும் (இப்பிரச்சனையும்) சீக்கிரத்தில் கடந்து போகும்  என எனக்கு நானே நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். நான் நிற்பதற்குத் தடுமாறும் உளையான சேற்றில் இருந்து கர்த்தர் என்னை தூக்கி எடுத்து நிறுத்துகிறார். உறுதியான கன்மலையின் மேல் நிற்கும்படி அவர் என்னைப் பலப்படுத்துகிறார். இயேசுவே அந்தக் கன்மலை. நான் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனையும், தேவனைத் துதித்து புதிய பாடலைப் பாடும் நேரம் ஆகும்.  ஆகவே, கர்த்தர் எனக்கு உதவும்படி நான் அவருக்காக பொறுமையுடன் காத்திருக்கலாம்.

ஜெபம்: என் தேவனே, என் வாழ்க்கையில் நீர் செய்த அனைத்து அதிசயமான கிரியைகளுக்காகவும் உமக்கு நன்றி. இயேசுவே, நான் நிற்கும் கன்மலையாக நீர் இருப்பதற்காக உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே, இன்றும் என்றென்றும் கர்த்தருக்காக பொறுமையாகக் காத்திருக்க எனக்கு உதவியருளும். ஆமென்.   

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 222

No comments: