Wednesday, August 25, 2021

சிலுவைக்கு பகைஞரைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்

வாசிக்க: பிரசங்கி 3,4; சங்கீதம் 54; ரோமர் 16

வேத வசனம் ரோமர் 16: 17. அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
18. அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.

கவனித்தல்:  ரோமர் நிருபத்தின் கடைசி ஐந்து அதிகாரங்களில், அப்போஸ்தலனாகிய பவுல் நடைமுறை கிறிஸ்தவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதி இருப்பதைக் காணலாம். தன் நிருபத்தை முடிக்கும் முன், நற்செய்திப் பணியில் தனக்கு உதவியாக இருந்த பலரை நினைவுகூர்வதுடன், தவறான உபதேசம் மற்றும் போதகர்களைக் குறித்த எச்சரிப்பை ரோமாபுரியில் உள்ள திருச்சபைக்கு பவுல் எழுதுகிறார். ரோமர் 16:17,18 வசனங்களில் கள்ள போதனைகளை எப்படி கையாளுவது என்பதற்கான நடைமுறை ஆலோசனைகளை பவுல் பகிர்ந்து கொள்கிறார். முதலாவதாக, அப்போஸ்தலருடைய உபதேசத்திற்கு எதிராக பிரசங்கம் செய்கிறவர்களை/போதிக்கிறவர்களை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். தவறான போதனைகள் பெரும்பாலும் தேன் தடவிய வார்த்தைகளால் ஆனதும், வேதாகமத்தின்படியானது என்று நம்மை நம்பச் செய்கிறதுமாக இருக்கிறது. ஆனால், அவை அடிப்படையில் நற்செய்திக்கு எதிரானதாகவும், கிறிஸ்தவர்களிடையே பிரிவினையையும், அவர்களின் வாழ்க்கையில் இடறலையும் உண்டாக்குகிறதாக இருக்கிறது. நாம் அப்படிப்பட்ட தவறான போதனைகளையும், அவற்றை போதிப்பவர்களையும் அடையாளம் கண்டு கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். இரண்டாவதாக, தவறான போதனைக்கு எதிராக நாம் செய்ய வேண்டியதென்னவெனில், நாம் அவைகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது. கள்ளப் போதகர்கள், அவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு உரிய இடம் இன்னதென்று நாம் அவர்களுக்குக் காட்ட வேண்டும். அவர்களுக்குப் பேச வாய்ப்பளிக்கக் கூடாது. ”அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்” என்று பவுல் கூறுகிறார். சில கிறிஸ்தவர்களுக்கு இது கடினமானதாகவும், ஜனங்களை நேசித்தல் பற்றிய கேள்விகளை எழுப்புகிறதாகவும் இருக்கக் கூடும். கள்ளப் போதகர்களை நிராகரிக்க வேண்டியதற்கான காரணத்தை பவுல் விளக்குகிறார். அவர்கள் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்வதில்லை; அவர்கள் சிலுவைக்கு பகைஞராக இருக்கிறார்கள். கள்ளப் போதகங்கள் பொதுவாக கள்ளப் போதகரின் சுயநலக் கருத்தையும் பேராசையையும் பரப்புகிறதாகவே இருக்கிறது. கள்ளப் போதகர்கள் தங்களை விசுவாச வீரர்களாகக் காண்பித்துக் கொண்டு, கிறிஸ்துவின் உண்மையான சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறவர்கள் போல வேஷந்தரித்து ஜனங்களை வஞ்சிக்கிறார்கள். மூன்றாவதாக, அவர்கள் கிறிஸ்துவை மையமாக வைத்து, அவரை மகிமைப்படுத்துகிற ஊழியம் செய்வதில்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தங்களுடைய சொந்த விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதையும், உலகப்பிரகாரமான ஆதாயங்களை அடைவதையுமே குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் கிறிஸ்துவின் சிந்தை இருப்பதில்லை. ஆகவே, கள்ளப் போதகர்கள் கிறிஸ்தவர்களை வஞ்சித்து ஏமாற்றுவது குறித்து கவலைப்படுவதில்லை.

தேவனுடைய சபையானது ஜனங்களை தவறாக வழிநடத்துகிற இப்படிப்பட்ட கள்ளப் போதகர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருந்து, அவர்கள் விசுவாசிகளை வஞ்சிப்பதற்கு/ஏமாற்றுவதற்கு எந்த வாய்ப்பையும் கொடுக்கக் கூடாது. ஒருவரின் போதனையை மதிப்பிடும்போது, நாம் பின்வரும் மூன்று கேள்விகளைக் கேட்க வேண்டும்: அப்போஸ்தலரின் உபதேசத்துடன் ஒத்திருக்கிறதா? கிறிஸ்துவை மகிமைப்படுத்துகிறதா? ஜனங்களை ஏமாற்றுகிறதா அல்லது அவர்களுக்கு பக்திவிருத்தி உண்டாக்குகிறதா?

பயன்பாடு: கள்ளப் போதகர்கள் மற்றும் அவர்களுடைய போதனைகள் குறித்து நான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கிறிஸ்தவர்களிடையே குழப்பத்தையும் பிரிவினையையும் கள்ளப் போதகர்கள் உண்டாக்குவதற்கு நான் அவர்களை அனுமதிக்கக் கூடாது. அவர்களுடைய வஞ்சனையான போதனைகளை நான் கேட்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. என் ஆன்மீக/ஆவிக்குரிய வளர்ச்சிக்கு  அவை பயனற்றவை. நான் கள்ளப் போதகர்களை விட்டு விலகி இருக்க வேண்டும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்வதும், அவரை மகிமைப்படுத்துவதுமே என் நோக்கம் ஆகும்.

ஜெபம்: இயேசுவே, கள்ளப் போதகர்கள் குறித்த எச்சரிக்கைக்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, சுவிசேஷ சத்தியத்திற்காக உறுதியாக நிற்கவும், அன்புடன் சத்தியத்தைப் பேசவும் எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 236

No comments: