Sunday, August 15, 2021

பாவத்தின் மீது வெற்றிபெறுவதற்கான மூன்று படிமுறைகள்

வாசிக்க: யோபு 25,26; சங்கீதம் 44; ரோமர் 6

வேத வசனம் ரோமர் 6: 11. அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். 12. ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக.
13. நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.

கவனித்தல்: அனேக கிறிஸ்தவர்கள் தங்கள் அனுதின வாழ்வில் எதிர்கொள்கிற பாவச் சோதனைகள் அல்லது சிந்தனைகளை மேற்கொள்ள/ஜெயிக்க போராடுகிறார்கள். தேவன் நம் பலவீனங்களை அறிந்திருக்கிறபடியினாலும், அவன் மன்னிக்கிறதற்கு கிருபையுள்ளவர் என்பதாலும் நாம் பாவம் செய்வது சரிதான் என்று சில கிறிஸ்தவர்கள் நினைக்கிறார்கள். “கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா?” என்று கேட்டு பவுல் அப்படிப்பட்ட சிந்தனைகளை கேள்விக்குள்ளாக்குகிறார் (ரோமர் 6:1). இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில் ஞானஸ்நானம் மூலமாக தன்னை அடையாளைப்படுத்திக் கொண்ட கிறிஸ்தவர் ஒருவர் இனி பாவத்திற்கு அடிமையாக இருக்க முடியாது என அவர் சொல்கிறார்.  பாவத்திற்கு எதிரான வெற்றிகரமான வாழ்க்கைக்கு மூன்று படிமுறைகளை (steps) பவுல் பரிந்துரைக்கிறார். பாவத்தின் மீது வெற்றி பெறுவதற்கான முதலாவது படி என்னவெனில், நாம் ”பாவத்திற்கு மரித்தவர்களாகவும் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும்” நம்மைப் பற்றி எண்ணிக்கொள்ள வேண்டும். நாம் முதலாவதாக இயேசுவை ஏற்றுக் கொண்டபோது, ”நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று” நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும் (வ.6,11).  இரண்டாவது படி என்னவெனில், பாவமானது நம் சரீரத்தைக் கட்டுப்படுத்த அனுமதிக்காமல் இருப்பது ஆகும். நாம் பாவத்திற்கும் பாவ இச்சைகளுக்கும் எதிர்த்து நிற்கவேண்டும். நம் வாழ்வில் பாவமானது பிரவேசித்து நம்மை ஆளுகை செய்துவிடாதபடிக்கு, நாம் அதற்கு சிறிதும் இடம் கொடுக்கக் கூடாது (எபே.4:27). பாவத்தின் மீதான வெற்றியுள்ள வாழ்க்கைக்கான மூன்றாவது மற்றும் கடைசி படி என்னவெனில், தேவனுக்கு நம்மை ஒப்புக் கொடுப்பது ஆகும். அநீதியின் ஆயுதங்களாக நம் சரீர அவயவங்கள் செயல்பட நாம் அனுமதிக்கக் கூடாது. மாறாக, நம் ஒவ்வொரு அவயவத்தையும் நீதியின் ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும் (வ.13).

ஒரு நபர் எந்தளவிற்கு பாவத்தின் மீது வெற்றியை அனுபவிக்க முடியும் என எவரேனும் கேட்கலாம்.  அது, இந்த மூன்று அடிமுறைகளை அவர் எந்தளவிற்கு தன் வாழ்வில் நடைமுறைப்படுத்துகிறார் என்பதைப் பொறுத்தது ஆகும். “அவர் (இயேசு) மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்” என்று பவுல் நமக்கு நினைவுபடுத்துகிறார் (வ.10).  “அப்படியே” நாமும் பாவத்திற்கு எதிரான ஒரு வெற்றி வாழ்க்கையை வாழமுடியும். நாம் இனி பாவத்திற்கு அடிமைகள் அல்ல. நாம் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்குக் கீழ்ப்படிந்து, கிருபையின் கீழ் வாழ அழைக்கபட்டிருக்கிறோம்.

 பயன்பாடு: நான் பாவத்தின் அடிமை அல்ல. பாவத்தில் இருந்து விடுதலையாக்குகிற இயேசு கிறிஸ்துவினால் நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன். நான் கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுடன் என்னை அடையாளப்படுத்திக் கொள்கிறேன்.  என் சரீர அவயவங்கள் அநீதியின் ஆயுதங்கள் அல்ல, நீதியின் ஆயுதங்கள் ஆகும்.  தேவன் எனக்குத் தந்திருக்கிற இந்த புதிய வாழ்வை நான் மகிழ்ச்சியுடன் வாழ, பாவத்தை ஜெயிக்க கொடுக்கப்பட்டிருக்கிற மூன்று  வேதாகம படிமுறைகளை நான் பின்பற்றி, கிருபையின் கீழ் வாழ வேண்டும். இது நான் இயேசுவை ஏற்றுக் கொள்கிற நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே செய்கிற ஒன்று அல்ல; நான் அனுதினமும் இதைப் பின்பற்ற வேண்டும்.

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, உம் கிருபைக்காக, நீர் தந்த புதுவாழ்விற்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, என் வாழ்வை உம்மிடம் ஒப்புவிக்கிறேன்; என் சரீர அவயவங்களை நீதியின் ஆயுதங்களாக பயன்படுத்தும். இயேசுவே, உம் மகிமைக்காக பரிசுத்தமாக வாழ எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 226

No comments: