Monday, August 2, 2021

தேவனே, உம் நன்மை எவ்வளவு பெரிது!

வாசிக்க: எஸ்தர் 7-10; சங்கீதம் 31; அப்போஸ்தலர் 22:22-30

வேத வசனம்சங்கீதம் 31: 19. உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டுபண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!

கவனித்தல்: ஒருவருடைய வாழ்க்கை பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும்போது, மனிதர்கள் பொதுவாகஅப்படிப்பட்ட நபர்களிடம் இருந்து விலகிச் சென்று, துன்ப சூழ்நிலையில் இருந்து வெளிவர அவர்களுக்கு எவ்வித உதவியையும் செய்ய மாட்டார்கள். ஆனால், ஒருவரின் செல்வமும் பதவியும் அனேக நண்பர்களை கவரக் கூடியதாக இருக்கிறது. தாவீது பல எதிரிகளை, பிரச்சனைகளை, மற்றும் அவதூறுகளை தன் வாழ்நாளில் எதிர்கொண்டார். மேலும், அடிக்கடி நண்பர்களால் கைவிடப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டார். வாழ்க்கையைப் பற்றிய தாவீதின் பயங்கள் நியாயமானவை. ஆயினும், அவர்  தன் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பை தேவன் மீது வைத்தார். தன் வாழ்க்கையை தேவனுடைய கரங்களில் ஒப்புவித்தார். தாவீது தன் பயங்களுக்கு இடம் கொடுக்காமல், தேவனை நோக்கிப் பார்த்த போது, தேவன் அவருக்காக ஆயத்தம் பண்ணி வைத்திருக்கிறவைகளை அவரால் காண முடிந்தது. அவைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது! நமக்குப் பிரச்சனைகள் வரும்போது நாம் கைகளைப் பிசைந்து கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்பது போல தேவன் ஒரு போதும் செய்வதில்லை. அவர் சகலத்தையும் அறிந்திருக்கிற தேவன் ஆவார். மனிதனின் எல்லா பிரச்சனைகளுக்கும் அவரிடம் தீர்வு உண்டு. தனக்குப் பிரியமான பிள்ளைகளுக்காக அவர் ஏற்கனவே எல்லா நன்மைகளையும் உண்டுபண்ணி வைத்திருக்கிறார். ஆகவே, நாம் ஒரு பிரச்சனை அல்லது எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும்போது, நாம் தேவன் மீது நம் கவனத்தை வைக்க முடியும். அவர் நம் பிரச்சனைகள் எல்லாவற்றிற்குமான பதில்களை வைத்திருக்கிறார். நமக்குத் தேவையான நேரத்தில் தேவன் தம் நன்மையை நமக்கு வெளிப்படுத்துகிறார். நம் மீது உள்ள தேவ கிருபையை மற்றவர்கள் புரிந்து கொள்ளும்படி, அவர் தம்முடைய அபரிதமான நன்மையான காரியங்களை நம் மீது பொழிந்தருள்கிறார். ஆயினும், நமக்காக தேவன் உண்டு பண்ணிவைத்திருக்கிற நன்மைகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் தேவன் நமக்கு தருவதில்லை என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். நம் தேவைக்கேற்ப, தேவன் நம் மீது தம் ஆசீர்வாத மழையைப் பெய்யப் பண்ணி, நம் மன அழுத்தங்கள் மற்றும் துயரங்களில் இருந்து நம்மை இரட்சிக்கிறார். ”எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்” (1 கொரி.2:9,10). நாம் தேவனை நம்பும்போது வேறு எதைப் பற்றியும் கவலைப் படத் தேவை இல்லை.

பயன்பாடு: நான் தேவனை நம்பி அவரைத் தஞ்சமடையும்போது, என் பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் மேற்கொள்ளவும் என்னை பலப்படுத்துகிற தேவனுடைய நன்மையைப் பற்றி நான் தைரியமாக இருக்க முடியும். ஒரு மனிதன் என்னை விட்டு விலகிச்சென்று, நான் தேவையற்ற ஒரு நபர் என்று கருதக் கூடும்.  ஆனால், தேவன் ஒருபோதும் அப்படிச் செய்வதில்லை. மாறாக, அவருடைய கிருபையானது என்னை இரட்சித்து, கர்த்தருக்குள் நான் உறுதியாக இருக்க உதவுகிறது.   நான் ஒரு பிரச்சனை அல்லது தேவையை எப்பொழுது சந்தித்தாலும், அந்த சூழ்நிலையைக் கையாள/மேற்கொள்ள, தேவனுடைய ஈவான பங்களிப்பைக் குறித்து நான் திட மனதுடன் இருக்க முடியும்.  அவர் எனக்காக ஏற்கனவே தம் நன்மையை எனக்காக சேர்த்து வைத்திருக்கிறார். என் வாழ்க்கை மற்றும் எதிர்காலம் குறித்து நான் கவலைப்படத் தேவை இல்லை.

ஜெபம்: என் தேவனே, நீர் எவ்வளவு பெரியவர்! உம்மைப் போல வேறு எவரும் இல்லை. ஆண்டவராகிய இயேசுவே, உதவி மற்றும் ஞானத்திற்காக நான் உம்மை நோக்கிப் பார்க்க எனக்கு உதவும். பரிசுத்த ஆவியானவரே, தேவன் எனக்காக ஆயத்தம் பண்ணி வைத்திருக்கிறவைகளைக் காண என் கண்களைத் திறந்தருளும். மேலும், கர்த்தருக்குள் திட மனதுடன் இருக்க எனக்கு உதவியருளும். ஆமென்  

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 213

No comments: