Tuesday, August 3, 2021

தேவன் பாராட்டுகிற மனிதன்

வாசிக்க: யோபு 1,2; சங்கீதம் 32; அப்போஸ்தலர் 23:1-22

வேத வசனம்யோபு 1: 8. கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.
9. அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்?

கவனித்தல்: பழைய ஏற்பாட்டிலேயே மிகவும் பழைமையானது மற்றும் முதலாவது எழுதப்பட்டது யோபு புத்தகம் ஆகும். யோபு புத்தகத்தை எழுதியது யார் என்பது குறித்த விவரங்கள் இல்லை எனினும், இப்புத்தகம் ஆபிரகாமின் காலம் அல்லது அதற்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்தது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். யோபுவின் வாழ்க்கையில் சடுதியாய் நிகழ்ந்த கொடிய சம்பவங்களின் நிமித்தம் அனேக கிறிஸ்தவர்கள் யோபு புத்தகத்தை வாசிக்கப் பயப்படுவதுடன் வாசிக்கத் தயங்கவும் செய்கின்றனர் (பல பிரச்சனைகள் குறித்த வேத ஞானத்தைப் புரிந்து கொள்ள யோபுவின் புத்தகத்தை  வாசிக்கும்படி உங்களை நான் உற்சாகப்படுத்துகிறேன்). எல்லா மனிதர்களும் வாழ விரும்புகிற ஒரு முன்னுதாரணமான தேவ பக்தியுள்ள வாழ்க்கையை யோபு வாழ்ந்தாலும் கூட, அவனுடைய வாழ்வில் தீமையை உண்டாக்க சாத்தானுக்கு தேவன்  ஏன் அனுமதி கொடுத்தார் என்பது அனேகர் (மனதில்) கேட்கும் கேள்வி ஆகும். யோபு 1:8 ல், யோபுவை தேவன் எப்படி பாராட்டுகிறார், உயர்த்தி பேசுகிறார் என்பதை நாம் காண்கிறோம். ஆயினும், தேவனுக்கு முன்பாக இரவும் பகலும் தேவ ஜனங்களைப் பற்றி குற்றம் சாட்டுகிற சாத்தான் யோபுவைப் பற்றி குறை சொன்னான். சுயநல நோக்கத்திற்காகவே யோபு தேவனுக்குப் பயந்து வாழ்கிறான் என்ற குற்றச் சாட்டை அவன் தேவன் முன் வைத்தான். தேவனுக்கு எதிராக பாவம் செய்யும்படி ஜனங்களை சாத்தான் கவர்ந்திருக்கிறான் அல்லது தேவன் மீது அவர்கள் கொண்டிருக்கும் விசுவாசம் சுயநல நோக்குடையது என்று சொல்லி தேவ ஜனங்களை குற்றப்படுத்துகிறான். ஆயினும், யோபு தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் இழந்த பின்னரும் கூட, தேவன் மீது வைத்திருந்த அவன் விசுவாசம் அசைக்கப்பட வில்லை. சந்தேகத்தை உண்டாக்குகிற சாத்தானின் குற்றச்சாட்டு தவறு என்பதையும் யோபுவின் நீதி உண்மையானது என்பதையும் இது நிரூபிக்கிறது.

மிகவும் மோசமான காரியங்கள் நம் வாழ்வில் எதிர்கொள்ள நேரிட்டாலும் கூட, நாம் தேவனை நம்ப முடியும் என்பதை யோபுவின் வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது. நம் எல்லாருடைய வாழ்விலும் அப்படிப் பட்ட பேரழிவுகள் நடைபெறும் என்பது இதன் அர்த்தம் அல்ல. மாறாக, அனைத்தும், சாத்தானும் கூட தேவனுடைய கட்டுப்பாட்டின் கீழேயே இருக்கின்றன என்பதை இது நினைவுபடுத்துகிறது. நம் வாழ்வில் வேதனையான காரியங்களை தேவன் ஏன் அனுமதித்தார் எனபதை நாம் உடனடியாக அறிந்து கொள்ளாமல் இருக்கலாம். அப்படிப்பட்ட கடினமான தருணங்களை விட்டு வெளியே வரும்போது, நாம் தேவனுடைய நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்வோம். தன் விசுவாசத்தை விட்டு விலகி, தேவனை சபிக்கும்படியான தூண்டுதலைப் பெற்ற போதும் கூட, ”யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.” ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, தேவன் மீதான தன் விசுவாசத்தில் வழுவாது உறுதியாக யோபுவால் இருக்க முடிந்தது என்றால், நாம் எவ்வளவு அதிகமாக தேவனுக்கென்று உறுதியாக இருக்க வேண்டும். பவுல் சொல்வது போல, ”இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல” (ரோமர் 8:18). யோபுவின் பாடுகளின் போது எந்த மனிதனும் அவருக்கு உதவ வில்லை. ஆனால் நமக்கோ, நம் பாடுகள் மற்றும் சோதனைகளில் நமக்கு உதவி செய்ய வல்லவராக இருக்கிற இயேசு உண்டு (எபி.2:18). தேவனுடைய வேளையில், நம் வாழ்க்கை மூலமாக தேவ ஞானம் வெளிப்படும்.

பயன்பாடு: சுயநல காரணங்களுக்காக அல்லது உலகப் பிரகாரமான ஆசீர்வாதங்களுக்காக மட்டும் நான் தேவனைத் தேடக் கூடாது. மாறாக, தேவனுடனான என் உறவு அன்பின் அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டும். அவர் என்னை முந்தி அன்பு கூர்ந்ததால் நான் அவரை நேசிக்கிறேன் (1 யோவான் 4:19). எனக்கு என்ன நடந்தாலும், தேவன் மீதான என் விசுவாசம் மற்றும் நம்பிக்கையை மறுதலிக்க மாட்டேன். விசுவாசத்தில் உறுதியாய் இருந்து நான் பிசாசுக்கு எதிர்த்து நிற்பேன் (1 பேதுரு 5:9). ”சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்” (யாக்கோபு 1:12). தேவனை நேசிக்கிறவர்களுக்கு உள்ள மிகப் பெரிய ஆசீர்வாதம் என்னவெனில், அது தேவன் தாம்.

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, அனைத்தும் உம் கட்டுப்பாட்டில் இருப்பதற்காக நான் உம்மை துதிக்கிறேன். உம் அனுமதி இல்லாமல், சாத்தான் என்னைத் தொட முடியாது. ஆண்டவராகிய இயேசுவே, உபத்திரவங்கள் மற்றும் சோதனைகளைச் சந்திக்கும்போது, நான் விசுவாசத்தில் உறுதியாக நிலைத்து நிற்க உம் பலத்தை எனக்குத் தந்தருளும். பிசாசின் தீய திட்டங்களுக்கு எதிர்த்து நிற்கவும், ஆவியின் பட்டயத்தை சரியாகப் பயன்படுத்தவும் எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 214

No comments: